

தமிழக அரசின் முன்னெடுப்பில் மூன்றாவது பன்னாட்டுப் புத்தகக் காட்சி நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. 2022இல் திட்டமிடப்பட்ட இந்நிகழ்வு சாத்தியப்படும் என்று 2021இல் யாரேனும் சொல்லியிருந்தால் நான் நம்ப மறுத்திருப்பேன். வேறு எந்த மாநில அரசும் கைக்கொள்ளாத முன்னெடுப்பு இது.
2007, 2008 ஆகிய ஆண்டுகளில் புத்தகச் சந்தைகளின் மெக்காவான பிராங்பர்ட் புத்தகச் சந்தையில் அலைந்து திரிந்ததுமே உணர்ந்த விஷயங்கள் இவை. இந்திய மொழிகளின் இலக்கியம் உலக அரங்கை எட்டிட நமக்கு ஓர் இலக்கிய நிறுவனமும் நமது படைப்புகளை வெளியிட முன்வரும் அயல் பதிப்பாளர்களை ஊக்குவிக்கும் மொழிபெயர்ப்புக்கான நல்கைத் திட்டமும் இன்றியமையாத தேவைகள். இந்தியப் பண்பாட்டு நிறுவனங்களுடன் சில ஆண்டுகள் உரையாடிக் களைத்த பின்னர், அது சாத்தியமில்லை என்கிற மனச்சோர்வு ஏற்பட்டது. பல பதிப்பாளர்களுக்கான அரங்குகளில், இலக்கிய விழாக்களில், ஊடகங்களில் தனியார் நிதி ஆதரவுடன் அத்தகைய ஒரு நல்கை நிறுவனம் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசியபோதும், மாநில அரசுகள் தத்தமது மொழிகளுக்கு இத்தகைய நல்கைகளை நிறுவலாமே எனக் கருத்துப் பகிர்ந்தபோதும், இம்முன்னெடுப்பு தமிழகத்திலிருந்து தொடங்கும் என எண்ணியதில்லை. எனவே, என் பார்வையில் இது ஓர் அசாதாரணமான நிகழ்வு.