அன்றாடமும் பொருள் சேகரமும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 7

அன்றாடமும் பொருள் சேகரமும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 7
Updated on
2 min read

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.

அன்றாடம் என்ற இயற்கையின் காலப் பரிமாணத்திலிருந்து வரலாற்றுக் காலம் என்கிற காலப் பரிமாணத்துக்கு மானுடம் செல்ல முக்கியமான உந்துசக்தியாக இருந்தது பொருள் சேகரிப்பு. எல்லா உயிரினங்களும் உணவு, இனப்பெருக்கம் ஆகிய இரண்டு உயிரியல் தேவைகளை மையப்படுத்தி வாழ்கின்றன.

மானுடம் தன்னுணர்வு பெற்றபோது, நினைவுசேகரத்தின் மூலம் மொழிவயப்பட்ட சமூகம் ஆகியவற்றை உருவாக்கியபோது, உணவு, உடை, வசிப்பிடம் ஆகிய தேவைகள் இனப்பெருக்கத்துக்குத் தேவையான சமூக ஒழுங்குமுறைகளுடன் இணைந்து உருவாயின. அப்போதும்கூடப் பாதுகாப்பு, பகிர்ந்துகொள்ளுதல் என்ற அளவில் சகவாழ்வினை உருவாக்கிக்கொண்ட இனக்குழுக்கள் தோன்றினாலும், அவை உடனடியாகப் பொருள் சேகரிப்பு என்பதில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை.

கலஹாரி பாலைவனத்தில் வாழ்ந்த நாடோடி இனக்குழு ஒன்றின் வேட்டை​யாடுதலை 1956ஆம் ஆண்டு ஜான் மார்ஷல் என்பவர் ஆவணப்​பட​மாகப் பதிவுசெய்​தார். இந்த இனக்குழுவின் பெண்கள் கிழங்​கு​களைத் தோண்டி​யெடுப்​பார்கள், புதர்​களில் உள்ள சிறிய பழங்களைச் சேகரிப்​பார்கள். ஆண்கள் விலங்​குகளை வேட்டை​யாடச் செல்வார்கள். இந்தத் திரைப்படம் நான்கு ஆண்கள் வேட்டைக்குச் செல்வதைப் பின்தொடர்​கிறது. முதல் நான்கு நாட்கள் அவர்கள் விலங்​கு​களைத் தேடி அலைகிறார்கள். ஆங்காங்கே கிடைக்கும் கிழங்கு கனிகளைத் தின்ற​வண்ணம் திரிகிறார்கள்.

ஐந்தாவது நாளில் அவர்கள் ஒரு ஒட்டகச்​சி​விங்கி கூட்டத்தைக் காண்கிறார்கள். அவர்களில் ஒருவன் விஷம் தோய்ந்த அம்பினை ஒரு ஒட்டகச்​சி​விங்கியின் வயிற்றுப் பகுதியில் எய்வதில் வெற்றி பெறுகிறான். அது கூட்டத்​திலிருந்து விலகித் தனியாகச் செல்லத் தொடங்​கு​கிறது. அவர்கள் அதனைக் காலடித் தடத்தைக் கொண்டு பின்தொடர்​கிறார்கள். விஷம் பரவிய நிலையில் அது தள்ளாடி நிற்கிறது. அவர்கள் அதனைச் சூழ்ந்​து​கொண்டு கொல்கிறார்கள். அதன் மாமிசத்தை நான்கு பங்குகளாக அறுத்து எடுத்​துக்​கொள்​கிறார்கள். அவர்கள் குழுவுக்குத் திரும்​பிய​வுடன் அனைவரும் அந்த மாமிசத்தை அவர்கள் விதிமுறை​களின்படி பகிர்ந்து உண்கிறார்கள்.

மானுடச் சமூகங்கள் நிலையாக ஓரிடத்தில் தங்கி விவசாயம் செய்யத் தொடங்​கிய​போதுதான் நதிக்கரை நாகரி​கங்கள், பண்டங்​களின் பரிமாற்​றத்​துக்கான நகரங்கள் ஆகியவை தோன்றின. வர்த்​தகத்தை மேம்படுத்தத் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்​களில் நாணயங்கள் செய்யத் தொடங்​கி​னார்கள். இது ஆடைகள், கருவிகள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை வசதிப்படி வாங்கவும் விற்கவும் வழிவகை செய்தது.

அதேவேளை அது செல்வத்தைச் சேகரிக்கும் சாத்தி​யத்தை உருவாக்​கியது. உணவுப் பொருள்களை நீண்ட காலம் வைத்திருக்க முடியாது. வேறு எந்த ஒரு பண்டத்​தையும் அதிக அளவில் வெகுகாலம் வைத்திருக்க முடியாது. ஆனால், உலோக நாணயங்களை நீண்ட காலம் சேமித்து வைக்கலாம்.

தன்னுடைய உயிரியல் வாழ்நாள் காலத்​துக்குப் பிறகு தனக்கான தொடர்ச்சி இல்லையே என்று பரிதவித்த தன்னுணர்வு பெற்ற சுயம், இவ்வாறு பொருளைச் சேகரித்துத் தன் பிள்ளைகளை விட்டுச்​செல்லும் சாத்தி​யத்தைக் கண்ணுற்றது. இது மெல்ல உடைமைச் சமூகத்​துக்கு வழிவகுத்தது. செல்வந்​தர்கள், வறியவர்கள் என்கிற பாகுபாடு சாத்தி​ய​மானது. நான்கு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பெருமை​யுடன் ஒருவரது பொருள் சேகரிப்பைப் பாராட்டுவது சாத்தி​ய​மானது. அன்றாடத்தில் கரைந்​து​போகும் உழைப்பின் மதிப்பைப் பொன்னாகச் சேகரித்து எதிர்​காலத்​துக்குக் கடத்தும் வழி பிறந்தது.

எதிர்த்திசையில் அன்றாடம் தங்கள் உணவுக்காக வேலை செய்பவர்கள் ‘அன்றாடம் காய்ச்​சிகள்’ என்று பெயர் சூட்டப்​பட்​டார்கள். அவர்களிடம் சேமிப்பு இல்லை, பொருள் சேகரம் இல்லை என்பதால் அது மரியாதைக் குறைவாக, ஏன் இழிவாகக்​கூடக் கருதப்​பட்டது. அன்றாடம் வேலை செய்து, ஏதேனும் கூலி பெற்றுக் கூழ் காய்ச்சிக் குடித்து வயிற்றை நிரப்பு​வதால் ‘அன்றாடம் காய்ச்​சிகள்’ என்று அறியப்​
பட்​டார்கள்.

எழுத்​தாளர் ஜி.நாக​ராஜன் நகரத்துக் குடிசைப் பகுதியில் வாழும் உதிரி உழைப்​பாளர்களான தம்பதியரை வைத்து இலக்கிய​வா​திகள் மத்தியில் புகழ்​பெற்ற ஒரு நாவலை எழுதி​னார். அதன் தலைப்பு ‘நாளை மற்றுமொரு நாளே’. அதில் என்ன அதிசயம், இயற்கையின் மடியில் ஒவ்வொரு நாளும் மற்றுமொரு நாள்தானே என்று கேட்கலாம்.

ஆனால், அவர் விளிம்பு நிலையில் வாழ்பவர்​களுக்கு எதிர்கால நோக்கு என்பது சாத்தி​யமற்று இருப்​பதைக் குறிக்கவே நாளை மற்றுமொரு நாள்தான் என்று சொன்னார். அந்த நாவலின் கதாநாயகன் கந்தன் அடியாள் வேலை உள்படப் பல தரகு வேலைகளைப் பார்ப்​பவன்; அவன் ‘சேர்த்​துக்​கொண்ட மனைவி’ பாலியல் தொழிலாளி. இவர்கள் வாழ்க்கை இலக்கின்றி அன்றாடம் எதையாவது செய்து வயிற்றை நிரப்புவதாக இருக்​கிறது.

அதாவது எதிர்​காலம் என்பது பொருள் சேகரிப்பது, வாழ்க்கை வளம் பெறுவது என்று அர்த்தம் பெறுகை​யில், இவர்களுக்கு எதிர்​காலம் என்று எதுவும் இல்லை என்பதாலேயே நாளை மற்றுமொரு நாளே என்ற வெறும் காலச்​சுழற்​சியாக இருக்​கிறது. மக்கள் பேச்சில் ‘காலம் வரும்’ என்பதே எதிர்கால வாழ்க்கை மேம்படும் என்ற பொருள் சேகரம் சார்ந்த நம்பிக்கை​தான். பட்டுக்​கோட்டை கல்யாணசுந்தரம் பாடலில், ‘காடு விளைஞ்​சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்’ என்று பெண் கேட்க, ‘காடு விளையட்டும் பொண்ணே நமக்குக் காலம் இருக்குது பின்னே’ என்று பதில் சொல்லும் ஆண் குரல்.

அதேபோலப் புதிதாகத் தொழில் தொடங்கி வெற்றி காணத் தொடங்கும் சகோதரியும் சகோதரனும் ‘எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே’ என்று பாடுவார்கள். எனவே, அன்றாடத்​துக்கு அப்பாலான எ​திர்​காலம் ​கொண்ட வரலாற்றுக் ​காலம் என்பது பொருள் சேகரமே என்று கருதப்​படுகிறது.

- தொடர்புக்கு: rajankurai@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in