பெட்ரோ பராமோ: நாவலும் சினிமாவும்

பெட்ரோ பராமோ: நாவலும் சினிமாவும்
Updated on
3 min read

வெளியான காலத்திலிருந்தே (1955) ‘பெட்ரோ பராமோ’ இலக்கியச் சூழலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வந்திருக்கிறது. உண்மையான அர்த்தத்தில் இதுவொரு செவ்வியல் இலக்கியம் என்று ‘பெட்ரோ பராமோ’வுக்கு எழுதிய முன்னுரையில் சூஸன் சாண்டாக் குறிப்பிடுகிறார். உலக இலக்கியத்தின் சிறந்த படைப்புகளுள் ஒன்று என போர்ஹேஸ் இந்த நாவலைக் கொண்டாடுகிறார். தன்னுடைய ‘ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’ நாவலை எழுதும் ஆவலை பெட்ரோ பராமோவிடம் இருந்தே பெற்றதாக மார்க்குவேஸ் கூறுகிறார். பெட்ரோ பராமோ இல்லாமல் போயிருந்தால் ராபெர்தோ பொலனோவின் ‘2666’ உருவாகியிருக்காது.

பராமோ எனும் ஸ்பானிய வார்த்தைக்குப் பாழ்நிலம் என்று அர்த்தம். ஏறத்தாழ ஜேம்ஸ் ஜாய்ஸின் பாழ்நிலம் போலவே ஒவ்வொரு வாசிப்பிலும் புதிய அர்த்தங்களை, புதிய திறப்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதே பெட்ரோ பராமோவின் சிறப்பு. வெகு சமீபத்தில், இந்த நாவலின் திரைவடிவம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. பேபல், புரோக்பேக் மௌண்டைன் போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களின் ஒளிப்பதிவாளரான ரொட்ரிகோ ப்ரீடோ இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

கற்பனை நகரம்

கோமாலா எனும் கற்பனையான நகரத்தைக் களமாகக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டுள்ளது. மிக எளிய கதைக்களம். என்றாலும் சொல்முறையில் தனக்கெனத் தனித்த அடையாளத்தை வரித்துக்கொள்கிறது ‘பெட்ரோ பராமோ’. மரணத்தறுவாயில் இருக்கும் தன் தாயிடம், ‘தந்தையைச் சென்று பார்த்துத் தங்களுக்கு உரிமையானதைக் கேட்டுப்பெறுவதாக’ யுவான் ப்ரீஸியாடோ ஒரு சத்தியம் செய்கிறான். ஆனால், கோமாலாவுக்கு அவன் வரும்போது அது கைவிடப்பட்ட நிலமாக இருக்கிறது. இறந்தவர்கள் மட்டுமே அந்நகரத்தில் வசிக்கிறார்கள். அவர்களின் கனவுகள், விருப்பங்கள், நினைவுகளின் வழியே காலம் தடங்கல் ஏதுமின்றி ஒரு பிரக்ஞையிலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டேயிருக்கிறது. ஒரு கிரேக்கத் துன்பியல் நாடகம்போல யுவான் தொடர்ந்து இறந்தவர்களோடு உரையாடுகிறான். எது நிகழ்காலம் அல்லது எது இறந்தகாலம் என்ற குழப்பம் நமக்கு உண்டாகிறது. நம்மை அச்சத்தில் ஆழ்த்தி மூச்சுமுட்ட வைக்கிறது. வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே நிலவும் மெல்லிய இடைவெளியில் கதைமாந்தர்கள் முன்னும்பின்னுமாக அலைந்து திரிகிறார்கள், அவர்களோடு நாமும் அலைகிறோம்.

நாவல் இரண்டு பயணங்களின் தொகுப்பாக விளங்குகிறது. அல்லது ஒரே பயணம் பிற்பாடு இரண்டாகக் கிளை பிரிகிறது. முதலாவதாக, தந்தையைத் தேடிக் கிளம்பும் யுவான் ப்ரீஸிடியோவின் பயணம். தன் தாயின் கனவுகளில் இருந்த அவளுடைய இளமைப்பருவத்தில் அவள் வசித்த கோமாலாவைத் தேடி அவன் வருகிறான். ஆனால், ஒரு பேய் நகரைத்தான் அவன் எதிர்கொள்கிறான். இறந்தகாலத்தின் கோமாலாவில் மனிதர்கள் உயிர்ப்போடு இருக்கிறார்கள். நிகழ்காலத்திலோ இறந்தவர்கள் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள். அந்த நகரம் முழுக்க எதிரொலிகளால் நிறைந்திருக்கிறது. பிறகு யுவானும் இறக்கிறான். ஆனால், அவனது மரணம் நிகழவேயில்லை என்பதுபோல நாவல் வேறொரு திசையில் பயணிக்கத் தொடங்குகிறது.

இந்த இரண்டாவது பயணம் நேராக நரகத்தின் நுழைவாயிலுக்கு (கோமாலா அங்குதான் அமைந்துள்ளது) நம்மை இட்டுச்செல்கிறது. மிகவும் அடர்த்தியான ஒலிகளும் எதிரொலிகளும் மட்டுமே நிறைந்திருக்கும் நரகம். இல்லாத குழந்தையை எப்போதும் சுமந்தலையும் டோரோதியாவின் பார்வையில் விரியும் இந்தப் பகுதி பெட்ரோ பராமோவின் மகத்தான காதலையும் கோமாலாவின் அழிவையும் பேசுகிறது.

காட்சிகளாக விரியும் நாவல்

இந்த இரண்டு பயணங்களையும் தெளிவாகக் காட்சிப்படுத்துவதில் ப்ரீடோ வென்றிருக்கிறார் என்றே சொல்லலாம். திரைப்படங்களுக்கான அடிப்படை அழகியலை விட்டுத்தராமல் நாவலின் உள்ளடக்கமும் சிதையாமல் மிகப்பிரமாதமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கோமாலா எனும் பேய் நகரமும் அதன் நிலவியலும் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. மலை இறக்கங்கள், பாளம்பாளமாக வெடித்துக் கிடக்கும் நிலம், கைவிடப்பட்ட கட்டிடங்கள், தேவாலயம், வயல்வெளிகள், மெடியா லூனா என நாவலில் வாசித்த களங்கள் யாவும் கண்முன்னே காட்சிகளாக விரியும்போது பிரமிப்பாக இருக்கிறது. கொள்கலனிலிருந்து சொட்டும் நீர் சுவரிடுக்கில் வளர்ந்திருக்கும் இலையின் மீது சொட்டுவதாக நாவலில் வரும் காட்சியைக்கூட வரி மாறாமல் பிரமாதமாக எடுத்திருக்கிறார்கள்.

படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், ரொட்ரிகோ ப்ரீடோ அதன் ஒளிப்பதிவையும் கவனித்திருக்கிறார். திரைப்படத்தின் தொடக்கத்தில் மரணத்தால் சூழப்பட்ட நகரத்துக்குப் போகும் புழுதிபடர்ந்த சாலைக்குள் யுவான் ப்ரீஸிடியோவும் கழுதையோட்டி அபுண்டியோவும் நடக்கும்போது, அவர்களோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம். இறுதியில், வெறும் கற்குவியலைப் போல பெட்ரோ பராமோ சரிந்துவிழும் தருணத்திலும் அந்தத் துயரத்தின் சாட்சியாக நாமும் அங்கு வீற்றிருக்கிறோம். பார்வையாளனைத் திரைப்படத்துக்கு நெருக்கமாக உணரவைப்பதில் ப்ரீடோவின் ஒளிப்பதிவு பெரும்பங்காற்றி இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கால மெக்ஸிகோவில் நிகழும் கதையாதலால், அபாரமான கலை வடிவமைப்பால் அந்தக் காலக்கட்டத்தை நல்ல முறையில் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார்கள்.

பெட்ரோ பராமோவில் காலம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. நேர்க்கோட்டில் இல்லாத, உடைந்த, கடல் அலையைப் போல முன்னும்பின்னுமாக வந்துபோகும் காலம். கோமாலாவில் இறந்தவர்களைக் கடந்தகாலம் விடாமல் துரத்துகிறது. நிகழ்காலத்தில் இனிமேலும் தங்களால் பங்குகொள்ள முடியாது எனும் துயரம் ஒரு பாரமாக அவர்களின் மீது கவிகிறது. எனவே, தங்களுடைய கடந்தகாலத்தை அவர்கள் மீண்டும் மீண்டும் நிகழ்த்திப்பார்க்கிறார்கள். அவையே அவர்களின் முணுமுணுப்புகளாக, புலம்பல்களாக, குறைகளாக, அர்த்தமற்ற பேச்சுகளாக மாற்றுகின்றன. இறுதியில், யுவான் ப்ரீஸிடியோவின் மரணத்திற்கும் அவையே காரணமாகின்றன. ஒரு காட்சியில் யுவானுக்கு அருகில் படுத்திருக்கும் பெண் அப்படியே கரைந்து சேற்றுக்குழம்பாக மாறிவிடுவாள். திரைப்படத்தில் அந்தக் காட்சியைப் படமாக்கியிருக்கும் விதம் மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது.

தெளிவான திரைக்கதை

நாவலில் பூடகமாகச் சொல்லப்படும் இடங்களை, வெவ்வேறு தளங்களை ஒன்றிணைக்கும் கண்ணிகளைப் புரிந்துகொள்ளத் திரைப்படம் பெரிதும் உதவியாக இருக்கக்கூடும். அவ்வளவு தெள்ளத்தெளிவான திரைக்கதை. பார்வையாளர்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக ஒருசில இடங்களைக் கூட்டியும் குறைத்தும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், எவ்விதத்திலும் நாவலோடு அது முரண்படுவதில்லை. சட்டென்று மனதில் தோன்றும் மூன்று காட்சிகளை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். இளம்பெண்ணாக ஊரை விட்டுக் கிளம்பும் சூஸன்னாவையும் அவளின் இறுதி ஊர்வலத்தையும் ஒன்றிணைப்பது. ஆளில்லாத ஊர்ச் சதுக்கத்தில் மயங்கிவிழும் யுவான், பிற்பாடு ஊரின் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடந்துவருவது, அபுண்டியோவின் காது எப்படி செவிடாகிறது எனும் காட்சி, இதில் எதுவுமே நேரடியாக நாவலில் சொல்லப்படாத காட்சிகள். திரைவடிவம் மேலெழுந்து வரும் தருணங்கள் என இவற்றைக் குறிப்பிடலாம்.

கால மாற்றங்களைச் சரியான முறையில் பதிவுசெய்யும் நான் -லீனியர் திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள் தேர்வு, மௌனத்தையும் திரைப்படத்தின் ஒரு இசையாகப் பயன்படுத்தியிருக்கும் விதம் என நாவலுக்கு எல்லாவிதத்திலும் நியாயம் செய்யும்விதமாக இந்தத் திரைப்படம் அமைந்திருக்கிறது. மொத்தத்தில், அற்புதமான ஒரு நாவலை அதன் ஆன்மாவைப் பின்தொடர்ந்து மிகச்சரியான திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது ‘பெட்ரோ பராமோ’.

- எழுத்தாளர்

‘பெட்ரோ பராமோ’ மொழிபெயர்ப்பாளர் தொடர்புக்கு: karthickpandian@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in