எழுத்தாளர் வாங்கிய நூல்கள் என்னென்ன?பெருமாள்முருகன், எழுத்தாளர், பேராசிரியர்.கிழக்கு பதிப்பகத்தில் ‘சுப்ரமண்யராஜு சிறுகதைகள்’ வாங்கினேன். கருப்புப் பிரதியில் ஷோபா சக்தியின் முழுச் சிறுகதைகள் தொகுப்பும் பரிசல் புத்தக நிலையத்தில் என்.ஸ்ரீராமின் ‘இரவோடி’ நாவலும் வாங்கினேன். நீலம் வெளியிட்டுள்ள அழகிய பெரியவன் குறுநாவல் தொகுப்பும் வாங்கியுள்ளேன். தமிழ்நாடு பாட நூல் கழகம் வெளியிட்டுள்ள ஐங்குறுநூறு உரையும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள கு.அழகிரிசாமி கடிதங்கள் தொகுப்பும் வாங்கியுள்ளேன்..ஆய்வாளர் வாங்கிய நூல்கள் என்னென்ன?ஸ்டாலின் ராஜங்கம், பேராசிரியர், ஆய்வாளர்.இந்தப் புத்தகக் காட்சியில் முக்கியமான பல நூல்களை வாங்கியிருக்கிறேன். சீர்மை வெளியிட்டுள்ள ‘சமூகம்சார் கொள்ளையர்’ நூலை வாங்கினேன். பேராசிரியர் டி.தர்மராஜின் ‘யாதும் காடே யாவரும் மிருகம்' வாசிக்க விரும்பி வாங்கிய நூல்களில் ஒன்று. நன்செய், தடாகம் இணைந்து வெளியிட்டுள்ள ‘கோயில் நுழைவுப் போராட்டம்: ஆவணங்களும் கட்டுரைகளும்’ நூலும் நீலம் வெளியிட்டுள்ள ராம் முரளியின் ‘அறக்குரல்’ நூலும் வாங்கியுள்ளேன். பெருமாள்முருகனின் ‘காதல் சரி என்றால் சாதி தப்பு’ நூலும் ராஜம் கிருஷ்ணனின் ‘பாரதி செல்லம்மா’ நூலும் வாங்கியுள்ளேன்..என்ன நூல்கள் அதிகமாக விற்றன?வாசுகி பாஸ்கர், பதிப்பாளர், நீலம் பதிப்பகம்.அரசியல் சார்ந்த கட்டுரைகள் இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டி அதிகமாக விற்பனையாகின. க.ஜெயபாலன், பெ.விஜயகுமார் ஆகியோர் இணைந்து தொகுத்த ‘பாபாசாகேப் அம்பேத்கரின் ஜனநாயகம்’ நூல் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. பேராசிரியர் ஜெ.பாலசுப்பிரமணியத்தின் ‘தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்’ நூலும் பேராசிரியர் கோ.பழநியின் ‘கொலையுண்ட காதலும் தெய்வமான பெண்களும்’ கட்டுரை நூலும் அதிகமாக விற்பனையாகின. ஆய்வாளர் ராஜ் கெளதமனின் ‘அறம், அதிகாரம்’ தொகுப்பின் மறுபதிப்பு நூலும் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்..எப்படி இருந்தது புத்தகக் காட்சி?அனுஷ், பதிப்பாளர், எதிர் வெளியீடு.இந்தப் புத்தகக் காட்சி மொத்தமாகப் பார்த்தால் சிறப்பாகவே இருந்தது. ஆனால், புத்தகக் காட்சி தொடங்கிய வாரம் சிறப்பானதாக இல்லை. விற்பனை மந்தமாகவே இருந்தது. புத்தகங்கள், சோப்பு, பேஸ்ட் போல அன்றாடப் பயன்பாட்டுப் பொருள்கள் அல்ல. அதனால் அதை நமக்குத் தோதான காலத்தில் விற்க முடியாது. மக்களுக்குத் தோதான காலத்தில்தான் விற்க வேண்டும். பரீட்சார்த்தமாகப் பொங்கல் விடுமுறைக்கு முன்பாக புத்தகக் காட்சியைத் தொடங்கினோம். ஆனால், பெரும்பான்மையான பதிப்பாளர்களுக்கு இது உவப்பாக இல்லை. இது முயற்சிதான். பொங்கல் விடுமுறைக் காலத்தில் புத்தகக் காட்சியை நடத்துவது சரியாக இருக்கும் என நினைக்கிறோம்..இயக்குநர் வாங்கிய நூல்கள் என்னென்ன?வசந்த பாலன், திரைப்பட இயக்குநர்.இந்தப் புத்தகக் காட்சியில் பல நல்ல புத்தகங்கள் வந்துள்ளன. நாகஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் குறித்து லலிதாராம் எழுதிய ‘காருகுறிச்சியைத் தேடி’ நூல் விரும்பி வாங்கிய நூல். செந்தில் ஜெகன்நாதனின் ‘அனாகத நாதம்’ சிறுகதை நூலையும் என்.ஸ்ரீராமின் ‘இரவோடி’ நாவலையும் வாங்கினேன். கதிர்பாரதி அம்மாவை பற்றிய எழுதிய ‘அம்மாவை மனைப்பாம்பு பார்த்துக்கொண்டிருந்தது’ கவிதை நூலும் இந்தப் புத்தகக் காட்சியில் வாங்கி வாசித்த கவிதை நூல்களில் என்னைக் கவர்ந்த ஒன்று.