

2013ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தேசிய சுகாதாரத் திட்டத்தின் (National Health Mission) பெயரை ‘பிரதம மந்திரி சம்ங்கர சுவஸ்தயா மிஷன்’ என்று மாற்றுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அனைத்து மாநில மக்கள் இந்தப் பெயரை அழைப்பதில் சிக்கல்கள் இருப்பதாக எதிர்ப்பு அதிகரித்துவருகிறது. எனினும், பெயர் மாற்றத்தையெல்லாம் தாண்டி இதில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகளின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.
குறைவான ஊதியம்: மாநில அளவில் செயல்படுத்தப்படும் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 573 பிசியோதெரபிஸ்ட்கள் (இயன்முறை மருத்துவர்கள்) பணிபுரிந்துவருகின்றனர். மேலும் மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், ஆய்வகத் தொழில்நுட்பர் (lab technicians) என ஆயிரக்கணக்கானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.