பாகுபாட்டை மறுதலிக்கும் அரசமைப்பு அறம் | அரசமைப்பு ஏற்கப்பட்டு 75 ஆண்டு நிறைவு

பாகுபாட்டை மறுதலிக்கும் அரசமைப்பு அறம் | அரசமைப்பு ஏற்கப்பட்டு 75 ஆண்டு நிறைவு
Updated on
3 min read

உலகின் மிக நீண்ட நெடிய இந்திய அரசமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணய அவையில் ஏற்கப்பட்டு, இன்றுடன் 75 ஆண்டுகள் ஆகின்றன. இறையாண்மை கொண்ட சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசான இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி; கருத்து, நம்பிக்கை, வழிபாட்டுக்குரிய சுதந்திரம்; சட்டத்தின் முன் சமத்துவமும் சம வாய்ப்பும்; தனிமனித மாண்பை வலியுறுத்தும் சகோதரத்துவம், தேசத்தின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பேணப்படும் என்று அரசமைப்பின் அடிநாதமாகத் திகழும் முகப்புரை அறிவிக்கிறது.

அம்பேத்கர் வலியுறுத்திய சமத்துவம்: தனிமனிதனின் மாண்பைக் காப்பாற்று​ வ​தில்தான் இந்நாட்டின் மேன்மை பறைசாற்​றப்​படு​கிறதே தவிர, பண்டைய நாகரிகப் பெருமிதங்​களிலோ, எதிர்கால வல்லரசுக் கனவுகளிலோ அல்ல. அதனால்தான் தனிமனித மாண்பையும் சமத்து​வத்​தையும் அரசமைப்பின் முகப்பு​ரையில் அம்பேத்கர் இடம்பெறச் செய்தார். முடியரசுகளின் கீழும் அந்நியர் ஆக்கிரமிப்பு​களாலும் ஆட்பட்​டிருந்த இம்மண்​ணில், எண்ணற்ற சட்டங்கள் வகுக்​கப்​பட்​டிருப்​பினும் அவை இங்கு புரையோடிப்​போ​யிருந்த சாதிய சமூக அமைப்பைக் கேள்விக்கு உள்ளாக்க​வில்லை. முதன்​முறையாக, சாதிப் பாகுபாட்டை ஏற்க மறுத்த அரசமைப்புச் சட்டம் இந்த வகையில்தான் ஒரு முதன்​மையான சமூக ஆவணமாக மிளிர்​கிறது.

நம்முடைய அரசமைப்புச் சட்டம் உருவாக்​கப்​படும் வரை, ஒருவர் என்ன சாதியில் பிறந்​திருக்​கிறார் என்பதை அளவுகோலாகக் கொண்டே அவருடைய தகுதி வரையறுக்​கப்​பட்டு, அவருடைய பிறப்பு​ரிமையான வாக்குரிமையும் இன்ன பிற உரிமை​களும் தீர்மானிக்​கப்​பட்டன. இதை நிராகரித்து, இந்நாட்டில் பிறந்த ஒருவர் எவ்விதப் பிறவிப் பாகுபாடும் இன்றி - முற்றும் முதலுமாக - ஒரு மனிதராக அங்கீகரிக்​கப்​படு​கிறார்; அவருக்கு ஒரு மதிப்பு இருக்​கிறது; வயது வந்ததும் அவருக்கு ஒரு வாக்கு இருக்​கிறது என்பதை அம்பேத்கர், ‘ஒரு மனிதன் - ஒரு மதிப்பு - ஒரு வாக்கு’ என்றார். இதுவே நம் அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கிய தலைசிறந்த அங்கீகாரமாகும்.

அரசமைப்புச் சட்டம் உருவாக்​கப்​படு​வதற்கு முன்பும், தற்போது சட்டரீ​தி​யாகத் தேர்ந்​தெடுக்​கப்​படும் பட்டியல் சாதி ஊராட்சி மன்றத் தலைவர்கள் சந்திக்கும் தீண்டாமைக் கொடுமைகள் நாள்தோறும் செய்தி​யாக்​கப்​படும் இன்றைய சூழலிலும், கிராமங்களே அமைதிக்கும் ஜனநாயகப் பண்புக்கும் பிறப்​பிட​மாகப் போற்றப்​படு​கின்றன. ஆனால் இதை ஏற்க மறுத்த அம்பேத்கர், ‘இந்திய நாட்டின் அழிவுக்குக் கிராமக் குடியரசுகளே பொறுப்பு. வட்டார, வகுப்பு​வாதப் போக்கு​களைக் கண்டிப்​பவர்கள், கிராமங்​களைத் தூக்கிப் பிடிப்​பவர்களாக இருப்பது வியப்​பளிக்​கிறது.

வட்டார வெறியின் கழிவுத்​தொட்​டி​யாகவும் அறியாமை நிறைந்த இருள் குகையாகவும் குறுகிய மனப்பான்மை, சாதியத்தின் பிறப்​பிட​மாகவும் உள்ளதுதானே கிராமம்? எனவேதான் கிராமத்தை ஒதுக்​கி​விட்டு, அரசமைப்புச் சட்டம் தனிமனிதனைத் தன்னுடைய அடிப்படை அலகாகக் கொண்டுள்ளது’ என்று நாடாளு​மன்​றத்தில் எடுத்​துரைத்தார் (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு:13; பக். 62).

சிவில் சமூகத்தின் கடப்பாடு: அரசமைப்புச் சட்டத்தைக் கையளித்து நவம்பர் 25, 1949 அன்று நாடாளுமன்ற அவையில் அம்பேத்கர் ஆற்றிய வரலாற்று முக்கி​யத்துவம் வாய்ந்த பேருரை, நம் கல்விக்​கூடங்​களின் பாடத்​திட்டம் ஆக்கப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டம் தயாரிக்​கப்​பட்​டபோது எழுந்த சவால்கள், நாடாளுமன்ற ஜனநாயகத்தை அரசமைப்புச் சட்டம் அடிப்​படை​யாகக் கொண்டிருப்​ப​தற்கான நியாயம், அரசமைப்புச் சட்டம் முன்மொழியும் அடிப்படை உரிமைகள் ஏன் எவ்வித நிபந்​தனையும் இன்றி இருக்க வேண்டும் என்பதற்கான தர்க்கம், பிற நாட்டின் அரசமைப்புச் சட்டங்​களுக்கும் நம் நாட்டுச் சட்டத்​துக்​குமான ஒப்பீடு, 2,473 சட்டத் திருத்​தங்கள் செய்யப்​பட்​டதற்கான காரணங்கள், கூட்டாட்சித் தத்துவம் குறித்த தெளிவான விளக்கம், மத்திய - மாநில அரசுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணம் என முற்பகுதி உரை அமைந்​திருக்​கிறது.

அம்பேத்கர் உரையின் பிற்பகுதி, நாம் இதுவரை கவனப்​படுத்​தி​யிராத சிவில் சமூகத்தை நெறிமுறைப்​படுத்து​வதற்​கானது. நாம் அரசியல் ஜனநாயகத்தோடு நிறை வடைந்​து​விடக் கூடாது; நம்முடைய அரசியல் ஜனநாயகத்தை ஒரு சமூக ஜனநாயகமாக மாற்றியாக வேண்டும் என்று வலியுறுத்தும் அம்பேத்கர், அடித்​தளத்தில் சமூக ஜனநாயகம் இல்லாது போனால், அரசியல் ஜனநாயகம் நிலைத்து நிற்காது என்கிறார்.

தவிர, சமூக ஜனநாயகம் என்பது சுதந்​திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையே வாழ்க்கையின் அடிப்​படைக் கொள்கைகளாக அடையாளப்​படுத்தும் ஒரு வாழ்க்கை முறை என்றும், அவற்றைத் தனித்​தனியாக விளங்​கிக்​கொள்ளக் கூடாது என்றும் சுதந்​திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்பவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை; ஒன்றி​லிருந்து மற்றொன்றைப் பிரித்து​விட்​டால், ஜனநாயகத்தின் அடிப்​படையே வீழ்த்​தப்​படும் என்றும் அம்பேத்கர் எச்சரிக்​கிறார்.

தீண்டாமை அதன் அனைத்து வடிவங்​களிலும் ஒழிக்​கப்​படு​கிறது என்று சட்டத்தில் இடம்பெற்றுக் குற்ற​மாகவும் ஆக்கப்​பட்டு, அது ஒரு பாவம் என்று பள்ளிக்​கூடங்​களில் கற்பிக்​கப்​படும் நிலையிலும் அது முற்றாக ஒழிக்​கப்​பட​வில்லை என்ற ஆதங்கத்​தால், 75 ஆண்டு கால இந்தியக் குடியரசு திகைத்து நிற்கிறது.

அன்றாடம் சக மனிதர்கள் மீது தீண்டாமை, பாகுபாடு, வன்கொடுமை நடக்கும்​போதெல்லாம் அரசாங்கம், நிர்வாகம், காவல் துறை, ஆட்சியில் இருக்கும் கட்சிகள் மீதான விமர்சனம் என்கிற அளவில் சிவில் சமூகம் நிறை வடைந்​து​விடு​கிறது. தவிர, சட்டம் தீவிரமாக நடைமுறைப்​படுத்​தப்பட வேண்டும்; குற்ற​வாளி​களுக்குக் கடும் தண்டனை உறுதிப்​படுத்​தப்பட வேண்டும்; பாதிக்​கப்​படும் பட்டியல் சாதியினருக்கு விழிப்பு​ணர்வு அளிக்​கப்பட வேண்டும் என்றெல்லாம் பரிந்​துரைக்கும் சிவில் சமூகம், தனக்கான கடப்பாட்டை மட்டும் கடைப்​பிடிக்கத் தவறுகிறது.

கிராமங்​களில் வெளிப்​படை​யாகவும் (மா)நகரங்​களில் நுட்ப​மாகவும் சாதிப் பாகுபாட்டைக் கடைப்​பிடிக்கும் சிவில் சமூகம், உலக அளவிலும் அகமணங்​களைக் குற்ற​மாகக் கருது​வ​தில்லை என்பதோடு, அதை நியாயப்​படுத்​தவும் செய்கிறது. பிறப்பின் அடிப்​படையிலான சாதியை அடிப்படை அலகாகச் சட்டம் நிராகரித்த பிறகும், அதையே திருமண விளம்​பரங்​களில் முன்னிலைப்​படுத்த சிவில் சமூகம் கிஞ்சித்தும் வெட்கப்​படு​வ​தில்லை.

சமூகத்தின் ஒரு பிரிவினரை வெறுத்து ஒதுக்குவது (Social ostracisation) மரண தண்டனையை​விடக் கொடூர​மானது என்பார் அம்பேத்கர். ஆனால், ஜனநாயகத்​துக்கு எதிரான சிவில் சமூகத்தின் போக்கைத் தண்டிப்​ப​தற்கு இங்கு எந்தச் சட்டமும் இல்லை. தவிர, சிவில் சமூகத்தின் பிரதி​நி​தி​கள்தான் சட்டத்தை நிறைவேற்றும் அலுவலர்​களாகவும் வலம் வருகின்​றனர்.

காலங்​காலமாக அரசு/ அரசியல் மீது பழியைச் சுமத்தும் சாதியச் சமூகம், தன்னைக் குற்றநீக்கம் செய்து​ கொள்​ளும்வரை, அம்பேத்கர் சுட்டிக்​காட்​டியது போல, ஜனநாயகமற்ற இந்திய மண்ணில் ஜனநாயகம் என்பது மேற்பூச்சாக மட்டுமே இருக்​கும். தீண்டாமையை மட்டுமே குற்ற​மாக்கி, சாதியைப் பண்பாடாக ஆராதிக்கும் நிலையே அரசமைப்பின் துடிப்பான செயல்​பாட்டுக்குத் தடையாக இருக்​கிறது. இத்தருணத்​தில், சமூகத்தின் தார்மிக மனசாட்​சி​யால்தான் உரிமைகள் பாதுகாக்​கப்​படு​கின்றனவே தவிர, சட்டங்​களால் அல்ல என்ற அம்பேத்​கரின் கூற்றை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

அரசமைப்பு அறம்: இறுதியாக, அரசமைப்பு அறத்தைத் தீர்வாக முன்னிறுத்தும் அம்பேத்கர், வேறு சில ஆபத்து​களையும் சுட்டு​கிறார்: ‘அரசமைப்புச் சட்டம் அமைதி வழியில் செயல்​படுத்​தப்​படு​வதற்கு அரசமைப்பு அறம் (Constitutional morality) வளர்த்​தெடுக்​கப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக்​கொண்​டாலும், அத்துடன் பின்னிப் பிணைந்​துள்ள இரு செய்தி​களைப் பொதுவாக ஏற்க மறுக்​கிறோம்.

ஒன்று, ஒரு நாட்டின் அரசமைப்பும் நிர்வாக அமைப்பு முறையும் நெருங்கிய தொடர்​புடைய, ஒத்திசைவோடு பயணிக்க வேண்டியவை. மற்றொன்று, நிர்வாக அமைப்பு முறையின் வடிவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் வழியாக, அரசமைப்புச் சட்டத்தின் வடிவத்தையே மாற்றியமைத்து, அதைச் செயலற்றதாக மாற்றி​விடக்​கூடிய சாத்தி​யப்​பாடும் இருக்​கிறது.

இது, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்​படைக்கே எதிரானது’ (அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு:13; பக். 60). அரசமைப்பின் அடிப்​படையைக் காக்கும் பொறுப்பை நமக்கு உணர்த்தும் வகையில், பாரெங்கும் நெடிதுயர்ந்து நிற்கும் அம்பேத்​கரின் கரங்களில் தவழும் அரசமைப்புச் சட்டம் - சாதிய மனப்பாங்கை மறு​தலித்து - அரசமைப்பு அறத்தை நம் சமூக ​வாழ்க்கை ​முறைப் பண்​பாடாக வளர்த்​தெடுக்க வேண்டிய அவசியத்தையே நொடிதோறும் உணர்​த்​துகிறது.

- தொடர்புக்கு: dalitmurasu@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in