

சமூக ஊடகங்களில் போலிக் கருத்துகளும் தனிமனித அவதூறுகளும் வெறுப்புணர்வும் அதிகரித்துவருவதைப் பார்க்கிறோம். பல ஆண்டுகளாகவே சிலரை ஒரு நோய் பீடித்திருக்கிறது. அது ‘இனத்தூய்மை’ நோய். அந்நோய் பீடித்தவர்கள் பரப்பும் வெறுப்பு அறிவுக்கு மட்டுமல்ல, மனிதத் தன்மைக்கே பொருந்தாததாக இருக்கிறது. ஒருவர், இணையவெளியில் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டார் என்றால், உடனடியாக அவரது சாதி, மதம் என்னவென்று கண்டுபிடிக்க முயல்வது இந்த நோயின் முதல் அறிகுறி.
பெயர், உடல் தோற்றம், உடை அணியும் பாணி, மொழியை உச்சரிக்கும் பாங்கு, வட்டார வழக்கு, வசிக்கும் இடம், செல்லும் வழிபாட்டுத் தலம் என்று பல்வேறு காரணிகளின்(!) துணையுடன் சம்பந்தப்பட்டவரைச் சோதனைக் குழாயிலிட்டு ஆய்வுசெய்து, அவர் என்ன சாதி என்றோ என்ன மதம் என்றோ தீர்ப்புக் கொடுப்பார்கள். அவர்களுடைய செயல் காரணமற்றதாகத் தோன்றினாலும் இதன் விளைவுகள் மோசமானவை.