

தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா கடந்த 2023 முதல் ‘உலகைத் தமிழுக்கும் தமிழை உலகுக்கும் கொண்டுசெல்லுதல்’ என்கிற உயரிய நோக்கத்துடன் செயல்பட்டுவருகிறது. பன்னாட்டுப் புத்தகக் காட்சிக்கு இது வெற்றிகரமான மூன்றாம் ஆண்டு. 2023ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் 24 நாடுகள் பங்கேற்றன. 2024இல் 40 நாடுகள் பங்கேற்றன. இந்த ஆண்டு 60க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வெளிநாட்டுப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய முகவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு இலக்கிய முகவர்கள் திட்டத்தை உருவாக்கியது. இந்த இலக்கிய முகவர்கள் திட்டத்தின் கீழ் வாசிப்பில் நாட்டமும் தகவல் தொடர்புத் திறனும் கொண்ட இளைஞர்களைத் தேர்வுசெய்து, தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகளைப் பிற மொழிக்கு எடுத்துச்செல்லப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது நாட்டில் வேறெந்த மாநிலமும் செய்யாத முன்னெடுப்பு. இதனால், தமிழின் இலக்கியச் செழுமை பிற மொழிகளுக்குக் கடத்தப்படுவது எளிதாகியிருக்கிறது. இளைய தலைமுறைக்கு மொழி சார்ந்த பணி வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. தமிழ் எழுத்துலகுக்கும் பதிப்புலகுக்கும் இது புது ரத்தம் பாய்ச்சியிருக்கிறது.