

பிரம்ம கான சபாவின் ஏற்பாட்டில் பி.எஸ். தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் 17ஆவது ஆண்டாக ‘நல்லி நாகஸ்வர தவிலிசை விழா’ ஜனவரி 26 தொடங்கி பிப்ரவரி 4 வரை வெகு விமரிசையாக நடந்தது. விழாவின் நிகழ்ச்சிகளில் பல சிறப்பு அம்சங்கள் நடந்தேறின.
புல்லாங்குழல், நாகஸ்வரம், தவில், கடம் ஆகிய வாத்தியங்களைக் கொண்டு அமைந்த ஒரு அரிதான கச்சேரியும் அரங்கேறியது. மயிலிறகின் வருடலைப் போன்ற ஜெயந்தின் புல்லாங்குழலின் மென்மையும், 'பழைய சீவரம் காளிதாசின் (அசுர வாத்தியமாக அறியப்படும்) நாகஸ்வரமும் ஒன்றுக்கொன்று அனுசரனையுடன் நாதசங்கமமாகின. இதற்கு ஒத்திசைவாக மன்னார்குடி வாசுதேவனின் தவிலும் டாக்டர் கார்த்திக்கின் கடமும் தாளத்தில் சங்கமித்தன.
புல்லாங்குழல், மிருதங்கத்துடன் இணைந்து நாகஸ்வரமும், மீட்டெடுக்கப்பட்ட வார் தவிலிலும், தவிலும், மிருதங்கமும் இணைந்து லய வின்யாச நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நாகஸ்வர வித்வான்கள் சின்னமனூர் விஜய் கார்த்திகேயன், இடும்பாவனம் பிரகாஷ் இளையராஜா இருவரும், ‘அரிதான ராகங்களும் அறியப்படாத கீர்த்தனைகளும்’ என்னும் தலைப்பில் வாசித்ததைக் கேட்டவர்களின் ரசிகானுபவம் அடுத்த ஆண்டு இசை விழா வரைக்கும்கூட ஒலித்துக் கொண்டே இருக்கும்.
வளரும் இசைக்கலைஞர்களுக்கு நாகஸ்வர தவிலிசைக் கருவிகளும் வழங்கப்பட்டன. தவில் மேதை திருநாகேஸ்வரம் டி.ஆர். சுப்பிரமணியம் நினைவாக தவிலிசைக் கலைஞர்கள் பந்தநல்லூர் சுபாஷ், மேட்டுப்பாளையம் ரவிக்குமார் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. வேலூர் குப்புஸ்வாமிக்கு சிறந்த தாள இசைக் கலைஞருக்கான விருது வழங்கப்பட்டது.
இன்னொரு சிறப்பம்சம், இந்த இசை விழாவில் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாட்டிலிருந்தும் இசைக் கலைஞர்கள். கலந்துகொண்டதுதான்!