ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பில்... 279 ஆண்டுகளுக்கு முந்தைய புதுச்சேரி புயல்!

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பில்... 279 ஆண்டுகளுக்கு முந்தைய புதுச்சேரி புயல்!
Updated on
2 min read

புயல், புதுச்சேரிக்குப் புதிதல்ல. கடந்த காலங்களில் தானே, வர்தா, கஜா எனப் பல புயல்களைச் சந்தித்துள்ளது புதுச்சேரி. குறிப்பாக, 1916 நவம்பரில் வீசிய புயற்காற்று குறித்து பாரதி எழுதிய ‘புயற்காற்று’, ‘பிழைத்த தென்னந்தோப்பு’, ‘மழை’ ஆகிய கவிதைகள் குறிப்பிடத்தகுந்தவை. மேலும், 279 ஆண்டு​களுக்கு முன்பு வீசிய புயற்​காற்று புதுச்​சேரியைப் புரட்டிப் போட்டிருக்கிறது.

இது பற்றித் தனது நாட்குறிப்​பில், பத்திரி​கை​யாளர் போன்று வர்ணனை​யுடன் பதிவு செய்திருக்​கிறார் ஆனந்தரங்​கப்​பிள்ளை: “1745 நவம்பர் 4 அற்பிசி 21 வியாழக்​கிழமை, அஸ்தமித்​தவுடனே துவக்கி, பெருங்​காற்​றடித்தது. அந்தக் காற்று வியாழக்​கிழமை நாள் ராத்திரி முப்பது நாழிகையும் அடித்தது. ஆனால், இந்தக் காற்றினுடைய பிரதாபம் இன்னமட்​டென்று ஒருவித​மாய்ச் சொல்லக்​கூ​டாது.

அதெப்படி யென்றால், இந்த முப்பது நாழிகைக்​குள்ளே பட்டணத்திலே ஒரு மரமாகிலும் தப்பவி​டாமல் ஊரிலே உண்டான மரங்களெல்லாம் படுகாடாய் விழுந்​து​போனதும், சிறிது மரங்களை முறித்துப் போட்டதும், அதுவுமல்​லாமல் பட்டணத்​துக்​குள்ளே தோட்டந் துரவுகள், தென்னை மரம், மா மரங்கள் எப்பேர்ப்பட்ட மரமும் ஒன்றாகிலும் தப்பாமல் படுகாடாய் விழுந்து போச்சுது. அதினாலே வெகுபேர் கெட்டுப்​போ​னார்கள்.

இதல்லாமல் உப்பாற்றிலே அவரவருக்கு மனைவிட்டு, அவரவர்கள் கல்வீடும் கூரைவீடுமாய் அவரவர் சக்திக்கான சரமாய்க் கட்டிக்​கொண்டு குடியிருந்​தார்கள். அப்படி​யிருக்கச்சே இந்தப் பெருங்​காற்றிலே மேல்வெள்ளம் வந்து உப்பாற்றுத் தண்ணீர் வெளியே போகத்​தக்​க​தாய்க் கட்டி​யிருந்த மதகு மூடியிருக்​கச்சே அந்த மதகைப் பிடுங்​கிக்​கொண்டு அந்த வெள்ளம் ஓடிட்று.

அந்த வெள்ளத்திலே வீடுகள் வந்து விழுந்து உப்பாற்றிலே கட்டி​யிருந்த வீடுகள் பேரிலே ஒருமுழ வெள்ளம் வந்து விழுந்து அங்கே கட்டி​யிருந்த மூன்று தெருவும் படுகாடாய் விழுந்​து போய் வீடுகள் வெள்ளத்திலே முழுகிப்போய் அந்த வெள்ளத்திலே வீடுகளை அடித்துப் போனதும், மாடுகள் கன்றுகள் செத்ததும், மனுஷர் செத்ததும் இப்படியாக வெகு சேதப்​பட்டு அந்த வெள்ளம் இப்படி பட்டணத்து மேலே திரும்​பினபடி​யினாலே பள்ளத்துத் தெருக்​களி​லேயெல்லாம் அரை மட்டும் தண்ணியும் பெருந்துடை மட்டும் தண்ணியும் நின்றபடி​யினாலே பள்ளத்​தாக்கிலே யிருந்த வீடுகளெல்லாம் அநேகமாய் விழுந்து போச்சுது.

இதல்லாமல் இந்தக் காற்றிலே காக்காய், குருவிகள், பின்னை​யுமிருக்​கப்பட்ட தோட்டந் துரவுகள் சகலமும் அடியோடே விழுந்து போய்விட்டது. வீடு வாசல்​களும் அநேகஞ் சேதம். இதல்லாமல் அவரவரது வெளியிலே​யிருக்​கப்பட்ட ஆடுமாடுகள் ஒன்றாகிலும் தப்பிப்​பிழைப்பதற் கிடமில்​லாமல் தரந்தரமாய் உளைந்து போச்சுது.‌

அந்தச் செத்த ஆடுகளைப் பட்டணத்​துக்​குள்ளே அவரவர் வாங்கி வந்து வீடுகளிலே காயப்​போட்ட படியினாலே அதுகள் காய்கிறதுக்கு இடமில்​லாமல் மழையிலே நனைந்து பட்டணமெல்லாம் தெருவுக்குத் தெரு பிண நாற்றமாய் இரண்டு மூன்று நாள் மட்டுக்கும் வீதியிலே புறப்​படக்​கூ​டாமல் இப்படி அவஸ்தைப்​பட்டுப் போச்சுது.

ஆனால், திருவுள எத்தனத்தாலே பொழுது விடிந்​தவுடனே காற்றும் மழையும் நின்று​போனபடி​யினாலே ஒரு சாமத்​துக்​குள்ளே எல்லா தண்ணீரும் வாங்கிப்போய் அவரவர் வீடு வாசலும் தப்பித்​ததல்​லாமல் மறுநாளைக்கும் அப்படிக் காற்று அடித்​ததால் பட்டணத்திலே ஒரு வீ​டாகிலும் தப்ப ​மாட்​டாது... சுவாமி ​காத்​தார்​.”

- தொடர்புக்கு: Writer.senguttuvan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in