

சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி மூன்றாவது ஆண்டாக நடைபெற்றுவருகிறது. டெல்லியிலும் கொல்கத்தாவிலும் பன்னாட்டுப் புத்தகக் காட்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்தாலும், மொழிபெயர்ப்பு உரிமைகள் சார்ந்து வழிகாட்டுவது அந்த நிகழ்வுகளின் ஒரு பகுதி மட்டும்தான். மாறாக, சென்னையில் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வு, மொழிபெயர்ப்பையும் அதற்கான உரிமைகளைப் பெறுவதையும் முதன்மையான இலக்காகக் கொண்டு நடத்தப்படுகிறது. அந்த வகையில், தமிழக அரசால் நடத்தப்படும் சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி இந்திய அளவில் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்க முயற்சி. தமிழ் நூல்களை உலக மொழிகளுக்குக் கொண்டுசெல்வதும் பிற மொழி நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவருவதுமே இதன் நோக்கம். ஒரு மாநில அரசு இந்த முன்னோடி முயற்சியில் ஈடுபட்டிருப்பது உண்மையிலேயே நம் செம்மொழிக்குப் பெருமை சேர்க்கக்கூடியது.
புத்தகக் காட்சியின் முதல் இரண்டு நாள்களில் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் மட்டுமே பங்கேற்க இயலும். மொழிபெயர்ப்பு உரிமைகள் சார்ந்த பேச்சுவார்த்தைகள் அப்போது நடைபெறும். இறுதி நாளில்தான் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பொது நூலக இயக்குநரகமும் தமிழ்நாடு பாடநூல் - கல்வியியல் பணிகள் கழகமும் சேர்ந்து இந்நிகழ்வை நடத்துகின்றன. ஆட்சியாளர்களது அக்கறை, சமூக முன்னேற்றத்துக்கும் இலக்கியத் துறைக்குமான பிணைப்பைப் புரிந்துகொண்டுள்ள சில அரசு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவைதான் இந்த நிகழ்வுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. எனினும் இவர்களது உழைப்புக்கான முழுப்பலன் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.