

தமிழகத்தில் 2023-24இல் மகப்பேறு மரணங்கள், முந்தைய ஆண்டைவிட 17% குறைந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், பெரும் துயரத்தின் தீவிரம் தணிகிறது என்கிற நிம்மதியை அளிக்கிறது. மகப்பேறு என்பது ஒரு பெண்ணுக்கு இரண்டாவது பிறப்பு எனக் கருதப்படுகிறது. குழந்தை உயிருடன் பிறக்கும் ஒரு லட்சம் மகப்பேறுகளில் 398 தாய்கள் உயிரிழக்கும் அளவுக்கு 1997-1998இல் இந்திய அளவில் நிலை இருந்தது. இது 2020இல் 99 பேர் எனக் குறைந்தது. தமிழகத்தில், கடந்த 20 ஆண்டு காலத் தரவுகளின்படி, பிரசவிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 134 பேர் இறப்பதாகவே 2001இல் நிலைமை இருந்தது.
இது 2018-2020இல் 54 பேர் எனக் குறைந்தது. 2023-2024இல் இந்த எண்ணிக்கை 45.5 பேர் ஆகக் குறைந்தது. மேற்கண்ட நிலையிலிருந்து 10க்கும் குறைவானோர் என்கிற நிலையை அடுத்த 2 ஆண்டுகளில் எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு 2024 அக்டோபரில் அறி வித்தார். அதற்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டு, மாநில அளவில் அவர் தலைமையில் ஒரு செயலாக்கக் குழுவும் மாவட்ட அளவில் அந்தந்த ஆட்சியர் தலைமையிலான செயலாக்கக் குழுக்களும் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.