பேரறிவுச் சிலை
இந்தியத் துணைக்கண்டத்தின் பெருநிலவெளியும் முந்நீர்ப் பெருங்கடற்பரப்பும் கைகுலுக்கிக் கொள்ளும் குமரிமுனையில் ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு நடுவே குன்றென நிமிர்ந்து நிற்கும் குறியீடாக அய்யன் திருவள்ளுவரின் பேரறிவுப் பெருஞ்சிலை. இந்தச் சிலை இல்லாத குமரிக் கடலைக் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு உலகத் தமிழரின் உள்ளுணர்வில் அழகாக, ஆழமாக வேரூன்றிவிட்டது இந்தப் பெருஞ்சிலை.
வரலாற்றுச் சிறப்பு: 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட உலக இலக்கியம்; பொது யுகத்தின் 2,000 ஆண்டுகள் முடிந்து அடுத்த 1,000 ஆண்டுகளில் உலகம் அடியெடுத்துவைக்கும் மிக முக்கியமான ‘மைல்கல்’ நாள் (01.01.2000); மூன்று கடல்கள் சந்திக்கும் முன்வாசல் போன்ற நீர்முற்றத்தில் திருவள்ளுவர் சிலை. இடமும் நாளும் எப்படிப் பொருந்திவந்துள்ளன அந்த வரலாற்றுத் தருணத்திற்காக. இப்போது 25 ஆண்டுகளாகிவிட்டன. வெள்ளிவிழாக் கோலம்!
