

2024 மக்களவைத் தேர்தலின்போது டெல்லிவாசி ஒருவர் ஒரு விபத்தில் சிக்கி கோமாவில் விழுந்து - கடந்த சில நாள்களுக்கு முன்புதான் கண் விழித்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மனிதர் கடுமையான மனக் குழப்பத்துக்கு ஆளாவது நிச்சயம். பாஜகவுக்கும், காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகித்த இண்டியா கூட்டணிக்கும் இடையிலான கடும் போட்டியைக் கண்ணுற்றவர், தற்போது டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மூன்று கட்சிகளும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வதைப் பார்த்தால் தலையே சுற்றிவிடும். தலைநகர் தேர்தல் களத்தின் மும்முனைப் போட்டி அந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறது.
இதுவரையிலான நிலவரம்: 2014, 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் பாஜகவுக்கே ஏகோபித்த வெற்றிவாய்ப்பை அளித்த டெல்லி மக்கள், சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மிக்கே ஆதரவளித்தனர். 2015 சட்டமன்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி, 2020 தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. அந்தத் தேர்தலில் 8 இடங்கள் பாஜகவுக்குக் கிடைத்தன.