நிதிக் குழு தமிழகத்துக்கு நியாயம் வழங்குமா?

நிதிக் குழு தமிழகத்துக்கு நியாயம் வழங்குமா?
Updated on
3 min read

நவம்பர் 18 அன்று சென்னைக்கு வருகை தந்த 16 ஆவது நிதிக் குழுவிடம் தமிழகத்துக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. அதற்கான காரணங்களை விரிவாக விளக்கவும் செய்தது. ஒரு மாநில அரசு அதிக நிதி கேட்பது வழமைதானே என்று பலர் இதைக் கடந்து போய்விட்டார்கள். வெகு சிலர், நிதிக் குழுவின் ஒதுக்கீடு தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினை என்று சொல்வதையும் கேட்க முடிந்தது. இது அப்படியான பிரச்சினைதானா? இது வெகுமக்களை எந்த அளவுக்குப் பாதிக்கும்?

எப்படி நடக்கிறது நிதிப் பகிர்வு? - இப்போது, மத்திய அரசுதான் மூன்றில் இரண்டு பங்கு வரிகளை வசூலிக்​கிறது. ஆனால், மூன்றில் ஒரு பங்கு செலவினங்​கள்தான் அதன் கீழ் வருகின்றன (பாது​காப்பு, அயலுறவு, பேரிடர் நிவாரணம் முதலியன). மாறாக, மாநிலங்​களுக்கு வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கே கிடைக்​கிறது. ஆனால், அவை மூன்றில் இரண்டு பங்கு செலவினங்களை (சுகா​தாரம், கல்வி, சமூகநலம், உள்கட்​டமைப்பு, வேளாண்மை, வட்டி முதலியன) எதிர்​கொள்​கின்றன. இந்தக் கூடுதல் செலவினங்களை எதிர்​கொள்ள, மாநிலங்​களி​லிருந்து பெற்ற வரி வருவாயில் ஒரு பங்கை மாநிலங்​களுக்கு மத்திய அரசு வழங்கு​கிறது.

இந்தப் பங்கை நிர்ண​யிப்​பதுதான் நிதிக் குழுவின் பணி. நமது அரசமைப்புச் சட்டத்தின் 280ஆவது பிரிவின்படி, ஐந்தாண்​டுக்கு ஒரு முறை நிதிக் குழு நிறுவப்பட வேண்டும். 15ஆவது நிதிக் குழு (2021-26) நிர்ண​யித்​த​படியே இப்போதைய வரி வருவாய் பகிரப்​படு​கிறது. 16ஆவது நிதிக் குழு, 2026-31 காலக்​கட்​டத்​துக்கான நிதிப் பகிர்வை நிர்ண​யிக்​கும். இந்தக் குழு தனது அறிக்கையை அடுத்த ஆண்டு அக்டோபரில் சமர்ப்​பிக்​கும்.

முதற் கட்டப் பகிர்வு: நிதிப் பகிர்வின் முதல் கட்டம், வரி வருவாயில் எத்தனை சதவீதம் மாநிலங்​களுக்கு ஒதுக்​கப்பட வேண்டும் என்று நிர்ண​யிப்பது. இதற்குச் செங்குத்துப் பகிர்வு (Vertical Devolution) என்று பெயர். 15ஆவது நிதிக் குழு மொத்த வரி வருவாயில் 41% மாநிலங்​களுக்கு வழங்கப்பட வேண்டு​மென்று விதித்தது. ஆனால், கடந்த நான்கு ஆண்டு​களில் மாநிலங்​களுக்கு 33% தான் கிடைத்தது என்று நிதிக் குழுவினரிடம் சுட்டிக்​காட்​டி​னார், தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின்.

8% நிதி எப்படிக் குறைந்தது? - மத்திய அரசு, மாநில அரசுகளுடன் பகிர்ந்​து ​கொள்ளத் தேவையற்ற சில ‘சிறப்பு வரிகள்’ இருக்​கின்றன. இவை ‘மேல் வரி’ (cess), ‘கூடுதல் கட்டணம்’ (surcharge) என்பன. கடந்த சில ஆண்டுகளாக வரி வருவாயின் கணிசமான பகுதியைச் சிறப்பு வரிகளின் கீழ் கொண்டு​ வந்​து​விட்டது மத்திய அரசு. 2012 இல் 10% ஆக இருந்த சிறப்பு வரிகள், 2019க்குப் பிறகு 20% வரை உயர்ந்​து​விட்டன. இதனால் மாநிலங்​களிடையே பகிர்ந்​து​கொள்ள வேண்டிய நிதி குறைந்தது. மாநிலங்​களுக்கான நிதி ஒதுக்​கீடும் குறைந்தது. இந்தச் சிறப்பு வரிகளுக்கு 10% உச்சவரம்பு விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிதிக் குழுவிடம் கோரிக்கை​விடுத்​திருக்​கிறது.

மேலும், சமீப ஆண்டு​களில் மத்திய அரசுக்கு வரி அல்லாத வருவாய் பல்வேறு வழிகளில் வருகிறது. ரிசர்வ் வங்கியின் சேமிப்பு, பொதுத் துறை நிறுவனங்​களின் பங்கு விற்பனை, அவற்றி​லிருந்து கிடைக்கும் ஈவுத் தொகை முதலியன. இவற்றையும் மாநிலங்​களோடு பகிர்ந்​து​கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்​திருக்​கிறது தமிழக அரசு.

இப்போதுள்ள 41% வரிப் பகிர்வை 50%ஆக உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை​களில் முதன்​மை​யானது. பல மாநில அரசுகள் இதே கோரிக்கையை முன்வைத்த​போதும் தமிழக அரசுதான் இதைக் காரண காரியங்​களோடு வாதிட்டது என்று பாராட்​டினார் நிதிக் குழுவின் தலைவர் டாக்டர் அரவிந்த் பனகரியா.

இரண்டாம் கட்டப் பகிர்வு: நிதிப் பகிர்வின் இரண்டாம் கட்டமாக ஒவ்வொரு மாநிலத்​துக்கும் எவ்வளவு நிதி பகிர்ந்​தளிக்​கப்பட வேண்டும் என்றும் ஆணையம் பரிந்​துரைக்​கும். இதற்குக் கிடக்கைப் பகிர்வு (Horizontal Devolution) என்று பெயர். இதற்கான அடிப்​படையாக, 6ஆவது நிதிக் குழு (1974-79) முதல் 14ஆவது நிதிக் குழு (2015-20) வரை, 1971ஆம் ஆண்டின் மக்கள்​தொகையே கணக்கில் கொள்ளப்​பட்டது. மக்கள்​தொகைக் கட்டுப்பாடு ஒரு தேசியக் கொள்கையாக முன்னெடுக்​கப்பட்ட 1970க்குப் பிறகு, மக்கள்​தொகையைக் கட்டுப்​படுத்திய மாநிலங்கள், குறிப்​பாகத் தென் மாநிலங்கள், பாதிக்​கப்​ப​டாமல் இருப்​ப​தற்​காகவே இந்த ஏற்பாடு.

ஆனால், 15ஆவது நிதிக் குழு (2021-26), மத்திய அரசின் அறிவுறுத்​தலின் (Terms of Reference-ToR) பேரில் 2011 மக்கள்​தொகையை அடிப்​படையாக எடுத்​துக்​கொண்டது. இது தென் மாநிலங்​களின் மீது பேரிடியாக இறங்கியது. அவை பெருங் குரலெடுத்து முறையிட்டன. அப்போது, மக்கள்​தொகையைப் போலவே மக்கள்​தொகைக் கட்டுப்​பாடும் கணக்கில் கொள்ளப்​படும் என்று நிதிக் குழு வாக்குறுதி நல்கியது. ஆனால் நடந்தது வேறு.

15ஆவது நிதிக் குழு, நிதிப் பகிர்​வுக்​காகப் பின்வரும் ஆறு அம்சங்​களைக் கணக்கில் கொண்டது: 1.மாநிலங்​களின் மக்கள்தொகை - 15%; 2. மக்கள்​தொகையைக் கட்டுப்​படுத்து​வதில் மாநிலங்​களின் செயல்பாடு - 12.5%; 3. வருமான இடைவெளி (Income Distance) - 45%; 4. வனம், சுற்றுச்​சூழல் - 10%; 5. வரி வசூலில் மாநிலங்​களின் திறன் - 2.5%; 6. மாநிலங்​களின் பரப்பு - 15%. இதன்படி முதல் அம்சம், மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்​களுக்குச் சாதகமானது.

இரண்டாம் அம்சத்தில் தென் மாநிலங்​களுக்குக் கூடுதல் புள்ளிகள் கிட்டி​யிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்க​வில்லை. இதைக் கணக்கிடும் சூத்திரத்தில் 2011 மக்கள்​தொகையைப் பயன்படுத்​தியது நிதிக் குழு. விளைவு? மக்கள்​தொகையைக் கட்டுப்​படுத்திய தமிழகத்​துக்கு 10 புள்ளி​களும், கட்டுப்​படுத்தாத உத்தரப் பிரதேசத்​துக்கு 12.5 புள்ளி​களும் கிடைத்தன.

மூன்றாவது அம்சம், வருமான இடைவெளி. இது வருவாய் குறைவான மாநிலங்​களுக்குக் கூடுதல் நிதி வழங்கு​வதற்காக ஏற்படுத்​தப்​பட்டது. இந்த அம்சத்தைக் கணக்கிடும் சூத்திரத்​திலும் 2011 மக்கள்​தொகையைப் புகுத்​தியது நிதிக் குழு. விளைவாக, உத்தரப் பிரதேசம் 27 புள்ளி​களையும் தமிழகம் வெறும் 2 புள்ளி​களையும் பெற்றன.

இப்படியாக, முதல் மூன்று அம்சங்​களும் (72.5% ஒதுக்​கீடு) மக்கள்தொகை அதிகமுள்ள, அவற்றைக் கட்டுப்​படுத்தாத மாநிலங்​களுக்குச் சாதகமாக அமைந்தன. கடைசி மூன்று அம்சங்​களும் அதிகப் பரப்பும் அதிக வனங்களும் உள்ள மாநிலங்​களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்தன. மேற்படி பங்கீட்​டின்படி ஐந்து தென் மாநிலங்​களுக்கும் சேர்த்து 13.7% நிதியை ஒதுக்கிய 15ஆவது நிதிக் குழு, உத்தரப் பிரதேசம் என்னும் ஒரு மாநிலத்​துக்கு மட்டும் 17.94% நிதியை ஒதுக்​கியது.

சமச்சீர் பரிந்துரை: கோரிக்கையில் தமிழகத்தோடு வேறு எந்த மாநிலத்​தையும் ஒப்பிட்டு நிதிப் பகிர்வில் உள்ள ஏற்றத்​தாழ்வை எடுத்​துக்​காட்​ட​வில்லை. மாறாக, 9ஆவது நிதிக் குழு தமிழகத்​துக்குப் பரிந்​துரைத்த 8% பங்கீடு, படிப்​படி​யாகக் குறைந்து, 15ஆவது நிதிக் குழுவில் 4%ஆக வீழ்ந்​து​விட்​டதைச் சுட்டிக்​காட்​டியது. ஆகவே, 2011க்குப் பதிலாக மீண்டும் 1971 மக்கள்​தொகையைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் அதன் நியாயங்​களையும் வற்புறுத்​தியது. கூடவே, வரிப் பகிர்வினை முறைப்​படுத்த சமச்சீரான அணுகுமுறை தேவை என்றும் வலியுறுத்​தியது.

அதற்காகப் பின்வரும் ஐந்து அம்சங்கள் அடங்கிய பகிர்வினை முன்மொழிந்தது: 1. மாநிலங்​களின் மக்கள்தொகை (1971) - 20%; 2. மக்கள்​தொகையைக் கட்டுப்​படுத்து​வதில் மாநிலங்​களின் செயல்பாடு - 20%; 3. வருமான இடைவெளி - 35%; 4. நாட்டின் பொருளா​தா​ரத்​துக்கு மாநிலத்தின் பங்களிப்பு - 15%; 5. நகரமயம் -10% மேலும், தமிழ்நாடு சந்தித்து​வரும் மூன்று சவால்​களைக் குறிப்​பிட்டார் முதல்வர்.

முதலா​வதாக, கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு எதிர்​கொண்டு​வரும் இயற்கைப் பேரிடர்கள், அவற்றுக்கான நிவாரணப் பணிகள். இரண்டாவதாக, தமிழகத்தில் பிள்ளைப்பேறு குறைந்​து​வரு​வதால் அதிகரித்து​வரும் முதியோரின் எண்ணிக்கை, அது தொடர்பான சமூகநலத் திட்டங்கள். மூன்றாவதாக, தமிழகம் வேகமாக நகர்மயமாகி வருகிறது; அது தொடர்பான உள்கட்​டமைப்புச் செலவினங்கள்.

தமிழகம் போன்று வளர்ந்​து​வரும் மாநிலங்​களுக்கு நிதியைக் குறைத்து வளர்ச்சி குன்றிய மாநிலங்​களுக்கு மடைமாற்றும் போக்கு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்​சி​யையும் பாதிக்​கும். இதை நிதிக் குழு உறுப்​பினர்கள் அறியாதவர்கள் அல்லர். மக்கள்தொகை மிகுந்த, வளர்ச்சி குன்றிய மாநிலங்​களுக்கு நிதி ஒதுக்கும் அதே வேளையில், மக்கள்​தொகையை மட்டுப்​படுத்திய வளர்ந்​து​வரும் தமிழகம் போன்ற மாநிலங்​களுக்குப் போதிய நிதிப் பகிர்வை 16ஆவது நிதிக் குழு பரிந்​துரைக்கும் என்று நம்புவோம்.

தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக இயக்கங்​களும் மக்கள் மன்றத்தில் இதுகுறித்து தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். அச்சு, காட்சி ஊடகங்​களும், சமூக ஊடகங்​களும் இதைக் குறித்து தொடர்ந்து விவா​திக்க வேண்டும். அது நியாயமான நிதிப் பகிர்​வுக்கு வழிவகுக்​கும்.

- தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in