

மொழிபெயர்ப்பென்னும் சிரமமான காரியத்தைச் சந்தோஷமாக மேற்கொண்டு உலக இலக்கியத்தைத் தமிழில் கொண்டுவந்து சேர்த்த எழுத்தாளர் க.நா.சுப்ரமண்யம். அவரது ஆக்கங்கள் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கான விடையைத் தேடும்போது முதலில் நமக்குக் கிடைப்பது ‘A Movement for Literature’. 1986ஆம் ஆண்டு அவருக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுத் தந்த ‘இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்’ என்ற நூலை வெங்கட் சாமிநாதன் மொழிபெயர்த்திருக்கிறார். சாகித்ய அகாடமியே இந்நூலை 1998ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
புதுக்கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் எனப் புனைவிலக்கிய வகைமைகளில் தொடர்ந்து பங்களித்தவர் க.நா.சு. ‘மயன் கவிதைகள்’ என்கிற தன்னுடைய புதுக்கவிதை நூலுக்காக ‘குமாரன் ஆசான் விருது’ பெற்ற அவரது கவிதைகள் ஆர்.பார்த்தசாரதி, நகுலன் போன்றவர்களால் ஆங்கிலத்தில் வெகுகாலத்திற்கு முன்பு மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. ஆனால், அவை பலரின் கவனத்திற்கு வராமலேயே போய்விட்டன.