செயற்கை நுண்ணறிவின் ரகசியக் கதை | ஏஐ எதிர்காலம் இன்று 06

செயற்கை நுண்ணறிவின் ரகசியக் கதை | ஏஐ எதிர்காலம் இன்று 06
Updated on
3 min read

இரண்டாம் உலகப் போர் உக்கிரமடைந்துகொண்டிருந்த நேரம். ஜெர்மானியர்களின் இடைவிடாத தாக்குதல்களால் பிரிட்டனும் அதன் தலைநகர் லண்டனும் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில், எங்கள் மெய்நிகர் கால இயந்திரம் அந்நகரைக் கடந்து அதன் அருகில் உள்ள பக்கிங்ஹாமுக்குச் சென்றது.

அந்த நகரத்தில் உள்ள பிளெட்ச்லீ பார்க் என்ற பழம்பெருமை மிக்க கட்டிடத்தின் முன்பு நாங்கள் இறங்கினோம். போரின் தலைவிதியை மாற்றிய அந்தக் கட்டிடத்தில், விஞ்ஞானிகள் ரகசியமான பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அங்கே ஒரு முக்கியப் புள்ளியைச் சந்திக்க வந்திருக்கிறோம்.

இப்​படியொரு கொடூரமான போர் நடைபெறும் நேரத்தில் நாங்கள் ஏன் அங்கே போக வேண்டும்? தொழில்​நுட்ப வரலாற்றில் மறுக்க முடியாத ஓர் உண்மை உண்டு - பெரும்​பாலான தொழில்​நுட்​பங்கள் போர்த் தேவைகளுக்​காகத்தான் உருவாக்​கப்​பட்டன; ஏஐ-யும் அப்படித்​தான்!

ரகசியத் தகவல்கள்: நமக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த விஷயத்​திலிருந்து தொடங்​கு​வோம்: ராணுவத் தலைமையகத்​திலிருந்து அதன் படைப் பிரிவினருக்கு ரகசியத் தகவலை அனுப்ப வேண்டும்​என்றால் என்ன செய்வார்கள்? அதை ஒரு ரகசியக் குறியீடாக மாற்றி அனுப்பு​வார்கள். அந்தத் தகவலைப் பெறும் படைப் பிரிவினர், அவர்களிடம் இருக்கும் ஒரு விடுவிப்பி (key) மூலம் அந்தத் தகவலை உடைத்துப் புரிந்​து​கொள்​வார்கள். எடுத்​துக்​காட்டாக, ‘கிழக்குப் பக்கம் சென்று குண்டு​போட​வும்’ என்று ஓர் உத்தரவு வருகிறதென்​றால், அது, 9384e 8n 43o4 என்பதுபோல ரகசியத் தகவலாக மாற்றி அனுப்​பப்​படும்.

அதன் பொருள் என்ன என்பதைப் புரிந்​து​கொள்​வதற்கான விடுவிப்பி, தகவலைப் பெறும் படைப் பிரிவில் உள்ள ஓர் அதிகாரி​யிடம் இருக்​கும். அந்தத் தகவலை எதிரிகள் இடைமறித்துப் பார்த்​தா​லும், அவர்களுக்கு அது விளங்​காது. ஏனென்​றால், விடுவிப்பி அவர்களிடம் இருக்காது. காலங்​காலமாக ராணுவங்​களில் பயன்படுத்​தப்​படும் இந்த வகைத் தகவல் தொடர்​புக்கு ‘மறைத்​தெழுதுதல்’ (Cryptography) என்று பெயர்.

தொடக்கக் காலத்தில் எழுத்து​களைக் குறிப்​பிட்ட முறையில் இடம் மாற்றியும் அல்லது எழுதப்​படும் ஊடகத்தில் சில மாற்றங்கள் செய்தும் தகவல்கள் அனுப்​பப்​பட்டன. காலப்​போக்கில் கணித சூத்திரங்​களும் பயன்படுத்​தப்​பட்டன. இப்படி, ஒரு தகவலை ரகசியக் குறியீடாக மாற்றுவதை மறையேற்றம் (encryption) என்றும், அதை உடைத்துத் தெரிந்​து​கொள்வதை மறைநீக்கம் (decryption) என்றும் கூறுவார்கள்.

சுதாரித்​துக்​கொண்ட ஹிட்லர்: முதல் உலகப் போரில் அடிவாங்கித் தோற்றுப்போன ஜெர்மனி​யில், பிறகு புதிதாக ஆட்சிக்கு வந்த ஹிட்லர், இரண்டாம் உலகப் போரைத் தொடங்​கு​வதற்கு முன்பு, தங்கள் நாட்டின் தோல்வி​களுக்குக் காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்​தார். அதில் ஜெர்மனியின் ராணுவ ரகசியங்கள் எதிரி​களால் எப்படியோ அறிந்​து​கொள்ளும் வகையில் மோசமான மறைத்​தெழுதுதல் நுட்பங்​களால் உருவாக்​கப்​படு​கின்றன என்று தெரிய​வந்தது.

நீங்கள் எவ்வளவு வலுவான கடற்படையை வைத்திருந்​தால்கூட என்ன, உங்கள் வருகையை எதிரிகள் முன்பே அறிந்​து​கொண்டு​விட்​டால், உங்கள் கப்பல் ஒரு காகிதக் கப்பல்​தான்!1920களிலேயே எனிக்மா என்கிற மறைத்​தெழுதுதல் இயந்திரத்தை ஜெர்மனி பயன்படுத்​திவந்தது. அது எதிரி​களுக்குத் தண்ணி​காட்​டியது என்றாலும், பல வேளைகளில் எதிரிகள் அதன் தகவல்களை உடைத்துத் தெரிந்​து​கொள்ளவும் முடிந்தது. ஆக, எனிக்​மாவைப் பலப்படுத்த வேண்டும்.

எனிக்மா எப்படி இயங்கியது? - எனிக்மா பார்ப்​ப​தற்குத் தட்டச்சு இயந்திரம் போலக் காணப்​பட்டது. அந்த மின்-இயந்​திர​வியல் கருவியில் விசைப்பலகை இருந்தது. அதற்கருகில் தட்டச்சு செய்யும்போது எழுத்துகள் ஒளிரும் விதமாக விளக்​குப்​பல​கையும் இருந்தது. இந்த இரண்டுக்கும் இடையில் மூன்று சுழல் சக்கரங்கள் அடுத்​தடுத்து இணைக்​கப்​பட்​டிருந்தன.

அத்துடன் ஒரு ரிப்ளக்டர் இணைந்​திருந்தது. சுழல்​சக்​கரங்​களில் 26 எழுத்துகள் தனித்தனி மின் இணைப்புகளாக இருந்தன. ஒரு எண்ணுக்கு ஒரு எழுத்து. ஒவ்வொரு நாளும் இந்தச் சுழல்​சக்​கரங்கள் தொடர்​பு​கொள்ளும் முதல் எழுத்து எது என்பது மாற்றி மாற்றி அமைக்​கப்​பட்டது. பிளக்​போர்டு ஒன்று இவற்றோடு இணைக்​கப்​பட்​டிருந்தது.

இப்போது நீங்கள் N என்ற எழுத்தை விசைப்​பல​கையில் அழுத்​தி​னால், ஒரு மின்சமிக்ஞை முதல் சுழல் சக்கரத்​துக்குச் சென்று, அதில் I என்ற எழுத்தைத் தொடர்​பு​ கொள்​கிறது என்று வைத்துக்​கொள்​வோம். பிறகு, அது இரண்டாம் சுழல் சக்கரத்தில் S என்கிற எழுத்​துடனும் மூன்றாம் சுழல் சக்கரத்தில் G என்ற எழுத்​துடனும் தொடர்​பு ​கொள்​கிறது. இந்தச் சுழல் சக்கரங்கள் சுழலும் வேகமும் படிப்​படி​யாகக் குறையும். பிறகு, அந்த மின்தொடர்​புகள் ரிப்ளக்டர் மூலம் எதிர்த்திசை​யிலும் செல்கின்றன.

இப்போது L, B, O ஆகிய எழுத்​துகளாக அவை உருமாறுகின்றன என்று வைத்துக்​கொள்​வோம். அவை அடுத்துச் செல்லும் பிளக்​போர்டில் மீண்டும் மாறி, கடைசியில் மின்தொடர்​புள்ள அந்த விளக்குப் பலகையில், P என்ற எழுத்தை ஒளிரவைக்​கிறது என்று வைத்துக்​கொள்​வோம். இறுதியில் தோன்றும் எழுத்​துதான் மறையேற்ற வடிவம். அதாவது, மேற்சொன்ன எடுத்​துக்​காட்​டில், N என்ற சொல்லின் மறையேற்ற வடிவம் P ஆகும், இப்படியே N,O,R,T,H என்கிற எழுத்துகள் P,H,I,L,S என்று உருமாறுகின்றன என்று வைத்துக்​கொள்​வோம்.

எதிரிகள் இதை இடைமறித்தால் என்ன ஆகும்? எவ்வளவு மண்டையை உடைத்​துக்​கொண்​டாலும், PHILS-இலிருந்து NORTH-ஐ அவர்களால் மீட்டெடுக்க முடியாது. சில வேளை சுழல் சக்கரங்​களின் எண்ணிக்கையை எட்டு வரைகூட நாஸிக்கள் கூட்டிக்​கொண்​டார்கள். சுழல் சக்கரங்கள், பிளக்​போர்டு என இரண்டின் தொடக்க மதிப்புகள் தகவல் அனுப்பும் இடத்திலும் பெறும் இடத்திலும் மட்டும் முன்கூட்டியே தெரிந்​திருக்​கும்.

அதற்கு கோடுபுக் (Codebook) ஒன்று பயன்படுத்​தப்​பட்டது. கோடுபுக் இல்லாமல் அந்தத் தகவலை உடைக்க முடியாது. உளவுப் பிரிவின் ஜாம்ப​வான்​களால்கூட எனிக்மா தகவல்களை விடுவிக்க முடிய​வில்லை. இந்தப் புதிரை விடுவிக்கும் வல்லமை வாய்ந்த இயந்திரம் ஒன்றை உருவாக்​கக்​கூடிய விஞ்ஞானியைப் பிரிட்டனே தேடிக்​கொண்​டிருந்தது. அவரும் கிடைத்​தார்.

ஆலன் டூரிங்! - பிரிட்டனின் இளம் கணிதமேதை ஆலன் டூரிங், பிளெட்ச்லீ பார்க்குக்கு வந்தார். ராணுவத் தகவல்களின் ரகசிய உடைப்பு வேலைகள் அங்கேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அந்தக் குழுவில் ஆலன் இணைந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. அங்கே அவர் உருவாக்கிய இயந்திரம், நாஸிக்களிடமிருந்து உலகத்தைக் காப்பாற்றியதோடு, செயற்கை நுண்ணறிவுக்கான அடித்தளத்தையும் அமைத்தது. அவரைப் பார்க்கத்தான் நாங்களும் அங்கே சென்றிருக்கிறோம். இதோ சில நொடிகளில் அவரோடு உரையாடவும் போகிறோம்.

- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in