கவியூரில் பூத்தவன் | அறிவுமதி 75

கவியூரில் பூத்தவன் | அறிவுமதி 75
Updated on
3 min read

இன்றைக்​குத் திரைப்​பாடல் எழுதும் பலருக்​கும் அபிபுல்லா சாலை​யில் இருந்த கவிஞர் அறிவும​தி​யின் அலுவலகமே ஆரம்ப முகவரியாக இருந்​தது. திராவிட இயக்கக் குடும்பப் பின்னணி​யுடைய அவர், எழுத்​தினால் ஈர்த்த ஓர் இளைஞர் கூட்​டத்தை வழிநடத்தி, அவர்கள் வாழ்​விலும் முன்னேற்​றத்​தி​லும் அதீத அக்கறையைக் காட்​டி​யிருக்​கிறார்.

தமிழகத்​தின் குக்​கிராமங்​களில் இருந்து கிளம்​பிவரும் இளம் எழுத்​தாளர்​களுக்கு, சகல வசதி​களை​யும் ஏற்படுத்​திக்​கொடுத்து ஆக்க​மாக​வும் ஊக்க​மாக​வும் இருந்​திருக்​கிறார் அறிவுமதி. சமயங்​களில் தமக்​குக் கிடைத்த வாய்ப்பு​களைப் பகிர்ந்​தளித்​துப் பரவசப்​பட்​டிருக்​கிறார்.

அடிப்​படை​யில் தமிழ் மாணவனாக இருந்த அறிவுமதி, திரைத்​துறை​யில் தம்மை ஓர் இயக்​குநராக ஆக்கிக்​கொள்ளவே ஆசைப்​பட்​டிருக்​கிறார். பாரதிராஜா, பாலுமகேந்​திரா, கே.பாக்​யராஜ், எம்.ஜி.வல்​லபன் ஆகியோரிடம் இணைந்து பணியாற்றி​ உள்ளார். எண்ணியது ஒன்று, இயங்​கியது மற்றொன்று என்ப​தாகக் காலம் அவரை அற்புதமான பாடலாசிரியர் ஆக்கி​யிருக்​கிறது.

திரை​யிலக்​கியப் பயிற்​சி​யும் திராவிட இயக்கப் பின்​புல​மும் அவருடைய பாடல்​களைத் தனித்து​வ​மிக்​க​தாகக் காட்டு​கின்றன. எளிய சொற்களே ஆனாலும், அவற்றி​லும் இலக்கிய நுகர்​வுக்கான சாத்​தி​யங்களை ஆக்கி அளித்​திருக்​கிறார். அந்தவிதத்​தில், ‘சிறைச்​சாலை’ திரைப்​படத்​திற்கு அவர் எழுதிய வசனங்​களும் பாடல்​களும் தன்னிகரில்​லாதவை. ஒரு மொழி​மாற்றுத் திரைப்​படத்​தில் இலக்​கி​யத்​தரம் வாய்ந்த பாடல்​களை​யும் வசனங்​களை​யும் அவரால் எழுத முடிந்​திருக்​கிறது. வசனங்​களி​லும் உதட்​டசை​விற்கு ஏற்ப அவர் நடத்​தி​யிருக்​கும் தமிழ் விளை​யாட்டு, அதை ஒருமொழி​ மாற்றுப் படமென்​ப​தையே மறக்​கடித்​திருக்​கிறது.

அதற்கு முன் பாடல் எழுதி​யிருந்​தா​லும் இளையராஜா​வின் இசையில் அவரெழுதிய ‘ராமன் அப்துல்லா’ படத்​தில் ‘முத்​தமிழே முத்​தமிழே’ அவரைத் திரும்​பிப் பார்க்க வைத்தது எனலாம். ‘காதல்​வழிச் சாலை​யிலே வேகத்தடை ஏதுமில்​லை/நாணக்​குடை நீ பிடித்​தும் வேர்​வரைக்​கும் சாரல்​மழை’ என்கிற வரிகள் திரைத்​தமிழைத் தீவிர இலக்கியமாக உயர்த்தி​யிருக்​கின்றன. அடிப்​படை​யில், ஒரு கவிஞன் பாடலாசிரியனாகித் திரைப்​பாடலை எழுது​வதற்​கும், பாடலாசிரியனாக மட்டுமே அறியப்​பட்​டவர் எழுது​வதற்​கும் நிறைய வித்​யாச​முண்டு.

அது என்ன​மா​திரியான வித்​யாசமென்பதை அறிவும​தி​யின் பாடல்​களைக் கேட்​பவர்க்​குப் புரி​யும். ‘அணுஅணுவாய்​/வாழ்​வதற்​கும் சாவதற்​கும்​/​முடி​வெடுத்த பிறகு/​காதல் சரியான வழிதான்’ எனக் கவிதைகளில் எழுதிய அவர், அதே உணர்​வு​களைத் திரைப்​பாடல்​களி​லும் கொண்டுவர முயன்​றிருக்​கிறார்.

‘பிரியாத வரம்​வேண்​டும்’ திரைப்​படத்​தில் ‘பிரிவொன்​றைச் சந்தித்​தேன் முதல்​முதல் நேற்று/நுரை​யீரல் தீண்​டாமல் திரும்​புது காற்று’ என எஸ்.ஏ. ராஜ்கு​மார் இசையில் ஒரு பாடலை எழுதி​யிருக்​கிறார். முழுக்க முழுக்க அப்பாடல்​வரிகள் கவிதை​யில் தோய்ந்​தவை. அப்பாடலில் ‘உன் கைகள் நான் என்றும் துடைக்​கின்ற கைக்​குட்​டை/நீ தொட்ட அடையாளம் அழிக்​காது என் சட்டை’ என்று யோசித்திருக்​கிறார்.

இசையோடு அவ்வரி​களைக் கேட்​கும்​போது, திரைப்​பாடலை வேறொரு தளத்​திற்கு அவர் இட்டுச் செல்ல எண்ணி​யிருப்பது பிடிபடும். அப்பாடல் வரிகளை வாசித்த இசையமைப்​பாளர் கட்டியணைத்து, தமது கணையாழியைக் கழற்றிப் பரிசாகக் கொடுத்​திருக்​கிறார்.

‘தங்கம் அணிவ​தில்லை’ என்று அறிவுமதி மறுத்த​போதும், ‘தங்கள் தமிழை கௌரவிக்க விரும்​பு​கிறேன்’ என்றிருக்​கிறார் அவர்.
கவிக்கோ அப்துல்​ரகு​மான் அவரைத் தம் மகன்​களில் ஒருவ​ராகவே கருதி இலக்​கி​யத்​தைக் கற்பித்​திருக்​கிறார். கவிஞர் மீரா​வின் அறிமுகத்​தால் அன்னம் வெளி​யீடாக அறிவும​தி​யின் ‘நிரந்தர மனிதர்​கள்’ கவிதைநூல் வெளிவந்​திருக்​கிறது.

தொடர்ச்​சியாக ‘அவிழரும்​பு’, ‘என் பிரிய வசந்​தமே’, ‘ஆயுளின் அந்திவரை’, ‘அன்பான ராட்​சசி’, ‘கடைசி மழைத்​துளி’, ‘அணுத்​தி​மிர் அடக்​கு’, ‘வலி’, ‘நட்​புக்​காலம்’ ஆகியன வந்துள்ளன.

‘கடைசி மழைத்​துளி’​யில் ஹைக்கூ வடிவை அசலான தமிழ் ஹைக்​கூக்​களாக எழுதிக்​காட்​டியவர் அறிவும​தி​தான். ‘படை​யாச்சி சுடு​காடு/பறையர் சுடு​காடு/தலை முழுக ஒரே ஆறு’ என்றும் ‘மரக்​கிளை​யில் குழந்​தை/வரப்​பில் பண்ணை​யார்​/வயலில் சிந்​துகிறது பால்’ என்றும் தமிழ் ஹைக்​கூக்​களை, சமூகத் தடத்தை நோக்​கித் திருப்​பி​விட்ட பெருமை அவருடையது. மூன்று வாக்​கி​யங்​களில் ஒரு கருத்​தையோ சிந்​தனையையோ ஹைக்​கூவாக எழுதலாம் என்கிற புது​முறையை அவரே உருவாக்கி​யிருக்​கிறார்.

ஆண் - பெண் நட்பை மையமாக வைத்து அவர் எழுதிய ‘நட்​புக்​காலம்’ நூல், கல்லூரி​களில் படிக்​கும் மாணவர்​களுக்கான கவிதைக் கையேடாக மாறிப்​போ​யிருக்​கிறது. ஒரு கவிதைக்​காகக் காவல்​துறை படிக்​கட்​டிலும் நீதி​மன்ற வாசலிலும் நிற்​கவேண்டிய நிலையை அறிவுமதி சந்தித்​திருக்​கிறார்.

பல கவியரங்​கு​களில் அவர் கவிதை வாசிக்க ஆரம்​பித்த உடனேயே, மொத்த கூட்​ட​மும் அவர் பின்னே நடக்கத் தொடங்​கியதை நிறைய மேடைகளில் நேரடி​யாகக் கண்டிருக்​கிறேன். அப்படிப்​பட்ட அவர்​தான், ‘சொல்​லாதே சொல்லச் சொல்​லாதே’ என்கிற பாடலை ‘சொல்​லாமலே’ படத்​திற்காக எழுதி​யிருக்​கிறார். ‘காத்​திருக்​கும் வேளை​யெல்​லாம் கண் இமையும் பாரம்​/​காதல் வந்து சேர்ந்​து​விட்​டால் பூமி வெகுதூரம்’ என்ற அப்பாடலுக்கு, தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெற்றிருக்​கிறார்.

ஒரு பாடலாசிரியரே அனைத்​துப் பாடல்​களை​யும் எழுதிவந்த சூழலில், ஆளுக்கு ஒரு பாடலைத் தரத் சொல்லி இசையமைப்​பாளர்​களிடம் கோரிக்கை வைத்​திருக்​கிறார். அவர் வைத்த அந்தக் கோரிக்கை​யின் அடிப்​படை​யில்​தான் நா. முத்​துக்​கு​மார், கபிலன், தாமரை, பா. விஜய், விவேகா, நான் என எல்லோரும் கலந்து எழுதும் சூழல் உருவானது. எங்களை வழிநடத்​தும் தலைமைப் பாடலாசிரியராக பல படங்​களுக்கு அவரே இருந்து எங்களுக்​குச் சிபாரிசு செய்திருக்​கிறார்.

‘ரன்’ திரைப்​படத்​தில் அவர் எழுதிய ‘பொய் சொல்​லக்​கூடாது காதலி’ என்னும் பாடலின் அடுத்த வரி, எப்படி இருக்​கலாம் என்று யோசிக்கை​யில், ‘பொய் சொன்​னாலும் நீயே என் காதலி’ என்ற வரியைச் சொன்னவர், லிங்​குசாமி​யின் சகோதரரான சுபாஷ்சந்​திர​போஸ். எதேச்​சை​யாகப் பாடல் பதிவைப் பார்​வையிட வந்த அவரே இரண்​டாவது வரியை எடுத்​துக்​கொடுத்​தார் என்பது வெளி​யுல​கிற்​குத் தெரி​யாதது.

அப்படி, யாரை​யும் கவிஞனாக்​கி​விடும் அன்பை​யும் ஆற்றலை​யும் அறிவுமதி மட்டுமே வைத்​திருந்​திருக்​கிறார். அப்பாடலில், ‘அழகிய பொய்கள் பூக்​கும் பூச்​செடி கண்டேன்​/அதை ரகசி​யமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக்​கொண்​டேன்​/கண்​ட​வுடன் எனையே தின்​றதடி விழியே/என்னை​விட்டுத் தனியே சென்​றதடி நிழலே’ என அவர் எழுதி​யிருக்​கும் வரிகளைப் பாடலென்று சொல்​வதை​விட, கவிதையே என்றே கொண்​டாடத் தோன்​றுகிறது.

சந்தத்​திற்​குத் தக்கவாறு வரிகளைக் குழைத்து எழுதும் பாணி அவருக்கே உரியது. சின்ன சின்ன கவிதைகளை இரண்​டிரண்டு வரிகளாகச் சிந்​தித்தே முழுப்​பாடலை​யும் எழுதி​யிருக்​கிறார். ‘உதயா’ திரைப்​படத்​திற்கு அவர் எழுதிய ‘உதயா உதயா உளறுகிறேன்’ பாடல் வழி இதைப் புரிந்​து​கொள்​ளலாம்.

‘மூச்​சின் குமிழ்​களிலே உயிர் ஊற்றி அனுப்​பி​வைத்​தேன்​/கூச்சம் அவிழ்​கை​யிலே உடல் மாற்றி நுழைந்​து​விட்​டேன்’ என்ப​தெல்​லாம் அப்பாடலில் வரக்​கூடிய வரிகளே. ‘தெனாலி’ படத்​தில் ‘அத்​தினி சித்தினி’ என்கிற பாடலை​யும் அவர் எழுதி​யிருக்​கிறார். ‘நாணம் கூச்​சலிடும் சிவந்​தனம்’ என்கிற வரி அப்பாடலில் இடம்​பெற்றுள்ளது.

மரபார்ந்த தமிழ் எழுத்​து​முறையி​லிருந்து புதுக்க​விதைகள் திரைப்​பாடலாக வெளிப்​பட்​டது​போல, புதுக்க​விதைகளின் அடுத்த பரிணா​மமான நவீனக் க​விதைகளைத் ​திரைப்​பாடலாக்கிய ​முன்னோடியாக அவர் இருந்​திருக்​கிறார். அவருடைய பாடல்​வரி​களின் அமைப்பு​முறை குறித்து தனி ஆய்வே மேற்​கொள்​ளலாம். அந்த அளவுக்கு மொழியை நுணுகி​யும்​ அணுகி​யும்​ பாடல்​களைக்​ கட்​டி​யிருக்​கிறார்​ அறிவுமதி.

- தொடர்​புக்கு: yugabhaarathi@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in