ஒவ்வொருவரிடமும் ஒரு கதை

மெட்டா ஏஐ ஜெனரேட் செய்த படம்
மெட்டா ஏஐ ஜெனரேட் செய்த படம்
Updated on
2 min read

‘ஒவ்வொருவரிடமும் சொல்ல ஒரு கதை இருக்கிறது’ என்பது மறுக்க முடியாத உண்மை. உண்மைக்கு ஒற்றை வடிவம் இல்லை; பல வடிவங்களில் அது இருக்கிறது என்பது நம் அனுபவம்.

34 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1990இன் தொடக்கத்தில் நடந்தது இது. இன்றும் மறக்கவில்லை. இடம் - அருப்புக்கோட்டை. ‘அறிவொளிக்குப் படிக்க வாங்க’ என்று அழைத்துக்கொண்டிருந்தோம். கூடி இருந்தவர்கள் பெரும்பாலும் பெண்கள். சிலர் ஆர்வமாய்க் காதுகொடுத்தனர். சிலர் பதில் பேசினர். அவர்கள் பேச்செல்லாம் சொலவடைகள்! “நாங்களே எலந்த முள்ல பட்ட சேல மாதிரி இழுபட்டுக் கெடக்கோம்.

படிப்பு கேக்குதா?” என்பது அவர்கள் சிலரின் எதிர்வினை. அவர்களில் ஒரு பெண், “என்னமோ சொன்ன கதையில! எலி லவுக்கை கேட்டுச்சாம் சபையில! படிப்பு ஒண்ணுதான் குறைச்சல்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இது விரக்தியா? சலிப்பா? கோபமா? எல்லாம்தான். அவர் சொன்ன சொலவடைக்குள் பல கதைகள் இருந்தது மட்டும் உண்மை. அந்த உண்மை இன்றுவரை குடைகிறது. எழுதுவதற்கு நாங்கள்.. வாசிப்பதற்கு அவர்களா?

கல்வித் துறையின் புதிய முயற்சி: அரசுப் பள்ளிப் பிள்ளைகள் வாசிக்க, நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய (16 பக்கம்) கதை, பாடல் புத்தகங்களைப் படங்களுடன் தமிழ்நாடு அரசு உருவாக்கியிருக்கிறது. இது புத்தம் புதிய முயற்சி. மற்ற மாநிலங்களின் ஆர்வமும் தூண்டப்பட்டிருப்பது உண்மை. இரண்டாம் கட்டப் புத்தகங்கள் 70க்கு மேல் வந்துள்ளன. புத்தகம் படைத்தவர்களில் பலர் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும்! புதிய படைப்பாளிகளைக் காண்கையில், மழையைக் கண்ட நிலம்போல் மனம் குளிர்கிறது.

ஏறக்குறைய 10 படைப்புகள் அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கியவை. ஒவ்வொருவரிடமும் சொல்ல ஏராளமான கதைகள் இருக்கின்றன என்கிற உண்மை மேலும் வலுப்பட்டிருக்கிறது. ஒருவரைப் படைப்பாளி ஆக்கத் தேவை வாய்ப்பும் அங்கீகாரமும். அரசுப் பள்ளிப் பிள்ளைகளுக்கு வாய்ப்பும் அங்கீகாரமும் வழங்கி அவர்களைப் படைப்பாளிகள் ஆக்கியிருக்கும் பள்ளிக் கல்வித் துறை நம் பாராட்டுக்கு உரியது.

புத்தம்புது அனுபவங்கள்... புதுப் படைப்பாளிகள் தரும் புத்தம் புது அனுபவங்கள் குறிப்பிடத்தக்கவை. கத்தரிக்காய் தன் கொண்டையைத் தேடுவது (செ.தனுஸ்ரீ), ஆறுமணிக் குருவி பற்றிப் பலரும் அறியாத தகவல்கள் (கி.சுவாசிகா), மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சலாடி மகிழும் யானை (ப.பிரனேஷ்), தன் மீது ஏறி விளையாடும் சிறுவனைத் தேடி நகரும் மரவீடு (வினிதா), சிறுமியோடு சேர்ந்து பந்து விளையாடும் கரடி, குரங்கு, யானை போன்ற காட்டுயிர்கள் (திருநாவுக்கரசு), டூ டூ எனப் பெயர் வைத்த குட்டி எறும்பு எடுக்கும் முடிவுகள் (வி.சுபிக் ஷா), சிங்கத்திடம் இருந்து தப்பிய மான் (கோ.ஆழ்வார்), சுத்தமான பழைய உலகமா? குப்பையான இன்றைய உலகமா? எது வேண்டும்? என்கிற கேள்வி (மோ.ஷன்ஸ்குத்தி) - என மாணவர்களின் புத்தகங்களில் புதுப்புதுக் காட்சிகள்! இதுவரை நாம் காணாத காட்சிகள். புத்தகங்களில் மரங்களையும் காடுகளையும் விலங்குகளையும் பார்க்கிறோம். பள்ளிக் குழந்தைகளுக்கு இயற்கையோடு உள்ள அகலாத பிணைப்பு மகிழ்வளிக்கிறது. பாடல்கள் விதிவிலக்கல்ல.
‘பூனைக்குட்டி பூனைக்குட்டி

எங்கே போறீங்க?
புது டிரெஸ் வாங்கி நானும்
போடப் போறேன்!’
(க.மதிமலர், மியா மியா பூனை)
‘சின்னச் சின்ன குரங்கு
சேட்டை பண்ணும் குரங்கு!
கிளை கிளையாய் தாவுச்சாம்
கீழே விழுந்து அழுதுச்சாம்!’
(ஆ.பிரின்சி, கூட்டாஞ்சோறு)
என்பன சில உதாரணங்கள்.

குழந்தைகளுக்கு செல்போன் மோகம் அதிகரித்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒரு புறமிருக்க, இயற்கையைத் துருவித் துருவி அவர்கள் கதையும் பாடலும் எழுதுவது முரண்பாடா அல்லது படைப்பு உருவாக்கும் பொறுப்பா? விவாதிக்க வேண்டிய கேள்வி.

வகுப்பறையின் புதிய முகம்: வகுப்பறைக்குப் புதிய முகம் கிடைத்திருக்கிறது. இது எத்தனை நாள் கனவு? படிப்பாளிகள் மீதே வகுப்பறையின் கவனம் குவிந்து கிடக்கிறது. படிப்பாளிகளை உருவாக்குவதைவிடப் படைப்பாளிகளை உருவாக்குவது கடினம். இது வகுப்பறைக்குத் தெரியும். புதிய தொடக்கம் நிகழ்ந்திருக்கிறது.

புதிய கதைகள் காதில் விழுகின்றன. சொல்லப்படாத, எழுதப்படாத கதைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன. அரைகுறைப் படிப்பாளிகள், முதியோர், வீட்டு வேலைகளில் அடைபட்ட பெண்கள் எனப் பல எளியோரின் குரல்கள் கேட்கப்பட வேண்டும். அவர்கள் சொல்லும் கதைகள் வாசிக்கப்பட வேண்டும். அதற்கான வாசல் திறக்கப்பட வேண்டும்.

- தொடர்புக்கு: smadasamy1947@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in