

ராவணன், சீதையை சிறையெடுத்துப்போய் தனது நகரத்தில் வைத்திருந்தான். அந்தச் சீதையுடன் ராமன் வாழ்க்கை நடத்துவது இழிவானதாகும் என்று மக்கள் பேசுவதாக ஒற்றர்கள் ராமனிடம் கூறுகின்றனர். ராமன் மிகுந்த மனவேதனை அடைகிறார். சீதை, தீயினுள் மூழ்கித் தன் கற்பை நிரூபித்தாள். என் மனத்துக்கும் தூய்மை உடையவளாகவே விளங்குகிறாள். ஆனாலும் உலகத்தார் சீதையைப் பழித்துரைக்கின்றனர். உலகத்தாரோடு இணங்கி நடப்பதே அரசனின் கடமை.எனவே, சீதையைக் காட்டிலுள்ள முனிவர்களின் இருப்பிடத்தில் விட்டுவர இலட்சுமணனைப் பணிக்கிறார் ராமன். சீதையைக் காட்டில்விட ராமன் உள்ளிட்ட யாருக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் ஊராரின் பழிக்கு அஞ்சியே ராமன் இதனைச் செய்யத் துணிகிறார். இந்த இடத்தில் ராமன் ஓர் அரசனாகவே இந்த முடிவை எடுக்கிறார். அசோகமித்திரன் இந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு ‘உத்தர ராமாயணம்’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார்.
இக்கதையில் தொன்மத்தை அவர் நேரடியாகப் பயன்படுத்தவில்லை. ஆனால் இக்கதையின் மையம் உத்தர காண்டத்தின் நவீன வடிவமாக இருக்கிறது. அசோகமித்திரன் வாழ்க்கையில் நிழலைப்போலப் பின்தொடரும் கசப்புகளை மெல்லிய பகடியாக மாற்றிப் புனைவுகளாக எழுதியவர். இவரது புனைவுகள் நவீனத்துவத்தின் அடையாளங்கள். அவரது சிறுவயது அனுபவமாகவே இக்கதை எழுதப்பட்டுள்ளது.
ராம்லால், சோட்டு இருவரும் சகோதரர்கள். அம்மாவுடன் வசிக்கிறார்கள். ராம்லாலின் மனைவி ஜானகிபாய். சகோதரர்கள் இருவரும் பால் வியாபாரம் செய்கின்றனர்.