

கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, முன்பு காலனி ஆதிக்கம் செலுத்தப்பட்ட நாடுகளில் பேசுபொருளானது. ஒரு நாட்டில் அமைக்கப்படும் அரசுப் பொது நிறுவனங்களும் அதன் நிர்வாகக் கட்டமைப்புகளும் எவ்வாறு அந்நாட்டின் வளர்ச்சிக்கு அல்லது வீழ்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்றன என்பதை விளக்கும் ஆய்வுகளுக்காக டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ.ராபின்சன் ஆகியோருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.
குறிப்பாக, காலனி ஆதிக்கக் காலத்தில் ஐரோப்பியர்கள் ஆக்கிரமித்த நாடுகளில் எவ்வாறான நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள் என்பதை இந்த ஆய்வுகள் விளக்குகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் பூர்வகுடிகள் அதிகமாக இருக்கும்போது, நிர்வாக முறையினை ஒரு மாதிரியாகவும், பூர்வகுடிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் ஆக்கிரமிப்பாளர்கள் மீதான எதிர்ப்பு மிகக் குறைவாகவும் இருந்த நாடுகளில் நிர்வாக முறையினை வேறு மாதிரியாகவும் கட்டமைத்திருப்பதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.