

சோழர் காலத்திலேயே உப்பு வாரியம் தொடங்கப்பட்ட கதை தெரியுமா? ஆட்சியையும் அதிகாரத்தையும் நிலைப்படுத்த உப்புச் சந்தையை ஒழுங்குபடுத்துவது என்பது இன்றைக்கல்ல, அந்தக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதன் நீண்ட நீட்சியாக 'அம்மா உப்பு' திட்டத்தைச் சொல்லலாம். சாப்பாட்டில் தொடங்கி சவால் விடுவது வரை உப்போடு கலந்த வாழ்க்கை என்றாலும், உப்பைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? உப்பு ஆராய்ச்சியில் நிபுணரான சமூக-பொருளியல் ஆய்வாளர், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநர்
ஜெ. ஜெயரஞ்சனுடன் சுவாரசியமான ஓர் உரையாடல்...
இந்தியாவில் உப்பு உற்பத்தி முதல் சந்தைப்படுத்தல் வரையிலான அதன் நீண்ட பயணத்தைச் சொல்லுங்களேன்…
இந்திய மாநிலங்களில் உப்பு உற்பத்தியில் முதல் இடத்தில் குஜராத்தும், அடுத்து தமிழ்நாடும், மூன்றாவதாக ராஜஸ்தானும் உள்ளது. மற்ற கடலோர மாநிலங்களில் குறிப்பிடும்படியாக உப்பு உற்பத்தி இல்லை. உப்பு உற்பத்தியில் 10%தான் உணவுக்காகப் பயன்படுகிறது. மீதமுள்ள 90% தொழிற்சாலைகளில் வேதிப்பொருட்கள் உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகிறது. துணி சோப்பு உற்பத்தியிலும் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
உப்பளங்களில் அள்ளப்படும் உப்பு உணவுக்காக எந்தெந்த நிலைகளைத் தாண்டி வருகிறது?
உப்பளங்களில் அள்ளப்படும் உப்பை உப்பு வியாபாரிகள் வாங்கி, தரத்தை உயர்த்துவதற்காக அதனைப் பல வழிகளில் பதப்படுத்தி, அயோடின், இரும்புச் சத்து உள்ளிட்டவை சேர்ப்பார்கள். பின்பு, காற்றில் உள்ள ஈரத்தன்மையை உறிஞ்சி உப்பு நீர்த்துப்போகாமல் இருப்பதற்காக மேலும் பதப்படுத்தப்பட்டு பைகள், பெட்டிகளிலெல்லாம் அடைக்கப்படும். பின்பு, உப்பு நிறுவனம் அதனைத் தன் பெயரில் விளம்பரப்படுத்தி, விற்பனைக்கு எடுத்துவரும்.
சமையல் உப்பின் விலை வெளிச்சந்தையில் கூடுதலாகவே உள்ளது. ஒரு கிலோ உப்பு தயாரிக்க 50 பைசா, அயோடின் சேர்க்க 5 பைசா, பையிலிட 20 பைசா, போக்குவரத்துக்கு 75 பைசா மற்றும் லாபம் 50 பைசா என்று வைத்தால்கூட, இரண்டு ரூபாய்க்கு அயோடின் கலந்த உப்பு கொடுக்க முடியும். இதில் தேவை இல்லாத பல அம்சங்களைச் சேர்த்து விலையை அதிகரிக்கின்றனர்.
உதாரணம், உணவு மேஜையில் பயன்படுத்தப்படும் ‘ஃப்ரீ ஃப்ளோ’ உப்பு. நம் குடும்பங்களில் உணவு தயாரிக்கும்போதே உப்பு சேர்க்கப்படுவதால், மேஜை உப்புக்கு அதிகத் தேவையிருக்காது.
உப்பில் அயோடின், இரும்புச் சத்து உள்ளிட்டவை சேர்க்கப்பட வேண்டிய அவசியம் என்ன?
ரத்தசோகை போன்ற உடல்நலக் குறைபாடுகளுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இந்த இரு சத்துக்களின் பற்றாக்குறைதான். ஏனைய சில நாடுகளில், இந்த இரண்டு சத்துக்களையும் எல்லா மக்களுக்கும் எடுத்துச்செல்ல குடிநீர் பயன்படுத்தப்பட்டது. அங்கெல்லாம் குடிநீரை எல்லா வீடுகளுக்கும் அரசே விநியோகிக்கிறது. இந்தியாவில் அது சாத்தியம் இல்லாததால், எல்லா வீடுகளுக்கும் உப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள்.
அயோடின் கலந்த உப்பைத்தான் விற்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்ட பின்னரும் அரசு ஏன் உப்பு விநியோகத்தில் ஈடுபடுகிறது?
இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அயோடின் கலந்த உப்பு வெளிச் சந்தையில் அதிக விலையில் விற்பனையாவது. இரண்டு, பல நிறுவனங்கள் சிறு நகரங்களில், கிராமங்களில் அயோடின் கலக்காத உப்பை விற்பனை செய்வது. தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பில், இந்தியக் குடும்பங்களில் 42% குடும்பங்களுக்குத்தான் அயோடின் கலந்த உப்பு சென்று சேர்ந்ததாகத் தெரிந்தது. உப்பு விநியோகத்தில் அரசு கை வைக்க இதுவும் ஒரு காரணம்.
உணவு உப்பின் தரம் உயர்த்த நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வில் எந்த அளவில் தாக்கத்தை உருவாக்கியது?
தமிழகத்தில் உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் நிலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. குறிப்பாக, உப்பு சூரிய ஒளியில் தயாரிக்கப்படுவதால், உப்பளங்களில் ஓய்வெடுக்கக்கூட இடமிருக்காது. கழிப்பிடங்கள் கிடையாது. உப்புக் கற்களில் பட்டுத்தெறிக்கும் சூரிய ஒளி தொழிலாளர்களின் பார்வையைப்பாதிக்கிறது. தொழிலாளர்கள் உப்பு நீரில் தொடர்ந்து வேலை செய்வதால், அவர்கள் கால், கைகளில் புண் வருவது தவிர்க்க இயலாதது. ஓய்விடங்கள், கழிப்பறைகள், கை-கால் கவசங்கள், கருப்புக் கண்ணாடிகள் போன்ற கூடுதல் உபகரணங்கள் தேவை. இதற்குக் கூடுதல் முதலீடு செய்ய சிறு உற்பத்தியாளர்களிடம் பணம் இல்லை அல்லது பணம் இருப்பவர்கள் முதலீடு செய்யத் தயாராக இல்லை.
- இராம. சீனுவாசன், இணை பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்.
தொடர்புக்கு: seenu242@gmail.com