இந்தியா, அமெரிக்கா, சீனா: முழக்கம் ஒன்று, பாதை மூன்று
டிரம்ப் அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட மூன்றாம் நாள் பன்னாட்டுத் தொழிலதிபர்களின் மாநாட்டில் பேசினார். அவர்களிடம் ஓர் அறைகூவல் விடுத்தார் - ‘அமெரிக்காவில் தயாரிப்பீர்’ (Make in America). அந்தத் தொழிலதிபர்களின் ஆலைகள் சீனாவிலும் வேறு பல நாடுகளிலும் உள்ளன. அங்கு உருவாகும் பொருள்கள் அமெரிக்காவில் விற்பனையாகின்றன. இது அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கிறது என்கிறார் டிரம்ப். இதனால் தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமெரிக்காவில் நிறுவ வேண்டும்; அவர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
மாறாக, அவர்கள் வெளிநாடுகளிலேயே தொடர்ந்து உற்பத்தி செய்தால், அது அவர்கள் விருப்பம். ஆனால், அந்தப் பொருள்கள் அமெரிக்கத் துறைமுகங்கள் வழியே உள்ளே வரும்போது கடுமையான தீர்வைகள் விதிக்கப்படும். டிரம்ப்பின் அறைகூவலுக்கு இணங்கி, அந்தத் தொழிலதிபர்கள் தங்கள் தொழிற்சாலைகளை இடம் மாற்றுவார்களா?
