இன்றைய இலக்கியவாதிகளுக்குத் தைரியம் இல்லை! - சாரு நிவேதிதா நேர்​காணல்

இன்றைய இலக்கியவாதிகளுக்குத் தைரியம் இல்லை! - சாரு நிவேதிதா நேர்​காணல்
Updated on
3 min read

சாரு நிவே​திதா, ’ செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது’ என்கிற ஞானக்​கூத்​தனின் வரிகளைப் போல் தமிழின் வித்​தி​யாசமான கதைசொல்லி. பத்தி எழுத்​துக்​குரிய சுவாரசி​யத்​தை​யும் நாவலுக்​குரிய ஆழத்​தை​யும் ஒருசேரக் கொண்டவை அவர் படைப்பு​கள். ‘எக்​ஸிஸ்​டென்​ஷியலிஸ​மும் ஃபேன்ஸி பனியனும்’ அவரது முதல் நாவல். ‘ஸீரோ டிகிரி’ உள்ளிட்ட 8 நாவல்​கள், 9 சிறுகதைத் தொகுப்பு​கள், 20க்​கும் மேற்​பட்ட கட்டுரைகள் வெளிவந்​துள்ளன. ‘நான் தான் ஔரங்​ஸேப்’ என்கிற அவரது நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்​புக்காக இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான க்ராஸ்​வேர்டு விருதுபெற்றுள்​ளார். அது குறித்து மேற்​கொள்​ளப்​பட்ட நேர்​காணல் இது.

க்ராஸ்​வேர்டு விருது கிடைத்​துள்ளது பற்றி... எனக்​குக் கிடைத்​திருக்​கும் இந்த விருது நடுவர் விருது கிடை​யாது; மக்கள் தேர்வு விருது இது. நடுவர்கள் விருது என்றால் எனக்​குக் கிடைத்​திருக்​காது. ஏனென்றால் நடுவர்கள் பழசாக இருக்​கிறார்கள். என்னை தருண் தேஜ்பாலின் நண்பராகப் பார்க்​கிறார்​கள்.

அவர் இலக்​கியத்தில் தீண்​டத்​தகாதவ​ராகப் பார்க்​கப்​படு​கிறார். என்னை​யும் அப்படியே பார்க்​கிறார்​கள். மேலும் இந்த ஆயிரம் பக்கத் தமிழ் நாவலை, 350 பக்க​மாகக் குறைக்க ஒப்புக்​கொண்​டேன். அதனால் அது பென்கு​யின் பதிப்​பகத்​தில் வெளிவந்து கவனம் பெற்றுள்​ளது.

இமையத்​தின் ‘செல்லாத பண’மும் பெரு​மாள் முரு​க​னின் ‘ஆளண்​டாப்பட்​சி’​யும் உங்களுடன் போட்​டி​போட்ட தமிழ் நாவல்கள்... பெரு​மாள்முரு​கன், இந்தியா முழு​வதும் அறியப்​படுகிற இலக்கிய சூப்பர் ஸ்டார். ராகுல் காந்தி மாதிரி பலரும் விரும்​பும் எழுத்​தாளர். அதனால் இந்தியா முழு​வதும் பலரும் அவருக்​குத்​தான் வாக்​களித்​திருப்​பார்​கள். எனக்​குக் கிடைக்க வாய்ப்​பில்லை என்று​தான் நினைத்​தேன். ஆனால், எனக்​குத் தமிழ்​நாட்​டிலிருந்து பெரும்​பாலானவர்கள் வாக்​களித்​திருக்​கிறார்​கள்.

‘நான்​தான் ஒளரங்​ஸேப்’ நாவலின் பின்னணி என்ன? - வரலாற்​றைப் பொருத்​தவரை வெகுஜன மனத்​துக்கு ஒரு ஹீரோ​வும் ஒரு வில்​லனும் தேவைப்​படு​கிறது. நமக்கு ஹீரோ ஷாஜகான். ஏனென்​றால் அவர் தாஜ்மஹாலைக் கட்டி​யிருக்​கிறார். இவருக்கு ஒரு வில்​லனும் வேண்​டுமல்​லவா, அவர்​தான் ஒளரங்​கசீப். ஆனால், ஹீரோவாகப் பார்க்​கப்படும் அசோகர்​கூட, தன் சகோதரர்கள் பலரை​யும் கொன்​று​தான் பதவிக்கு வந்தார்.

ஒளரங்​கசீப்பும் இதையே​தான் செய்​தார். அக்பரும் செய்​துள்ளார். ஆனால், நமக்கு வில்லன் வேண்​டும் என்ப​தால் ஒளரங்​கசீப்பை மட்டும் வில்​லனாக்​கி​விட்​டோம். உண்மை​யில் குரானை முறையாக ஓதி, தொப்​பிகள் தைத்து விற்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்​தவர் ஒளரங்​கசீப். சொற்ப சேமிப்பை தனது இறப்புச் சடங்​குக்​காகச் சேமித்து​வைத்​தவர் அவர். ஒளரங்​கசீப் இந்துக் கோயில்​களுக்கு மானியம் கொடுத்​திருக்​கிறார்.

இந்த நாவலுக்கான தொடக்​கப்புள்ளி எது? - தியாகராஜ பாகவதர் வரலாற்றை எழுதும்​போது தஞ்சை சரபோஜி மகாராஜாவைப் பற்றித் தெரிந்​து​கொள்ள முடிந்​தது. அவரது அரசவை​யில்​தான் தியாகராஜ பாகவதரின் தந்தை அரசவைக் கவிஞராக இருந்​தார். அந்த மகாராஜா மராட்டிய மரபைச் சேர்ந்​தவர் என்ப​தால் அது என்னை சிவாஜி​யிடம் கூட்​டிச் சென்​றது.

சிவாஜியைப் பற்றி வாசிக்​கும்​போது ஒளரங்​கசீப்​பைப் பற்றித் தெரிந்​து​கொண்​டேன். அப்படித்​தான் ஒளரங்​கசீப், தன் மகன்​களுக்கு எழுதிய ஒரு 100 கடிதங்களை வாசிக்​கும் சந்தர்ப்பம் கிடைத்​தது. அவை ஒரு கவிஞன் எழுதி​யது​போல, ஒரு சூஃபி ஞானி எழுதி​யது​போல் இருந்தன. அப்படித்​தான் இந்த நாவலுக்​குள் நுழைந்​தேன்.

உங்கள் எழுத்து, புனை​வுக்​கும் கட்டுரைக்​கும் இடையி​லானது... என்னோட வாழ்க்கையே ஒரு புனை​வு​தான். அது நீங்கள் நம்ப முடி​யாதது. சினி​மா​வின் கனவுத் தாரகையாக இருக்​கும் ஒருவர், எனக்குக் காதல் குறுஞ்​செய்தி அனுப்பு​வார். ஒரு பெரிய பிரபலம், நான் ஒரு வார இதழில் தொடர் எழுதி​ய​போது உங்கள் உயிருக்கு ஆபத்து இருக்​கிறது எனச் சொன்​னார். அவர் தமிழக அரசி​யலில் முக்​கியமான நபர். ஆனால், இதைச் சொன்​னால் உங்களால் நம்ப முடி​யாது. இது யதார்த்​தம்​தான். ஆனால், கதை மாதிரி​தானே இருக்​கிறது? ஆங்கிலத்​தில் ‘My Life, My Text’ என ஒரு கட்டுரைத் தொடர் எழுதுகிறேன். அது புனைவு மாதிரி இருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள்.

இந்த வகை எழுத்​துக்கு உங்களுக்கு முன்னோடி யார்? - பிரெஞ்​சில் எழுதக்​கூடிய ஒருவர். ஆனால், அவர் நாவல்கள் எதுவும் ஆங்கிலத்​தில் மொழிபெயர்க்​கப்​பட​வில்லை. அவர் பெயர் ஜூலியன் செர்ஜ் டூப்​ரோவ்ஸ்கி. ‘ஜீரோ டிகிரி’ வாசித்து​விட்டு எனக்கு எழுதி​யிருக்​கிறார். இந்த முறையை ‘Autofiction’ என்கிறார்​கள். இதை உருவாக்​கியவர் டூப்​ரோவ்ஸ்​கி​தான். இந்த முறை​யில் எழுதுபவர்கள் குறைவு​தான்.

நம்முடைய வாழ்க்கை​யையே இதற்​காகப் பலிகொடுக்க வேண்​டி​யிருக்​கும். வில்​லியம் எஸ்.பர்​ரோஸ் ‘நேக்டு லஞ்’சில் (Naked Lunch) எழுதி​யிருக்​கிறார். பிரேதங்​களின் மீது நடந்​துசெல்​வேன் என நானே எழுதிருக்​கிறேன். என் கதை என்பது அப்பா, நண்பர்​கள், மனைவி இவர்​களின் கதைதானே? என் காதலிகளின் கதையை எழுதும்​போது கீழே என் மனைவி​யின் பிரேதம்​தானே இருக்​கும்?

உங்கள் எழுத்து, கலாச்சார அதிர்ச்​சியை ஏற்படுத்​தக்​கூடியது. இதைத் திட்​ட​மிட்டுச் செய்​கிறீர்​களா? - கேரளத்​தில் நான் அருந்ததி ராய் மாதிரி. ஏதாவது போராட்டம் என்றால் என்னைக் கூப்​பிடு​வார்​கள். “தமிழ்​நாட்​டில் நடக்​கும் சமூகப் போராட்​டங்​களில் ஏன் கலந்​து​கொள்​வ​தில்ல்​லை?” என ஒரு நண்பர் கேட்​டார். “இங்கே சமூகத்​துக்கு எதிராகவே நான் போராடு​கிறேனே” எனப் பதில் சொன்னேன்.

மொத்த சமூக​மும் சினிமா பின்​னாடி போய்க்​கொண்​டிருக்​கிறது. நான் சமூகத்​துக்கு எதிராகவே போராடுகிறேன். அதனால் இதைத் திட்​ட​மிட்​டே​தான் செய்​கிறேன். பெரு​மாள்முரு​க​னுக்​குப் பேச ஒரு நீதிபதி இருந்​தார். என் வழக்கு நீதி​மன்றம் போனால் அங்கே​யும் எனக்கு ஆதரவு கிடைக்​காது.

ஏற்கெனவே எழுதப்​பட்ட ஒரு வரலாற்றின் மீது குறுக்​கீடு நிகழ்த்​தும் இந்தப் பாணியை (palimpsest) ஏன் தேர்​வுசெய்​தீர்​கள்? - நீங்கள் சொல்​வது​போல் இது ஒரு palimpsest நாவல்​தான். ஆனால், அதைத் திட்​ட​மிட்டு உருவாக்க​வில்லை. எழுதி முடித்த பிறகு விமர்​சகர்கள் அப்படி வகை பிரிக்​கிறார்​கள்.

நவீனத் தமிழ் இலக்​கியம் எப்படி இருக்​கிறது? - ஆரோக்​கியமாக இல்லை கு.ப.ராஜகோபாலன், எம்.​வி.வெங்​கட்​ராமன், தி.ஜானகிராமன், சி.சு.செல்​லப்பா, க.நா.சுப்​ரமணியன், சார்​வாகன், மெளனி, ஆதவன், அசோகமித்​திரன், தி.ஜ.ரங்​கநாதன் இப்படி 50 வருஷத்​துக்கு முன்​னாடி இவ்வளவுபேர் இருந்​தார்​கள். புது​மைப்​பித்​தனெல்​லாம் தமிழில் மறுமலர்ச்​சியை உண்டு​பண்ணிய எழுத்​தாளர். ஏ.என்​.சிவ​ராமன் என்று ஒரு பத்திரி​கை​யாளர் இருந்​தார். கக்கன், காமராஜர் போன்ற அரசி​யல்​வா​திகள் இருந்​தார்​கள். இன்றைக்கு இவர்கள் மாதிரியான ஆள்களைப் பார்க்க முடிவ​தில்லை.

அப்படித்​தான் இலக்​கி​யத்​தி​லும். தி.ஜ.ரங்​கநாதன், காந்தி கலந்​து​கொண்ட ஒரு காங்​கிரஸ் மாநாட்​டில் கலந்​து​கொள்​கிறார். முடிந்​ததும் பரபரப்பாக வீட்டுக்​குக் கிளம்​பு​கிறார். “ஏன் இருந்து எல்லாரை​யும் பார்த்து​விட்டுப் போ” எனச்சொல்​கிறார் ஒரு தலைவர். “காலை​யில் என் மகன் இறந்​து​விட்​டான்.

நான்​தான் ​காரி​யம் செய்ய வேண்​டும்” எனப் ப​தில் சொல்​லி​யிருக்​கிறார். “யோவ் நீயெல்லாம் மனுஷனா​யா?” எனக் கேட்​டார் அவர். “இல்லை நான் தொண்​டன்” என்​றாராம் இவர். இப்படி ஒருவரை இன்று பார்க்க ​முடி​யு​மா? இலக்​கியவா​திகளுக்​கு இந்​தத்​ தைரியம் இருக்கிறதா?

க்​ராஸ்​வேர்டு விருது: சாரு நிவே​திதா

- தொடர்​புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in