

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் நடந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர்; 60 பேர் பலத்த காயமடைந்தனர். ஆன்மிக நிகழ்வுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பது தெரிந்திருந்தும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய உத்தரப் பிரதேச அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. கும்பமேளா விபத்து குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொடரும் உயிரிழப்புகள்: உலகம் முழுவதும் ஆன்மிகம், இசை, விளையாட்டு போன்ற நிகழ்வுகளில் ஏற்படும் கூட்ட நெரிசல்களால் உயிரிழப்புகள் நேரிட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. 1896இல் மாஸ்கோவில் இரண்டாம் ஜார் நிக்கோலஸின் முடிசூட்டு விழாவில் 1,389 பேர் உயிரிழந்தனர்.