

சிந்துவெளி நகர நாகரிகத்தின் தொன்மை 5,300 ஆண்டுகள் பழமையானது என்று நூறாண்டுகளுக்கு முன்பே நிரூபிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சிவகளை அகழாய்வில் வெளிப்பட்ட ஒரு தாழி, அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கரிமம் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்ததில் அதன் தொன்மை 5,300 ஆண்டுகள் பழமையானது என்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தற்செயலானதல்ல.
தொல்லியல் புதையல்: ‘தமிழர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களுக்குத் தங்கள் பண்பாடு, தொன்மை குறித்த அதீத மனப்பான்மை நிலவுகிறது. அதனால் தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன்பே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று கற்பனையாகப் புனைந்துகொள்கிறார்கள்’ என்ற கேலிப் பேச்சுதான் சற்று அதீதமும் ஒவ்வாமையும் கொண்டது என்பதையும் இந்தக் கண்டறிதல் அம்பலப்படுத்தியுள்ளது.