

‘டூரிங் டெஸ்ட்’ என்கிற கணிப்பொறியியலின் தொடக்கக் காலக் கோட்பாட்டுக்காக ஏற்கெனவே அறியப்பட்டவர்தான் ஆலன் டூரிங். அது ஏஐக்கு முக்கியமான ஒரு கோட்பாடுதான். அதைப் பிறகு பார்ப்போம். ‘செயற்கை நுண்ணறிவின் தந்தை’ எனப் பிற்காலத்தில் போற்றப்பட்ட ஆலன் டூரிங்கை மெய்நிகர் உலகில் நாங்கள் சந்தித்தபோது பரவசமாக இருந்தது. வந்த நோக்கத்தைச் சொன்னோம்.
“எனிக்மாவின் புதிரை நாங்கள் எப்படி அவிழ்க்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்கள்? அதுவும் போர்க்காலத்தில்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் ஆலன். அவரைச் சுற்றி ராணுவத்தினரும் ஆய்வாளர்களும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
“எனிக்மாவை அவிழ்ப்பது கடினம்தான். ஆனால், எனிக்மாவைவிடச் சக்திவாய்ந்த வேறொரு இயந்திரத்தை உருவாக்கிவிட்டால், அது முடியும்” என்று ஆணித்தரமாகக் கூறினார் ஆலன். எனிக்மாவின் அடிப்படைகள் எங்களுக்குத் தெரியுமா என்று கேட்டுத் தெரிந்துகொண்ட அவர், தொடர்ந்து விளக்கினார்.
“ஒரு தகவலை மறையேற்றம் செய்யும் முன்பு சுழல் சக்கரங்களையும் பிளக்போர்டையும் ஒரு தொடக்க மதிப்பில் அமைத்துவைப்பார்கள். அதன் பிறகே எல்லா எழுத்துகளும் உள்ளிடப்படுகின்றன. அந்தத் தொடக்க நிலை என்ன என்பதை நாம் கண்டறிந்துவிட்டால் போதும், அந்தத் தகவலைப் பிட்டுப்பிட்டு வைத்துவிடலாம்” என்று கூறிய ஆலன், “இங்கே பாருங்கள்” என்று ஒரு திசையில் சுட்டிக்காட்டினார்.
அதுவொரு பெரிய இயந்திரம். நெடுவரிசையிலும் கிடை வரிசையிலும் வட்டு அமைப்புகள் இருந்தன. எனிக்மாவின் சுழல் சக்கரங்களுக்கு இணையாக இந்த வட்டுகள் உருவாக்கப்பட்டிருந்தன. அவை மின் இணைப்புகளால் இணைக்கப்பட்டிருந்தன. ‘பாம்’ (Bombe) – என்பது அதன் பெயர்.
ஜெர்மனியிடமிருந்து இடைமறித்துப் பெறப்பட்ட ஒரு தகவல் அப்போதுதான் அவர் கைக்கு வந்துசேர்ந்திருந்தது. அதிலிருந்து ஒரு புரியாத வார்த்தையை அவர் எங்களிடம் சுட்டிக்காட்டினார். “இந்த IWPB என்கிற எழுத்துகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். இதன் மூல வார்த்தை என்னவாக இருக்கும்? பாமைக் கேட்போம்” என்று கூறி, அந்த இயந்திரத்தில் டேப் மூலமாக அந்த எழுத்துகளை உள்ளிட்டார்.
பாம் இப்போது உயிர்கொண்டெழுந்தது. அதன் வட்டுகள் சுழன்றன, பிறகு அவற்றின் வேகம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. மின்விளக்குகள் மினுக்கிட்டன. அறையில் சத்தம் உயர்ந்துகொண்டே சென்று, பிறகு ஒரு தருணத்தில் அனைத்து வட்டுகளும் சுழல்வதை நிறுத்தின. அறை மீண்டும் மெளனமானது.
இயந்திரம் ஒரு சொல்லை டேப்பில் அடித்து வெளியனுப்பிய சத்தம் மட்டும் கேட்டது. நானே எடுத்துப் படித்தேன்: EAST. “இன்று ஜெர்மானியர்களின் யூ-போட் தாக்குதல் கிழக்குப் பக்கமாக இருக்கலாம்!” என்று ரகசியத்தை உடைத்துக் கூறிய ஆலன், அதை எளிமையாக விளக்கத் தொடங்கினார்.
“முதலில் E,A,S,T ஐ I,W,P,B என உருமாற்றுவதற்காக எனிக்மா பயன்படுத்திய ‘காம்பினேஷன்க’ளைக் கணக்குப் பார்த்தால், அது பல நூறு கோடிகள் வரை போகும். மனிதர்களால் அவ்வளவையும் கணக்குப்போட்டுப் புரிந்துகொள்ள முடியாது. கோடி வருடங்கள் ஆகும். எனவே, எனிக்மா அதை எப்படி மறையேற்றியது என்பதை ‘ரிவர்ஸ் இன்ஜினீயரிங்’ செய்து பார்க்க வேண்டும். மின்னல் வேகத்தில் இயங்கும் இதைப் போன்ற இயந்திரங்களால்தான் அது முடியும். அதாவது, இந்த வேலையை மனிதர்களிடமிருந்து இயந்திரங்களுக்கு என மாற்ற வேண்டும்.”
“ரகசியத் தகவல்களில் அரிதாக ஓரிரு தகவல்கள் நாம் எளிதில் புரிந்துகொள்ளும்படி அமைந்துவிடும். உதாரணமாக, ஜெர்மானியர்கள் அவற்றில் பயன்படுத்திய வானிலைக் குறிப்புகள், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன. இப்படிச் சுலபமாக உற்றறிந்துவிடக்கூடிய தகவல்களை ‘கிரிப்ஸ்’ என்போம். இவைதான் நமக்குக் கிடைக்கும் க்ளூ.”
“எனிக்மாவில் மற்றொரு ஓட்டை இருந்தது: அது எப்போதும் ஒர் எழுத்தை வேறோர் எழுத்தாகவே மாற்றுகிறது. A என்று அழுத்தினால் அனுப்பப்படும் மறையேற்றப்பட்ட செய்தியில் A என்கிற எழுத்து, மீதியுள்ள 25 எழுத்துகளில் எந்த ஓர் எழுத்தாகவும் மாறலாமே ஒழிய, A ஆக மட்டும் அது மீண்டும் பதிவாகாது. இதுவும் ஒரு க்ளூ. இவற்றையெல்லாம் பயன்படுத்தி, எனிக்மாவின் மூலச் சுழல் சக்கர அமைப்புகளையும் பிளக்போர்டு நிலையையும் மீண்டும் கண்டறிவதற்கான வாய்ப்பை பாம் உருவாக்குகிறது” என்றார்.
வேறோர் எடுத்துக்காட்டையும் சொன்னார்: “ஒரு நாளில் வரும் பல தகவல்களில் சில சொற்கள் ஒரே மாதிரியாக மறையேற்றப்பட்டு வரும். ஒருமுறை அப்படித்தான் இரண்டு சொற்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி இருந்தன. அவற்றைத் துப்பாகக் கொண்டு, மறைநீக்கம் செய்தபோது, அந்தச் சொற்களின் உண்மை வடிவம் தெரிந்துபோனது. எடுத்துக்காட்டாக, அது KPLI NYSIAO என்றால், அதன் மூலவடிவமாக நமக்குக் கிடைத்தது: “HAIL HITLER!” என்று சொல்லி நிறுத்தினார். எங்களுக்கும் பிடிபட்டுவிட்டது.
ஜெர்மனி படையினரின் வெற்றிச் செய்திகளில் அடிக்கடி இடம்பெற்ற இந்த ஹிட்லர் துதி அவர்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது. நாஸிக்களின் ரகசியங்களை பாம் உடனுக்குடன் உடைத்துச் சொல்ல, பிரிட்டிஷ் ராணுவம் தோல்வியிலிருந்து மீளத் தொடங்கியிருந்தது. ஆலனின் கண்டுபிடிப்பால், இரண்டாம் உலகப் போர் சில ஆண்டுகள் முன்பாகவே முடிந்து, பல லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்று வரலாறு சொல்கிறது.
“ஆலன், போரிலிருந்து அறிவியலுக்குத் திரும்புவோம். எந்த இடத்தில் இதெல்லாம் செயற்கை நுண்ணறிவுக்கான அடித்தளமாக மாறியது?” என்று கேட்டேன். “செயற்கை நுண்ணறிவெல்லாம் பிறகு வந்த வார்த்தை!” என்று கூறிய ஆலன், “போர் நடக்கும்போது மனிதர்களால் பொறுமையாக உட்கார்ந்து எதிரியின் சேதியைப் புரிந்துகொள்வதற்கு மை தடவிக்கொண்டிருக்க முடியாது.
எனவே, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் யோசிக்கிறோம். மனிதர்களின் வேலையை இயந்திரம் செய்தாக வேண்டும் என்கிற முடிவை நாம் எடுக்கும்போது, மனித நுண்ணறிவை இயந்திரத்துக்குக் கொடுக்க வேண்டும் என்றும் யோசிக்கிறோம். அதுதான் எல்லாவற்றுக்கும் தொடக்கம்” என்றார்.
“அப்படி ஓர் இயந்திரம் இயங்க, அதற்குள் ஏராளமான தரவுகளைச் செலுத்துகிறோம். அந்தத் தரவுகளை என்ன செய்ய வேண்டும் என்பதற்கான செயல்முறைகளையும் நிரலாக்கம் செய்கிறோம்... அவை வேகமாகச் செயல்படுவதற்கான இயந்திரவியல்-மின்னியல் அமைப்பையும் உருவாக்குகிறோம்...” எனத் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவரை இடைமறித்தேன். “மொத்தத்தில், செயற்கை நுண்ணறிவுக்கான அடித்தளத்தை நீங்கள் இப்படித்தான் அமைத்திருக்கிறீர்கள், ஆலன்!”
- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com