மாத சம்பளம் வாங்குவோரின் பட்ஜெட் எதிர்பார்ப்பு

மாத சம்பளம் வாங்குவோரின் பட்ஜெட் எதிர்பார்ப்பு
Updated on
2 min read

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கவுள்ளது. இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் 6 முறை தொடர்ந்து மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ததே சாதனையாக இருந்தது.

மத்திய பட்ஜெட்டுக்கான ஏற்பாடுகளை நிதியமைச்சகம் கடந்த ஒரு மாத காலமாக ரகசியமாக மேற்கொண்டு வரும் நிலையில், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் பல்வேறு துறையினர் மத்தியில் உருவாகியுள்ளது. கல்வி, விவசாயம், தொழில்துறை, சுகாதாரம் என ஒவ்வொரு துறையினரும் தங்கள் எதிர்பார்ப்புகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.

கல்விக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதம் தற்போது செலவிடப்படுகிறது. இதை 6 சதவீதமாக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சுகாதாரம், விவசாயம், தொழில் துறையினருக்கு சலுகைகள் வழங்கி உற்பத்தியை அதிகரிக்க உதவ வேண்டும் என்று அந்த துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத வகையில் தொடர்ந்து 4 மாதங்களாக பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருவதால் பங்குச்சந்தை வர்த்தகத்துக்கு ஏதாவது சலுகைகள் அறிவிக்க வேண்டும் என்று பங்கு முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். நுகர்வோரின் செலவழிக்கும் சக்தியை அதிகரித்தால் மட்டுமே நுகர்வு அதிகரித்து. நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று நுகர்பொருள் நிறுவனத்தினர் குரல் கொடுத்து வருகின்றன.

இதற்கு மத்தியில் மாத சம்பளதாரர்கள் தங்கள் பங்குக்கு வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பெருநிறுவனங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட சம்பளதாரர்களுக்கு கிடைப்பதில்லை என்பது அவர்களது கவலையாக உள்ளது. பெருநிறுவனங்கள் தாங்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியை ‘இன்புட் டாக்ஸ் கிரெடிட்’ மூலம் திரும்ப பெற முடியும். ஆனால், சம்பளதாரர்கள் தங்களது வருமானத்துக்கும் வரி செலுத்தி, அந்த தொகையை செலவழிக்கும் இடத்திலும் ஜிஎஸ்டி வரி செலுத்தி இரட்டை வரி விதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பெருநிறுவனங்களைப் போல் ஜிஎஸ்டி வரியை திரும்ப பெறும் வசதி சம்பளம் வாங்குவோருக்கு இல்லை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 43 சதவீதம் பேர் வரி செலுத்துகின்றனர். ஆனால், இந்தியாவில் 2 சதவீதம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர். அதில் பெரும்பகுதி மாத சம்பளம் வாங்குவோரே உள்ளனர். பழைய வரிவிதிப்பு முறையை நீக்கிவிட்டு, வரிவிலக்கு வரம்பை ரூ.10 லட்சமாக மாற்றப் போவதாக தகவல்கள் பரவிவரும் நிலையில், மாத சம்பளதாரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நடுத்தர சம்பளம் வாங்குவோருக்கு சலுகைகள் வழங்கினால் மட்டுமே அவர்களது வாங்கும் சக்தி அதிகரித்து நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்; மத்திய அரசின் இலக்கும் நிறைவேறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in