

“ஏஐ பிறந்த கதையே ஓர் அறிவியல் புனைகதைப் படத்தின் காட்சிகளைப் போலத்தான் இருக்கிறது. போர், ராணுவத் தலைமையகங்கள். ரகசியத் தகவல்கள் என்று விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், 1956இல் பிறந்த ஒரு தொழில்நுட்பம், ஒரு புரட்சியாக, யுகமாக மாறுவதற்கு 70 ஆண்டுகளுக்கு மேல் ஆனது ஏன்? டார்ட்மவுத் கருத்தரங்குக்குப் பிறகு ஏன் அவ்வளவு தாமதம்? கணிப்பொறி யுகம் தொடங்கிய பிறகும்கூடச் செயற்கை நுண்ணறிவு யுகம் தொடங்குவதற்கு முக்கால் நூற்றாண்டுக் காலம் காத்திருக்க வேண்டியிருந்ததே, என்ன காரணம்?” - என்று செய்மெய்யிடம் கேள்வி எழுப்பினேன்.
வழக்கம்போல செய்மெய் பொறுமையிழந்தது. “ஒரு காலத்தில் ஒவ்வொரு தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் இடையில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இடைவெளி இருந்தது. மாட்டுவண்டிக்கும் காருக்கும் இடையில் எவ்வளவு காலம் இடைவெளி இருந்தது! ஆனால், கணிப்பொறி யுகத்துக்கும் செய்யறிவு யுகத்துக்கும் இடையில் ஒரு நூற்றாண்டுக் கால இடைவெளிகூட இல்லை.