ஏமாற்றமளிக்கும் நாடாளுமன்ற முடக்கம்

ஏமாற்றமளிக்கும் நாடாளுமன்ற முடக்கம்
Updated on
2 min read

நடந்து முடிந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான அமளிகளைச் சந்தித்தது, ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கிறது. பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் நாடாளுமன்றத்திலும், அதன் வளாகத்திலும் விவாதங்களிலும் நேரடியாகவும் மோதிக்கொண்டதை மக்கள் ஏமாற்றத்துடன் பார்த்தனர்.

அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவு என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைச் சிதைக்கும் அளவுக்கு இரண்டு தரப்பினரும் நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25 தொடங்கி டிசம்பர் 20 வரை நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் வாரத்தில், தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் குற்றச்சாட்டு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்திய நிலையில், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் முடங்கின. மணிப்பூர் விவகாரம் தொடர்பாகவும் அமளி நிலவியது.

இந்தச் சூழலில், மாநிலங்களவையில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டாக்டர் அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்துகளைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் இறங்கினர். இண்டியா கூட்டணி எம்பி-க்கள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு எதிராக பாஜக எம்பி-க்களும் போராட்டம் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு, இந்த விவகாரம் மிக மோசமான எல்லையைத் தொட்டுவிட்டதை உணர்த்தியது. இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் கட்சியினரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தத் தடைவிதித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிடும் அளவுக்குக் களேபரங்கள் நேரிட்டன.

மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆளுங்கட்சியினருக்குச் சாதகமாக, பாரபட்சமாக நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டிய 50க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்ததும், அது நிராகரிக்கப்பட்டதும் பேசுபொருளாகின. அதானி விவகாரம், அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சு என இரண்டிலும் எதிர்க்கட்சிகள் - குறிப்பாக காங்கிரஸ் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாக பாஜகவினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் பெரும் அமளிக்கு வழிவகுத்தன.

இந்தக் கூட்டத்தொடரைப் பொறுத்தவரை, ஒதுக்கப்பட்ட நேரத்தில் 52% தான் மக்களவை இயங்கியது. மாநிலங்களவை 39% நேரம்தான் இயங்கியது. நான்கு மசோதாக்கள் கொண்டுவரப்பட்ட நிலையில், ஒரு மசோதா மட்டும்தான் நிறைவேறியது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான இரண்டு மசோதாக்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையில், அவை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய செயல்பாடுகள் அவர்களைத் தங்களது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களையும் அவமதிக்கக்கூடியது என்றே சொல்ல வேண்டும். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பல உரிமைகளை வழங்கியிருக்கும் அரசமைப்புச் சட்டத்தை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடந்துகொள்ள வேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரை மதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் அதைச் செயலில் காட்ட வேண்டும். அரசு தவறான திசையில் செல்வதாக எதிர்க்கட்சிகள் கருதினால், அமளியில் ஈடுபடுவதைத் தவிர்த்துவிட்டு ஆக்கபூர்வமான முறையில் அதை நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் முன்வைக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் எழுப்பும் ஆட்சேபங்களைப் பரிசீலித்து - அவை ஏற்கத்தக்கவை என்றால் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள ஆளுங்கட்சியினரும் முன்வர வேண்டும். அப்போதுதான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்னும் பெருமை மாசுபடாமல் இருக்கும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in