

முல்லை பெரியாறு அணைப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பொறுப்பை உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவிடம் ஒப்படைப்பதா அல்லது அணைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள குழுவிடம் ஒப்படைப்பதா என்பது பற்றி ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு தமிழ்நாடு, கேரள மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளத் தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவரும் நிலையில், இந்த விவகாரத்தில் உறுதியான முடிவை எட்ட வேண்டியது அவசியமாகிறது.
முல்லை பெரியாறு அணையைப் பலப்படுத்தவும் பராமரிக்கவும் மரங்களை வெட்டத் தமிழ்நாடு அரசை அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில்தான் மேற்கண்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கில் முல்லை பெரியாற்றில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதைத் தடுப்பதே கேரளத்தின் நோக்கமாக இருப்பதாகத் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.