

வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சென்னைப் புத்தகக் காட்சி என்கிற அறிவுத் திருவிழா இன்று தொடங்குகிறது. தென்னிந்தியப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) இந்தப் புத்தகக் காட்சியை ஆண்டுதோறும் நடத்திவருகிறது. இதுதான் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய புத்தகக் காட்சியாகும். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்கும் புத்தகக் காட்சி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பொங்கல் விடுமுறையை ஒட்டி நடைபெறும் விழா, இம்முறை சற்று முன்பாகவே தொடங்குகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புத்தகக் காட்சியைத் தொடங்கிவைக்க உள்ளார். பொங்கலை ஒட்டிய நீண்ட விடுமுறை நாள்கள் காரணமாக மக்கள் வெளியூர் சென்று விடுவதால் விற்பனை பாதிக்கப்படுவதாகப் பெரும்பாலான பதிப்பாளர்கள் கருதுகிறார்கள். அதை ஏற்று இந்தப் புத்தகக் காட்சி, பொங்கல் விடுமுறைக்கு முன்பே முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், விற்பனை அதிகரிக்க வாய்ப்பிருக்கும் என பபாசி சார்பில் சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு சுமார் 900 புத்தகக் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு வருடமும் இந்தப் புத்தகக் காட்சி மேம்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. பபாசி செயலாளர் முருகன், “வாசகர்கள் பலரிடம் கருத்துகள் பெற்று, அதன் அடிப்படையில் நல்ல மாற்றங்களைச் செய்துவருகிறோம். அந்த வகையில், அரங்கத்துக்கு உள்ளே நான்கு ஓய்வறைகளை அமைத்திருக்கிறோம். வயதானவர்கள், உடல் பலவீனமானவர்கள் அதிக நேரம் புத்தக அரங்கில் சுற்றிக் களைப்படைய வாய்ப்பிருக்கிறது.
அவர்களுக்கு இந்த ஓய்வறைகள் பயனுள்ளவையாக இருக்கும்” எனத் தன் கருத்தைப் பகிர்ந்துகொண்டார். ஓய்வறைகளில் தாய்ப்பால் ஊட்டுவதற்கும் வசதிசெய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே குடிநீர் வசதியும் செய்துதரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பபாசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 15,000 கார்கள் நிறுத்தும் அளவுக்கும் 50,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் புத்தகக் காட்சியை ஒட்டிப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியும், பேச்சுப் போட்டியும் வழக்கம்போல் நடைபெற இருக்கிறது. ஓவியப் போட்டியில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வரை பங்கேற்கலாம். ஜனவரி 7, காலை 8.30 மணிக்குப் புத்தகக் காட்சி வளாகத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. அதேபோல் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி நடத்தப்படவுள்ளது. ஜனவரி 8 அன்று புத்தகக்காட்சி வளாகத்தில் இந்தப் போட்டி நடைபெறும். வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுக் கூப்பன்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகக் காட்சியை ஒட்டித் திறந்தவெளி அரங்கத்தில் தினமும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், இந்தாண்டு சாகித்திய அகாடமி விருதுபெற்ற வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்ட பலர் பேசவுள்ளனர். நிகழ்ச்சி குறித்த கூடுதல் விவரங்களை www.bapasi.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். அரங்கு அமைப்பு முறைகளும் இந்த இணையதளத்தில் படமாகவே கொடுக்கப்பட்டுள்ளன.
பார்வையற்றவர்களுக்கு இலவச அரங்கு ஒன்றையும் பபாசி வழங்கியிருக்கிறது. நடைபெறவுள்ள பன்னாட்டுப் புத்தகக் காட்சி தொடர்பான விசாரணைக்காக ஓர் அரங்கை பபாசி இலவசமாக ஒதுக்கியுள்ளது. இந்த அரங்கைப் பன்னாட்டுப் புத்தகக் காட்சி தொடர்பாக பன்னாட்டுப் பதிப்பாளர்கள், உள்ளூர்ப் பதிப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என பபாசி தலைவர் கவிதா பதிப்பகத்தின் சேது சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக 5 லட்சம் இலவச நுழைவுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இலவச நுழைவுச் சீட்டு இல்லாத மாணவர்கள் தங்கள் கல்லூரி, பள்ளி அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாகப் புத்தகக் காட்சியைக் காணலாம். சென்ற ஆண்டுகளில் மழையைச் சமாளிக்க முடியாமல் புத்தகக் காட்சி சில நாள்கள் நடத்தப்படவில்லை. அதைச் சமாளிக்கும் வகையில் இந்த ஆண்டு கட்டமைப்புகள் முன்னேற்பாட்டுடன் செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் புத்தகக் காட்சிக்கு 10 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் சேது சொக்கலிங்கம் தெரிவித்தார்.
திருநர் சமூகப் பதிப்பாளர்களுக்கு அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுச் சொன்னார். அரங்கு அமைப்பதிலும் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடித்திருப்பதாகவும் அவர் சொன்னார். மாற்றுத்திறனாளிகள் புத்தகக் காட்சிக்கு வருகைதரும் பொருட்டு அவர்களுக்குப் பிரத்யேகமான சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது.
தேவை கருதி அவர்களுக்கு உதவியாளர்களும் ஏற்பாடுசெய்துதரலாம் என சேது கூறினார். அதுபோல் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வரும் வாசகர்களுக்குப் புத்தகக் காட்சிக்கு வந்து செல்ல மினி பேருந்து வசதி செய்துதரப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
வார நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், புத்தகக் காட்சி திறந்திருக்கும். இந்த ஆண்டு சுமார் 15 கோடி ரூபாய் வரை புத்தகங்கள் விற்பனையாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகப் பதிப்பாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். விற்பனைக்கு அப்பாற்பட்டு புத்தகக் காட்சி என்பது நமக்கு அறிவு தரும் ஒரு பெரிய விழா. நம் வாழ்க்கையை மேம்படுத்தும் இந்த விழாவை ஒரு பண்டிகையாகக் கொண்டாட வேண்டும்.
- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in