

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடி நெல் கொள்முதலைச் செய்துவரும் நிலையில், அதைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவுக்கு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதன் மூலம், விவசாயிகளுக்கான கொள்முதல் உத்தரவாதத்தையும் கைவிட்டுள்ளது. இதன் பாதிப்புகள் குறித்து உடனடியாகப் பேச வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
தமிழகத்தின் சாதனை: இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தை முதன்முதலில் தமிழ் நாடு அரசுதான் அறிமுகப்படுத்தியது. மக்களுக்குத் தரமான உணவு வழங்க வேண்டும் என்கிற அடிப்படை நோக்கத்துடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்கிற பொதுத் துறை நிறுவனத்தை 1972இல் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி தொடங்கிவைத்தார். அதற்கான உணவுப் பொருள்களைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்குக் குறைந்த விலையில் தரமான பொருள்கள் வழங்க வேண்டும் என்கிற கொள்கை வகுக்கப்பட்டது.