“நாவலாசிரியர்களே வரலாற்றை உயிர்ப்பிக்கிறார்கள்” - எஸ்.ராமகிருஷ்ணன் நேர்​காணல்

“நாவலாசிரியர்களே வரலாற்றை உயிர்ப்பிக்கிறார்கள்” - எஸ்.ராமகிருஷ்ணன் நேர்​காணல்
Updated on
3 min read

எஸ்​.ராமகிருஷ்ணன், முன்னணி எழுத்​தாளர். அரசியல், சமூக மாற்றத்தால் சிதையும் வாழ்க்கையை எளிய மனிதர்கள் பக்கம் நின்று சொல்பவை இவரது கதைகள். ‘யாமம்’, ‘உறு​பசி’, ‘உபபாண்​ட​வம்’ உள்ளிட்ட பல நாவல்களை எழுதி​யுள்​ளார். இருபதுக்​கும் மேற்​பட்ட சிறுகதைகள் வெளிவந்​துள்ளன. திரைத்​துறை​யிலும் பங்களித்​துள்ளார். சாகித்திய அகாடமி விருது, தாகூர் விருது, இயல் விருது உள்ளிட்ட பல விருதுகளை​யும் பெற்றுள்​ளார். இந்தப் புத்​தகக் காட்​சியை ஒட்டி இவரது ‘கவளம்’ சிறுகதைத் தொகுப்பு உள்பட நான்கு நூல்கள் தேசாந்​திரி பதிப்​பகம் (அரங்கு எண்: 334, 335 ) வெளியிட்டுள்ளது.

‘கவளம்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து...

எனது ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பை எழுதும்​போது என் மனம் ஒரு குறிப்​பிட்ட விஷயத்தை நோக்கி இயங்​கும். இது எழுதும்​போது எனக்​குத் தெரி​யாது. இந்தச் சிறுகதை நூல் உணவு சார்ந்து, உணவுப் பண்பாடு சார்ந்து அது ஏற்படுத்​தும் நல்லது, கெட்​டதுகள் பற்றியதாக அமைந்​துள்ளது. நமக்​குத் தெரிந்த மனிதர்​கள், தெரியாத பக்கங்கள் இருப்பதில்​லையா? இது இந்தத் தொகுப்​பின் பிரதான அம்சமாக இருக்​கிறது. சாவு வீட்​டில் திருடு​பவனைப் பற்றி இதில் ஒரு கதை இருக்​கிறது. சாவு வீட்​டில் யாரும் எதையும் கவனிக்க மாட்​டார்​கள். அந்த நேரம் வீட்டுக்​குள் நுழைந்து பொருள்களைத் திருடிச் செல்​வான் ஒருவன். அவன் சாவு வீட்​டின் அபத்​தங்​களை​யும் சொல்​கிறான். இந்தத் தொகுப்​பில் இதுபோல் 11 சிறுகதைகளும் 17 குறுங்​கதைகளும் உள்ளன. குறுங்​கதைகள் கதைக்​கும் கவிதைக்​கும் நடுவில் எழுதப்​பட்​டது.

தலைப்​புக் கதையான ‘கவள’த்தில், தவிர்க்க முடி​யாமல் இழைக்​கும் குற்றம், அதிலிருந்து மீள நினைக்​கும் பதைபதைப்பும் சொல்​லப்​பட்​டிருக்​கிறது...

நம் செயல்​களுக்​குப் பின் விளைவு இருக்​குமோ என்கிற அச்சம் நம்மில் பலருக்​கும் இருக்​கும். நம் செயல்கள் நம்மைப் பாதிக்​கும் என நினைக்​கிறார்​கள். இதில் நல்ல செயல்கள், நல்லதை​யும் கெட்ட செயல்​கள், கெட்​டதை​யும் உருவாக்​கும் என நம்பு​கிறார்​கள். இந்தக் கதையில் போலீஸ்​காரர் நோய்​வாய்ப்​படு​கிறார். அது தான் இழைத்த குற்​றத்​தின் காரணம் என அவர் நினைக்​கிறார். பொதுவாக இந்த மாதிரியான பிரச்​சினை​களுக்​குக் கோயி​லில் பிராயச்​சித்தம் தேடு​வார்​கள். யாருக்​குக் குற்​றமிழைத்​தோமோ அவர்கள் வீட்​டில் ஒரு வாய் சாப்​பிட்​டால் அவர்கள் குற்​றத்தை மன்னித்​ததாக இவர் கருதுகிறார். நம் பண்பாட்​டில் ஒரு பகையாளி வீட்​டில் கை நனைத்து​விட்​டால் பகை முறிந்​து​போய்​விட்​ட​தாகப் பொருள். ஆனால், என் நோக்கம் இவரைப் பற்றி எழுதுவது அல்ல. போலீஸ்​காரருக்கு ஒரு மகள் இருக்​கிறாள். இந்த வீட்​டில் கணவனை இழந்த மனைவி இருக்​கிறாள். தன் அப்பாவுக்காக அவள் வந்து இவளிடம் கேட்டுக்​கொண்டே இருக்​கிறாள். தன் கணவன் உயிர் போகக் காரண​மானவன் எனக் கணவனுக்காக அதை இவள் மறுத்​துக்​கொண்டே இருக்​கிறாள். இந்த இருவருக்​காக​வும் அந்தக் கதையை எழுதினேன்.

உங்கள் சிறுகதை பல கால இடைவெளி​யில் நிறைய மாற்​றங்கள் அடைந்​து​வரு​கின்​றன...

கதைகளை, முதலில் நம்மைச் சார்ந்த விஷயங்​களி​லிருந்து எழுதுகிறோம். பிறகு வரலாற்றி​லிருந்து எழுதுகிறோம். தொடர்ந்து எழுது​வதன் வழியாகக் கதைக்கு முக்​கியம் அதன் மொழி​யும் வடிவ​மும்​தான் எனப் புரிந்​து​கொள்​கிறோம். எதை வேண்​டு​மானாலும் நீங்கள் கதையாக்​கலாம். அதற்கு ஒரு மொழி​யும் வடிவ​மும் முக்​கி​யம். கதைக்கு முதல் வரிதான் முக்​கியம் என்றார்​கள். பிறகு கதையின் கடைசி வரிதான் முக்கியம் என்றார்​கள். இப்போது கதையின் முதல் வரியும் கடைசி வரியும் முக்​கியமல்ல. அது, தானே நிகழ்ந்​து​விடும். கதையின் மையம்​தான் கதை. வளர வளர கதையின் அடிப்​படையைச் சொன்​னாலே போதும் என்று தோன்​றியது. பசியைப் பற்றிய, குற்​றவுணர்வு பற்றிய எண்ணங்களை நீக்​கி​விட்​டால் இன்றைய மனிதனும் குகை மனிதனும் வேறு வேறு இல்லை. அதனால் அடிப்​படையான விஷயங்கள் நோக்கி நகர ஆரம்​பித்​தேன். கதைகளை வேறு வேறு முனைகளை விரித்​து விரித்​துப் பார்த்​துக்​கொண்​டிருக்கிறேன்.

நாவல், சிறுகதை இரண்​டுக்​குமான பொருளை எப்படித் தேர்ந்​தெடுக்​கிறீர்​கள்?

இரண்​டுக்​குமான பொருளும் முற்றி​லும் வேறு​பட்​டது. நாவல், கதை சொல்​வதற்கான வடிவம் கிடை​யாது. கதை வழியாகப் பலதும் சொல்​லப்​படு​வதற்கான வடிவம். சமூக விஷயங்​கள், வரலாறு, உளவியல் விஷயங்​கள், உண்மைகள் எனப் பலதும் சொல்​லப்​படலாம். ஒரு நாவல் பல்வேறு விஷயங்கள் கொண்ட ஒரு பெரிய இடம். அதற்​குள் நிறைய நடக்​கலாம். அதற்​குள் நாடகம் இருக்​கிறது. கவிதை இருக்​கிறது. நிறைய இசைக் கருவிகள் சேர்ந்து இசைக்கக் ​கூடிய ஒரு சிம்பனி மாதிரி அது. சிறுகதையை உங்கள் நினை​வின் பலத்​தில் எழுதிவிட முடி​யும். ஆனால், நாவலுக்குக் கொஞ்​சம்​தான் உங்கள் நினைவு பயன்​படும். புனை​வுக்​குப் பின்​னால் இருக்​கக்​கூடிய ஆழ்ந்த பார்​வை​யும் வாழ்க்கை​யைப் பற்றிய உங்கள் தரிசனங்​களும் சேர்ந்​து​தான் நாவல் உருவாகும். நாவல்​களில் ஒரு வரலாறு இருக்​கிறது. அது வரலாற்றில் இல்லாத வரலாறு. வரலாற்றில் வெற்றி, தோல்விகளே எழுதப்​பட்​டிருக்​கும்​போது இவற்றுக்​குப் பின்​னால் உள்ள மனிதர்கள் யார், அவர்கள் என்ன செய்​தார்​கள், எங்கிருந்து வந்தார்​கள், அவர்​களின் அன்றாடம் என்ன என்பன பற்றியெல்​லாம் நாவல்​தான் சொல்​கிறது. நாவலாசிரியர்கள் வரலாற்றை எழுதவில்லை என்றால் வரலாறு உறைந்​து​போன​தாகத்​தான் இருந்​திருக்​கும்.

நாவல் நிறைய கதைகளின் தொகுப்பா?

பல்வேறு நிகழ்ச்​சிகளின் தொகுப்பு. ஒரு நிகழ்ச்சி இன்னொரு நிகழ்ச்​சி​யுடன் இணைந்து புதிதாக வேறு வேறு நிகழ்ச்​சிகளை உருவாக்கு​கிறது. நிறைய நேரங்​களில் ஒரு நிகழ்ச்​சியை நோக்​கியே நாவல் பயணமாகிறது. கதை என்பது ஒரு இடத்​தில் தொடங்கி இன்னொரு இடத்​தில் முடிவடைய வேண்​டும் என்று நினைக்​கிறோம். அது முடி​வில்லா கயிறு. நீங்கள் சிறுகதை​யில் பார்ப்பது அதன் ஒரு முழத்​தைத்​தான். ஒரு நாவலில் உப்பும் இருக்​கிறது. தேனும் இருக்​கிறது. அவைதான் நாவலைக் கெட்டுப்​போக​விடாமல் நூறு, இருநூறு வருடங்​களாகப் படிக்​கவைக்​கிறது. உப்பு என்பது வாழ்க்கை​யின் சிக்கல் எனலாம். நாவலின் அபூர்​வமான தருணங்களைத் தேன் எனலாம்.

நாவலை எந்த மையத்​திலிருந்து தொடங்​கு​கிறீர்​கள்?

உதாரணமாக ‘யாம’த்​தில் அரூபமான விஷயத்தை நாவலின் மையமாக வைத்​துக்​கொள்ள வேண்​டும் என நினைத்​தேன். யாமம் என்கிற ஒரு வாசனைத் திரவி​யத்தை வைத்​துக்​கொண்டேன். அதைத்​தான் இரவு என்றும் வைத்​துக்​கொண்​டேன். இரவைப் பற்றி எழுதும்​போது எல்லா ஊருக்​கும் இரவு ஒன்று​தானா என்ற கேள்வி எழுந்​தது. எல்லா ஊருக்​கும் ஒரே இரவு என்று தெரிந்​தா​லும் அது வேறு வேறு​தான். இரவு ஓய்வெடுக்​கும் நேரம் இல்லை. இரவு ரகசி​யங்​களால் ஆனது. இரவின் கண்ணீரும் சிரிப்பும் எழுதப்​பட​வில்லை. இதன் மையம் ஒரு நகரத்​தின் இரவு என வைத்​துக்​கொண்​டேன். அதை எழுது​வதற்கான ஒரு படிமமாக ஒரு வாசனைத் திரவியத்தை எடுத்து​க்கொண்​டேன்.

இன்றைக்​குள்ள கதைகள் எப்படி இருக்​கின்றன?

புதிய புதிய கதைக் களங்​களில் புதி​ய​வர்கள் பலரும் எழுதுகிறார்​கள். தமிழ்ச் சிறுகதைக்கு ஒரு பன்மைத்துவம் வந்திருக்​கிறது. ஆனால், ஒவ்வொரு பத்தாண்​டில்​தான் அதன் முகத்தை நம்மால் பார்க்க முடி​யும். இப்போது பார்த்​தால் அது பெரும்​பாலும் நகர்​சார் வாழ்க்கை​யைத்​தான், குறிப்பாக 20, 35 வயதுக்​காரனின் உலகம்​தான் எழுதப்​பட்​டிருக்​கிறது. இந்த நகரத்​தின் நுகர்​சார் வாழ்க்கை​யை​யும் எழுதுகிறார்​கள். சென்னையைப் பற்றி கன்னடத்​தில் ​திவாகர் எழு​தி​யிருக்​கிறார். மலையாள எழுத்​தாளர்​களும் எழு​தி​யிருக்​கிறார்​கள். அவை நாம் பார்க்காத கோணத்​தில் இருக்​கின்றன. இம்​மா​திரி கோணத்​தில் கதைகள் எழுதப்பட வேண்​டும். அதை எழுது​வதற்​கான ​திறனுள்​ள படைப்​பாளிகள்​ இப்​போது வந்​திருக்​கிறார்கள்.

- தொடர்​புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in