தமிழ்ஒளிக்கோர் ஒளி விளக்கு!
கவிஞர் தமிழ்ஒளி ஆவணப்படம் அவரது ஆளுமையை முழுமையாக நாம் உணரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர் பாரதி செல்வா. தமிழ்ஒளி படைப்புகளை, அவரது செயல்பாடுகளை முழுமையாக அறிந்து பாரதி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். அவரது அரும்பணி ஆவணப்படத்தில் பளிச்சிடுகிறது. தமிழில் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் முக்கியமான இடம் தமிழ்ஒளிக்கு உண்டு. அதை இந்த ஆவணப்படம் தெளிவுபடுத்துகிறது.
ஒரு படைப்பாளி மறைந்து அறுபது வருடங்கள் கழித்து அவரைப் பற்றிப் பேசுகிறோம். எந்த அளவு நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் பலரும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர்.
மார்க்சியமே தீர்வு என்பதை முழுமையாக உணர்ந்த கவிஞர் தமிழ்ஒளி. அவரது முதல் படைப்பில் இருந்து கடைசிப் படைப்பு வரை மார்க்சியத்தின் அடிப்படையிலேயே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உணர்விலும், சாதி ஒழிப்பிலும் மார்க்சிய அணுகுமுறையை அவர் கைக்கொண்டிருந்தார். இதை அவரது படைப்புகள் வழி உணரலாம்.
கோசல குமரிக்கான அவரின் முன்னுரையும், சிலப்பதிகார ஆய்வும் மேற்சொன்ன துணிபுக்கான சிறந்த சாட்சிகள். அவரது பிறந்த நூற்றாண்டில் ஒரு பெண் தானே இயக்கி, தானே தயாரித்து வெளியிட்டுள்ள ஆவணப் படம் கவிஞர் தமிழ்ஒளிக்குச் செலுத்தப்பட்ட மெய்யான அஞ்சலியாகக் கருதுகிறேன்.
பாரதி, கவிஞர் தமிழ்ஒளியின் உணர்வுகளை உள்வாங்கி ஆத்மார்த்தமாக இந்த ஆவணப் படத்தைப் படைத்துள்ளார். எழுத்தாளராக, இயக்குநராக, தயாரிப்பாளராக முப்பரிமாணத்துடன் இந்த ஆவணப் படத்தைப் படைத்துள்ளார் அவர். தொழிலாளர் வர்க்கமாக மனிதச் சமூகம் அணிதிரள வேண்டும். அத்தகைய வர்க்க ஒற்றுமையைத் தமிழர்கள் முன்னின்று வழி நடத்த வேண்டும். தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கான கூறுகள் தமிழ்ச் சமூகத்தில் உள்ளது.
சங்கத் தமிழ் இலக்கியங்கள் தொடங்கி முத்தமிழில் உள்ள படைப்புகள் அதற்குத் துணைபுரியும் என்று அறிவியல் பூர்வமாகக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியவர் தமிழ்ஒளி. அவரை உணர்வுபூர்வமாக காட்சிப் படுத்திய விதம் மிகவும் நேர்த்தியானது. ஆவணப்பட இயக்கத்தில் மார்க்சிய அழகியலை உணர்த்திய படம் இது. தமிழ்ஒளி குறித்து ஆவணப்படுத்த வேண்டிய விஷயங்கள் இன்னும் பல உள்ளன என்பதையும் இந்தப் படம் உணர்த்துகிறது.
- தொடர்புக்கு: spcsstn@gmail.com
