

தமிழர்கள் யார் என்கிற அறிமுகச் சித்திரத்தைத் தரும் நூல் The Tamils: A Portrait of a Community. ‘தி இந்து’ குழுமத்தின் தலைவர் நிர்மலா லக் ஷ்மண் எழுதியிருக்கிறார். ஆங்கிலம் வழியாகத் தமிழ் சமூகத்தை அறிமுகப்படுத்தும் இந்த நூல் மிகவும் நுணுக்கமான விவரணைகளுடன் தமிழர்கள் குறித்த ஓர் ஆழமான பார்வையை நம் முன் வைக்கிறது. வெகுமக்கள் படிப்பதற்கான புத்தகமாக உருவாக்கப்பட்டிருக்கும் அதேநேரம், தகவல் வெள்ளம் பாயும் இந்தக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தை வரையறுக்கும் அடிப்படை அம்சங்களை மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்து, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநயமிக்க நகைபோல் இந்த நூல் படைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் மேதமை, பங்களிப்பு, பார்வை குறித்து உலகம் மதிக்கும் பல அறிஞர்கள் பேசியும் எழுதியும் இருந்தாலும் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்தியா குறித்து முன்னிறுத்தப்படும் விஷயங்களில் தமிழ், தமிழர்களுக்கு உரிய மதிப்பும் இடமும் எல்லா நேரமும் வழங்கப்படுவதில்லை. தேய்வழக்காகச் சில அடையாளங்களே திரும்பத் திரும்ப முன்னிறுத்தப்படுகின்றன. அந்த அம்சங்களைக் களையும் வகையில் யார் தமிழர், அவர்களின் தனித்துவம்என்ன, பெருமிதங்கள் எவை, மானுடத்துக்குத் தமிழர்களின் பங்களிப்பு என்ன என்பதுடன் இங்கே தங்கிவிட்ட சில பிற்போக்குத்தனங்களையும் ஆதாரங்கள், ஆய்வுபூர்வக் கருத்துகள் அடிப்படையில் இந்தப் புத்தகம் நிறுவுகிறது.