

யமுனை ஆற்றின் கிளை நதிகளான கென் நதியையும், பேட்வா நதியையும் இணைக்கும் கென் - பேட்வா நதிநீர் இணைப்புத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், நதிநீர் இணைப்புத் திட்டம் குறித்துத் தேசிய அளவிலான விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. நதிகளை இணைப்பதால் கிடைக்கும் பலன்களைப் பேசுவதுடன், இதில் இருக்கும் பாதகமான அம்சங்களையும் புரிந்துகொள்வது இந்தத் தருணத்தில் மிகவும் முக்கியமானது.
இந்தியாவின் நதிநீர் இணைப்புக் கொள்கையின்படி - தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தின்படி (என்.ஆர்.எல்.பி.) உருவாக்கப்படும் முதல் திட்டம் என்பதால், கென் - பேட்வா நதிநீர் இணைப்புத் திட்டம் மிகுந்த கவனம் பெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் பாயும் கென் நதியும், உத்தரப் பிரதேசத்தின் பேட்வா நதியும் இணைக்கப்படும் இந்தத் திட்டத்தை, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டுத் தினத்தில் பிரதமர் மோடி தொடங்கிவைத்ததும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.