நடிகர் விஜய்யின் புதிய முயற்சி - தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமன அணுகுமுறை

நடிகர் விஜய்யின் புதிய முயற்சி - தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமன அணுகுமுறை
Updated on
2 min read

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு படிப்படியாக தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளையும் உள்ளடக்கி, 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற வகையில் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ப இதுவரை 19 மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ளார்.

வழக்கமான அரசியல் கட்சிகளைப்போல் இல்லாமல் மாற்றுத்திறனாளி ஒருவரையும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் மாவட்டச் செயலாளர்களாக நியமித்திருப்பது அவரது புதுமையான சிந்தனையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது. அவரது முயற்சிக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. அப்புனு என்ற மாற்றுத்திறனாளியை தென்சென்னை மாவட்டச் செயலாளராகவும், பாபு என்ற ஆட்டோ ஓட்டுநரை கோவை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் விஜய் நியமித்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தமிழகத்தில் பொதுவாக பிரதான அரசியல் கட்சிகளில் பணபலம் மற்றும் ஜாதி பலம் உள்ளவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கும் நடைமுறையே இருந்துவரும் நிலையில், சாதாரண மக்களாக உள்ளவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமித்திருப்பது புதிய முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

இதன்மூலம், எளிய மக்களிடம் தங்களுக்கும் விஜய் தொடங்கியுள்ள தவெக-வில் பொறுப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார். இது ஒருபுறம் ஓட்டுகளை அந்தக் கட்சியின் பக்கம் இழுக்கும் என்றாலும், அரசியல் கட்சியை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் அவர் சந்திக்க வேண்டியது வரும். பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றை நடத்தும்போது, அதற்கு லட்சக்

கணக்கில் பணம் செலவழிக்கும் நிலையே மற்ற கட்சிகளில் உள்ள நடைமுறை. அதற்கு தயாராக உள்ள பணபலம் மிக்கவர்களே முக்கிய கட்சிகளில் பொறுப்பில் இருக்கிறார்கள். மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளவர்கள் மாவட்டச் செயலாளர்களாக செயல்படுவதால், கட்சியில் உள்ள இதர தலைவர்கள் அவர்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.

எளியவர்கள் பொறுப்பில் இருக்கும்போது, அவர்களை செல்வாக்கு மிக்கவர்கள் ஏளனம் செய்யும் நிலையே இருக்கும். பெரிய பொதுக்கூட்டம், போராட்டம் என்று வரும்போது எளிய மக்கள் பொருளாதார ரீதியாக திணறுவார்கள். இதுவரை 19 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே தவெக-வில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்குள் சாதி, பணபலம் பார்த்து நியமிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பதவி கிடைக்காதவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்வது வாடிக்கை என்றாலும், மாறுபட்ட கட்சியாக காட்டிக் கொள்ள விரும்பும் விஜய், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. அதற்கு பதில் சொல்லும் வகையில் எளிய மக்களுக்கு பதவி வழங்கியிருப்பதாகவே கருதப்படுகிறது.

இதர கட்சிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது என்ன சாதியைச் சேர்ந்தவர்கள் நீங்கள்? தேர்தலில் எத்தனை கோடி பணம் செலவழிக்க முடியும்? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி அதனடிப்படையில் போட்டியிட வாய்ப்பளித்து வரும் நிலையில், பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் ஆட்டோ ஓட்டுநர், மாற்றுத்திறனாளி என எளிய பின்புலம் கொண்டவர்களை பதவியில் அமர்த்தும் நடிகர் விஜய்யின் புதிய முயற்சி பாராட்டுக்குரியதே!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in