

காலநிலை நெருக்கடி நம் காலத்தின் மிக முக்கிய சவால்களில் ஒன்று. எனவே, இதன் தாக்கங்கள் அதிகரிப்பதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது பற்றிய ஆழமான விவாதம் அவசியமாகிறது. மனிதச் செயல்பாடுகள் ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதப்படும் இந்தக் காலக்கட்டத்துக்கு நிலவியல் (Geological) அடிப்படையில் ‘மனித ஆதிக்க யுகம்’ (Anthropocene) என்கிற பெயரை அறிவியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர். சுமார் 12,000 ஆண்டுகளாக நிலவி வந்த ‘ஹோலசீன்’ (Holocene) என்கிற வெப்பநிலை யுகத்தைக் கடந்து, மனித குலம் அடுத்த யுகத்தில் அடியெடுத்து வைப்பதை இது உணர்த்துகிறது.
அறிவியலர்களின் கூற்றுப்படி மனித ஆதிக்க யுகம் என்ற வரையறை பெரும்பாலும் புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டால் ஏற்படும் அதிகக் கரிம உமிழ்வை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது. ‘மனித ஆதிக்க யுகம்’ என்கிற சொல், நிலவியல் காலக்கட்டத்தைக் குறிக்கும் வகையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், இந்தச் சொல் சுற்றுச்சூழல் சீரழிவைத் தூண்டும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்புகளைப் பொறுப்புக்கு உள்ளாக்குவதைத் தவிர்க்கிறது எனப் பல அறிஞர்கள் வாதிடுகின்றனர்.