

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. அவற்றில் முதன்மையானது, புதிய பாடத்திட்டம். பொருளடக்கம், வடிவமைப்பு, செயலியைப் பயன்படுத்தி கற்றல் என்று புதிய பாடநூல்கள் தனிக்கவனம் பெற்றுள்ளன. 2018-19-ம் கல்வியாண்டு முதல் நிர்வாகச் சீரமைப்பு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
அரசு நிர்வாகத்தில் சீரமைப்பு என்பது பொதுவான தேவை மற்றும் அந்தத் துறையின் தனித்துவமான தேவை இரண்டையும் உள்ளடக்கியதாய் இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை நிர்வாக சீரமைப்பு என்பது புதிய எல்லைகள், அதிகாரப் பரவலாக்கல் என்பதற்குள்ளேயே அடங்கிவிடுகிறது. தொடக்கப் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என்று தனித்தனி அலகுகளாய் இருந்த பள்ளிகள் தற்போது முதன்மைக் கல்வி அலுவலரின் ஆளுகையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. முதன்மைக் கல்வி அலுவலருக்குக் கூடுதலாக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கூடும் பணிச் சுமைகள்
ஏற்கனவே இருந்த நிர்வாக அமைப்பில் ஒரு முதன்மைக் கல்வி அலுவலரால் ஆண்டொன்றுக்கு 50% பள்ளிகளைக்கூட ஆண்டாய்வு செய்ய முடியாமல் இருந்தது. தற்போதைய கூடுதல் அதிகாரமும், கூடுதல் பள்ளிகளும் ஆய்வு அலுவலரான முதன்மைக் கல்வி அலுவலருக்கு பெரும் சுமையாகவே இருக்கும். எனவே, ஆண்டாய்வு மற்றும் பள்ளிகளைப் பார்வையிடலில் ஏற்கனவே இருந்த தொய்வு நிலை மாறுவதற்கு வாய்ப்பில்லை. தனியார்ப் பள்ளிகளை பொறுத்தவரை, பள்ளி நிர்வாகத்தைக் கண்காணிக்க தலைமை ஆசிரியருக்கு மேல் பள்ளி நிர்வாகிகள் இருக்கின்றனர். ஆனால், அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை தலைமை ஆசிரியருக்கு மேல் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். எனவே வட்ட, வட்டார, மாவட்ட அளவிலான அலுவலர்கள், அலுவலகப் பணிகளில் மூழ்கிவிடாமல் இருக்கும் வகையில் ஒரு நிர்வாகச் சீரமைப்பு தேவையாக இருக்கிறது.
பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாகப் பணிகளையும் கற்றல், கற்பித்தல் பணிகளையும் இரண்டாகப் பகுத்து, அதற்குரியவர்களை அந்தந்தத் தளத்தில் இயங்கச் செய்வது சிறப்பாக இருக்கும். உதாரணமாக, இயக்குநரக அளவில் கையாளப்பட்டுவந்த பல அதிகாரங்கள் தற்போது முதன்மைக் கல்வி அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளன. இயக்குநரக அளவில் இந்த அதிகாரங்கள் கையாளப்பட்டபோது, பிரிவு எழுத்தரிடம் தொடங்கும் கோப்புகள், அமைச்சுப் பணியில் அனுபவமுள்ள கண்காணிப்பாளர், நேர்முக உதவியாளர், இணை இயக்குநர்கள் வழியாக வடிவம் பெற்றன. தேவையான இனங்களில் குறிப்புரை வழங்கவும், ஆலோசனை வழங்கவும், உதவி கணக்கு அலுவலர், நிர்வாக அலுவலர், சட்ட அலுவலர் போன்றவர்களைக் கொண்ட நிர்வாக அமைப்புமுறை இருந்தது. ஆனால், முதன்மைக் கல்வி அலுவலகங்களில் அத்தகைய அமைப்பு முறை இல்லை.
என்ன செய்யலாம்?
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையிலும், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலையிலும் இரண்டு நேர்முக உதவியாளர்கள் இருக்கின்றனர். அதேபோல், ஒரு வட்டாரத்துக்கு இரண்டு வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவரை நிர்வாக பணிக்கும், மற்றொருவரை பள்ளிப்பார்வை, ஆண்டாய்வு போன்ற கற்றல் கற்பித்தல் மேலாண்மைப் பணிகளுக்கும் பிரித்து பயன்படுத்தலாம். தலைமை ஆசிரியர்களை கல்வி மேலாண்மைப் பணிக்குப் பயன்படுத்திக்கொண்டு, அனுபவம் உள்ள நிர்வாக அலுவலர்களை, நிர்வாகப் பணிக்குப் பயன்படுத்திக்கொள்வதைப் பற்றியும் பரிசீலிக்கலாம். இதனால் கற்றல் கற்பித்தலில் அனுபவம் உள்ளவர்கள் தங்களது மேலாண்மைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த உதவியாக இருக்கும். குறிப்பாக, மாறிவந்துள்ள சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் ஆய்வு வழிமுறைகளும் புதியதாக ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், இந்தச் சீர்திருத்தம் வெறும் நிர்வாகச் சீர்திருத்தமாக மட்டுமே முடிந்துவிடும்.
ப.நீதிமணி,
ஓய்வுபெற்ற பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்,
தொடர்புக்கு: needhimani1961@gmail.com