

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் பரவியது மிக மோசமான காட்டுத்தீ. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரிடரால் இறந்திருக்கிறார்கள். 12,000 கட்டிடங்கள் உள்படப் பல கட்டுமானங்கள் சேதமடைந்திருக்கின்றன. 1.80 லட்சம் பேர் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். 163 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தீக்கிரையாகியிருக்கிறது. 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (ரூ.17,29,581 கோடி) அதிகமான பொருள்சேதம் ஏற்பட்டிருக்கிறது. நச்சுப்புகையின் பாதிப்பிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் இரவும் பகலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
காரணம் என்ன? - அமெரிக்காவிலேயே மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் லாஸ் ஏஞ்சலீஸ் முதன்மையானது. ஆகவே, பொருள்சேதமும் உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறது. கலிஃபோர்னியாவில் அவ்வப்போது காட்டுத்தீ நிகழ்வுகள் ஏற்படும் என்றாலும் இது மிகவும் தீவிரமானது. பொதுவாக, ஜனவரி மாதம் என்பது காட்டுத்தீ ஏற்படும் காலக்கட்டமும் அல்ல. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதைப் பல வல்லுநர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள்.