

உலகம் முழுவதையும் கிழக்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சீனாவின் ‘டீப்சீக்’ செயலி. அதோடு, செயற்கை நுண்ணறிவுத் துறையின் (ஏஐ) எதிர்காலம் தொடர்பான விவாதத்தில் சீனாவை மையத்துக்குக் கொண்டுவந்துள்ளது. டீப்சீக் ஏற்படுத்திய அதிர்வலைகள் பல மட்டத்தில் தொடர்கின்றன. கூடவே, பலவிதமான கேள்விகளும் தொடரவே செய்கின்றன!
அறிமுகமான வேகத்தில் டீப்சீக் பெற்றுள்ள வெற்றி, ஏஐ துறையில், குறிப்பாக ஏஐ திறன் கொண்ட சாட்பாட்கள் பிரிவில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சரியான போட்டியாகவும் அதிர்ச்சி வைத்தியமாகவும் பேசப்படுகிறது.