

எண்பதுக்கும் மேற்பட்ட ஓவிய, சிற்பக் கலைஞர்களின் இருநூறுக்கும் மேற்பட்ட படைப்புகள் அடங்கிய கண்காட்சி இது. பல்லவா ஓவியர் கிராமத்தின் சார்பாக இக்கண்காட்சியை ஓவியர் விஸ்வம் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்திருக்கிறார். விஸ்வத்தின் தேர்ந்த அக்கறையையும் நேர்த்தியான திட்டமிடலையும் இக்கண்காட்சியின் ஒவ்வொரு பகுதியும் வெளிப்படுத்துகின்றன. பல்லவா ஓவியர்களின் பகுதி; இன்று இயங்கிக்கொண்டிருக்கும் பல படைப்பாளிகளையும் இணைத்துக்கொண்டிருக்கும் பொதுப் பகுதி; தனிநபர் கண்காட்சிப் பகுதியாக ஓவியர் விஸ்வத்தின் சமீபத்திய அரூப ஓவியங்கள்; மறைந்த கலைஞர்களுக்கான அஞ்சலிப் பகுதி; மூத்த கலைஞர்களைக் கெளரவப்படுத்துவது என இக்கண்காட்சி சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இக்கண்காட்சியின் ஒவ்வொரு நாள் மாலை நிகழ்விலும் கலை இலக்கிய ஆளுமைகளோடு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருப்பதும் சிறப்பான ஒரு முன்னெடுப்பு. நவீனக் கலைப் படைப்பாளிகளும் நவீன இலக்கியப் படைப்பாளிகளும் இணைந்து செயல்படுவது நம் சூழலில் நல்ல மாற்றங்களை விளைவிக்கும் என்பது எப்போதுமே என் நம்பிக்கையாக இருந்துவருகிறது. 1970களிலும் 80களிலும் சிறுபத்திரிகை இயக்கங்களுக்கும் நவீன ஓவியர்களுக்கும் இடையே இணக்கமான பரிமாற்றம் இருந்தது. ‘கசடதபற’, ‘நடை’, ‘பிரக்ஞை’ போன்ற இதழ்களோடு ஓவியர்கள் ஆதிமூலம், தட்சிணாமூர்த்தி, ஆர்.பி.பாஸ்கரன், கிருஷ்ணமூர்த்தி போன்ற நவீனக் கலைஞர்கள் இணைந்து செயல்பட்டனர். பின்னர், ஒருவர் மீது ஒருவர் குற்றம் கண்டுபிடித்துப் பிரிந்து செல்லும் தம்பதியர்போலக் கலையும் இலக்கியமும் தனித்தனியாகப் பிரிந்து போயின. நவீனக் கலைகளின் அரிய கொடைகளை நாம் இழந்துகொண்டிருப்பதும் அவற்றின் வெகுமதிகளை நாம் அறியாதிருப்பதும் அவலம். இத்தகைய சூழலில் இப்படியான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருப்பது, மீண்டும் ஓர் இணைவுக்கான முயற்சியாக அமையலாம்.
அதிர்வூட்டும் படைப்புகள்
லலித் கலா அகாடமியின் வாயிலுக்குள் நாம் நுழையும்போதே, நம் கண்களில் முதலில் தென்படுவது, வாசலுக்கு எதிரான சுவரில் வீற்றிருக்கும், சமீபத்தில் மறைந்த, ஓவியர் நடேஷின் அதிர்வூட்டும் ஓவியம்தான். கொந்தளிப்பு, எக்களிப்பு என்ற இருவேறு மனநிலைகளில் இடைவிடாது இயங்கிக்கொண்டிருந்த அவருடைய ‘புலிகள்’ ஓவிய வரிசையிலான ஒரு மகத்தான ஓவியம் அது. இவ்விரு மனநிலைகளின் உருவகம் என்றும் அந்த ஓவியத்தைக் கருதலாம். ஒரு கட்டான ஆண் உடலில் புலி முகம். அது எழுப்பும் அதிர்வலைகளோடுதான் நாம் கண்காட்சிக்குள் நுழைகிறோம். இறுதியாக, காட்சிக் கூடத்தின் கடைசிப் பகுதியில் நிறைந்திருக்கும் ஓவியர் விஸ்வத்தின் சமீபத்திய அரூப ஓவியங்கள் அடங்கிய புனைவுவெளியைச் சென்றடைகிறோம். இயற்கையின் வாசனைகளையும் குணரூபங்களையும் வண்ணங்களின் மாய வசீகரத்தோடும் மந்திர அதிர்வுகளோடும் வசப்படுத்தியிருக்கும் அரூப வெளிப்பாடுகள் அவை. பெறுமதியான கலை அனுபவங்களின் நிறைவோடு வெளியேறுகிறோம்.
கண்காட்சியின் அஞ்சலிப் பகுதியில் ஓவியர்கள் வீர.சந்தானம், எம்.பாலசுப்பிரமணியம், வில்லேஜ் மூக்கையா, மு.நடேஷ் ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டு மறைந்த பல்லவா ஓவியர் கிராம ஓவியரான வில்லேஜ் மூக்கையாவின் காளை ஓவியங்கள் இப்பகுதியில் கணிசமாக இடம்பெற்றிருக்கின்றன. கிராமிய வாழ்க்கையைத் தன் கோடுகள் மூலமாகவும், தன் மண் சார்ந்த வண்ணங்கள் மூலமாகவும் ஆற்றலுடன் வெளிப்படுத்தியவர் வில்லேஜ் மூக்கையா. பார்க்கும் எவரையும் தன் வசப்படுத்தும் வலிமை கொண்ட படைப்புகள் இவை. அதிகம் அறியப்படாத, உரிய அங்கீகாரம் கிடைத்திராத கலைஞன். அவருக்கான சிறந்த அஞ்சலியை இக்கண்காட்சி செலுத்தியிருக்கிறது.
பல்லவா ஓவியர்களின் படைப்புகள் அடங்கிய பகுதியில், மூத்த ஓவியரும் சென்னை ஓவிய இயக்கத்தின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவருமான ஜி.ராமனின் சில ஓவியங்களைப் பார்க்க முடிவது நமக்கான ஒரு நல்வாய்ப்பு. தஞ்சை மண்ணின் வாழ்க்கைச் சித்திரங்களைத் தன் ஓவியங்களில் கலை நேர்த்தியுடன் கைப்பற்றிய, அழகியல் வெளிப்பாடுகள் கொண்ட மனோகரனின் ஓவியங்கள் அபாரமானவை. ‘மரத்தின் வாழ்வு’ என்கிற ஓவிய வரிசை மூலம் இன்று இந்தியக் கலை உலகில் பிரசித்தி பெற்றுவரும் இளம் கலைஞர் கார்த்திகேயனின் மூன்று வசீகர ஓவியங்களும் இப்பகுதியின் சிறப்புகள். கார்த்தியின் மரம் தோப்பாகவும் காடாகவும் உருமாற்றம் பெறுவது, அவருடைய சிந்தனை வளத்தாலும் வெளியீட்டு நுட்பங்களாலும் படிமங்களாலும் நிகழ்கிறது.
புதிய படைப்பு சக்திகள்
பொதுப் பகுதியில், இன்று தமிழகக் கலைவெளியில் இயங்கிக்கொண்டிருக்கும் பல படைப்பாளிகளின் ஓவியங்களும் சிற்பங்களும் காட்சிக்கூடத்தின் மையப் பகுதியில் நிறைந்திருக்கின்றன. யதார்த்த வெளிப்பாடு முதல் அரூப வெளிப்பாடு வரையான பல்வேறு கலை வெளிப்பாடுகளை இப்பகுதியில் காண முடிகிறது. இப்பகுதி
யில் எதிரும் புதிருமாக அமைந்திருக்கும் சரண்யாவின் மரபான, தத்ரூபமான யதார்த்தப் படைப்பு ஒருபுறம் (நாம் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதிலிருக்கும் பெண்மணி சட்டகத்தை விட்டு இறங்கிவந்து நம்மிடையே பேசத் தொடங்கிவிடக்கூடும் எனும் அளவுக்குத் தத்ரூபம் கூடியது). எனில், அசாத்தியமான மாய வெளிப்பாடுகளில் ஒளிரும் அதிவீர பாண்டியனின் அரூப ஓவியங்கள் மறுபுறம். அவரின் சமீபத்திய அரூப ஓவியங்களில் வண்ணங்களும் கோடுகளும் ஒரு லயத்தில் இசைந்து உறவாடி விந்தை புரிகின்றன. இவ்விரு நிலைகளுக்கு இடையேயான கலை வெளிப்பாடுகளின் குறுக்குவெட்டுத் தோற்றமாக இக்கண்காட்சி விரிந்து பரந்திருக்கிறது.
பொதுப் பிரிவில் எழுபதுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொருவரின் ரசனைக்கும் ஈடுபாட்டுக்கும் ஏற்ப, இவற்றோடு பார்வையாளர்கள் உறவாட முடியும். சென்னை, கும்பகோணம், பாண்டிச்சேரி ஓவியக் கல்லூரிகளின் மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்புகளோடு, 19 பெண் ஓவியர்களின் படைப்புகள் இடம்பெற்றிருப்பதையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இப்பகுதியில் மிக முக்கியமானவை என என் பார்வையில் அதிவீர பாண்டியன், அஸ்மா மேனன், ரோகிணி மணி (இப்பகுதிக்குள் நுழைந்ததும் முதலில் என்னை ஈர்த்தது, இவரின் காகம்தான்), நடராஜன், வேல்முருகன், கார்த்திகேயன், மணிவண்ணன் ஆகியோரின் படைப்புகளைக் குறிப்பிடலாம்.
அதேவேளை, இதுவரை நான் அறிந்திராத புதிய படைப்பு சக்திகளாக திவ்யா, ஹெலன் பிரமாவைக் கண்டுகொள்ள முடிந்தது. திவ்யா என்கிற இளம் பெண் ஓவியரின் ‘கேன்வாஸின் பின்புறம்’ என்கிற ஓவியம் அவருடைய கலை மனதின் பார்வையையும் திறனையும் வியந்து பார்க்க வைத்தது. மற்றொருவரான ஹெலனின் படைப்புகள் நுட்பங்கள் கூடியவையாகவும் புதிய பார்வை கொண்டவையாகவும் அமைந்திருக்கின்றன. அவரவர் ஈடுபாட்டுக்கும் ரசனைக்கும் ஏற்ப பெறுமதியான கலை அனுபவம், இந்தக் கண்காட்சி வழி கிட்டும் என நிச்சயமாக நம்பலாம்.
(இக்கண்காட்சி சென்னை லலித் கலா அகாடமியில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 3 வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது)
- எழுத்தாளர், கலை விமர்சகர்
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com