

திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் கோட்டோவியங்களை தொகுத்துப் பார்க்கும்போது, அவர் அடைந்திருக்கும் பரிணாமம் மெச்சத்தக்கது. அவரது பழைய ஓவியங்களில் வெளிப்பட்ட முக வார்ப்புகள், ஓவியர் புகழேந்தி வரைந்த மனிதர்களின் முகங்களை நினைவுக்குக் கொண்டு வந்தன. ஆனால், விளிம்பு நிலை வாழ்வு வாய்த்தவர்களுக்கும், விளிம்பு நிலை அழகியலைக் கைக்கொள்ளும் கலைஞர்களுக்கும் இவை பொதுவான தன்மைகளே என்ற முடிவை பின்னர் அடைந்தேன்.
மேலும், ஒவ்வொரு ஓவியரின் கோடுகளுக்கும், அவர்களது வண்ணங்களுக்கும் உள்ள தனித்துவம் என்னென்ன என்பதை நோக்கிய கேள்விகளை எனக்குள்ளே கேட்டுக்கொள்ளத் தொடங்கினேன். அந்த வகையில், ஆர்கிலிக் ஓவியங்கள், சுவரோவியங்கள், சாக்பீஸ் ஓவியங்கள், முக வார்ப்புகள் (Portraits) எனப் பல வகைமைகளில் தடம் பதித்து வரும் தமிழ்ப்பித்தன் ஓர் ஆளுமையாக உருக்கொள்வது அவரது கோட்டோவியங்களிலும், அதை ஊடகமாகக் கொண்ட நிகரோவியங்களிலும்தான்(Illustrations).