தமிழ்நாட்டுக்குத் தேவை ஒருங்கிணைந்த உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாட்டுக்குத் தேவை ஒருங்கிணைந்த உள்ளாட்சித் தேர்தல்
Updated on
3 min read

தமிழ்நாட்டில் 2019 டிசம்பர் இறுதியில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக் காலம், 2025 ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைய உள்ளது. ஐந்து ஆண்டுக் காலம் முடிவடையும் சூழலில், ஊரகப் பகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றாக வேண்டும். ஆனால், ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுமா, இல்லையா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாகத் தெளிவான அறிவிப்பு மாநில அரசிடமிருந்து இதுவரை வெளியிடப்படவில்லை. தேர்தலை நடத்தும் மாநிலத் தேர்தல் ஆணையத்திடமிருந்தும் வெளியிடப்படவில்லை. எனவே, தேர்தல் குறித்து முரண்பாடான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், ஒருங்கிணைந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றி அரசு ஒரு தீர்க்கமான முடிவை நோக்கி நகர்வது நல்லது.

அரசு என்ன செய்கிறது? - பொதுவாக மக்களவைத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல்கள் என்றால் அது தொடர்பான பணிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஆறு மாதங்​களுக்கு முன்பிருந்தே தொடங்கி​விடும். தேர்தலுக்கான முன்த​யாரிப்புப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டும். ஆனால், அதுவே உள்ளாட்சித் தேர்தல் என்று வரும்​போது, அதற்கான முன்த​யாரிப்புப் பணிகள் மாநில அரசைச் சார்ந்தே அமைகின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகளைத் தயார்​செய்து வைக்கும்படி மாவட்டத் தேர்தல் அதிகாரி​களுக்கு மாநிலத் தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு செப்டம்​பரில் கடிதம் எழுதி​யதையும், வாக்காளர் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையத்​திட​மிருந்து மாநிலத் தேர்தல் ஆணையம் பெற நடவடிக்கை எடுத்​ததையும் தவிர, எந்தப் பணியும் வெளிப்படையாக நடைபெற்​ற​தாகத் தெரிய​வில்லை. எனவே, டிசம்பர் இறுதியில் நடைபெற வேண்டிய ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அரசின் நகர்வு​களுக்காக மாநிலத் தேர்தல் ஆணையம் காத்திருப்​ப​தாகவே தெரிகிறது.

புதிய குழப்​பங்கள்: இது ஒருபுறம் இருக்க, புதிதாகப் புதுக்​கோட்டை, காரைக்​குடி, நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய நகராட்​சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்து​வதற்கான அறிவிப்பை அரசு இந்த ஆண்டு வெளியிட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என உள்ளாட்சி நிர்வாகங்கள் தரம் உயர்த்​தப்​படும்​போது, அருகில் உள்ள ஊராட்​சிகளை இணைப்பது வழக்கமான நடவடிக்கை. அந்த அடிப்​படையில் 510 ஊராட்சிப் பகுதிகளை நகர்ப்புற உள்ளாட்​சிகளுடன் இணைப்​ப​தற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்​டிருக்​கிறது.

இந்தப் பணிகள் முடிந்த பிறகு, வார்டு​களின் எல்லை நிர்ணயம் செய்யும் பணி நடைபெற வேண்டும். இவை அனைத்தும் மாநில எல்லை நிர்ணய ஆணையம் மூலம் மேற்கொள்​ளப்​படும். இந்தப் பணிகள் எப்போது முடிவடையும் என்பது குறித்த அறிவிப்புகள் இல்லை. எனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த காலத்தில் நடைபெறு​வதில் தாமதம் ஏற்படக்​கூடும் என்றே புரிந்​து​கொள்ள முடிகிறது. அப்படி தாமதம் ஏற்படும்​பட்​சத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை அருகில் வைத்துக்​கொண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆளுங்​கட்சி விரும்புமா என்கிற அரசியல் கணக்கும் இதில் அடங்கி​யிருக்​கிறது.

கடந்த காலத்தில் தமிழ்​நாட்டில் நகர்ப்புறம், ஊரகம் என ஒருங்​கிணைந்து ஒரே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்​கப்​பட்டன. தமிழ்​நாட்டில் மாநிலத் தேர்தல் ஆணையம் 1994இல் உருவாக்​கப்​பட்டது. மாநிலத் தேர்தல் ஆணையம் அமைக்​கப்பட்ட பிறகு 1996 (திமுக ஆட்சி), 2001 (அதிமுக), 2006 (திமுக), 2011 (அதிமுக) ஆகிய ஆண்டு​களில் செப்டம்பர், அக்டோபரில் ஒரே நேரத்​தில்தான் உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடைபெற்றது. இந்த நடைமுறை 2016க்குப் பிறகுதான் மாறியது.

2016இல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்​கப்பட்ட பிறகு வார்டு மறுவரையறைப் பிரச்​சினை, பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடி​யினருக்கான தனி வார்டுகளை உருவாக்கு​வதில் எழுந்த சிக்கல்கள், நீதிமன்ற உத்தர​வுகள் காரணமாகத் தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்​பட்டது.

பிறகு, அன்றைய முதல்வர் ஜெயலலி​தாவின் மரணம், அதன் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிரச்​சினைகள், தேர்தலை நடத்த ஆர்வம் காட்டாதது போன்ற பல காரணங்​களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்து​வதில் காலதாமதம் உருவாக்​கப்​பட்டது. தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டா​யத்​தில், முந்தைய தேர்தல்​களுக்கு மாறாக 2019இல் ஊரகப் பகுதி​களுக்கு மட்டும் தேர்தல் என அன்றைய அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை பிரித்து நடத்தியது. இதுதான் இன்று உள்ளாட்சித் தேர்தல் ஊரகம், நகர்ப்புறம் என இரண்டு பிரிவுகளாகப் போனதற்குக் காரணம். அதிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு பிரிவாக நடத்தப்​பட்டது.

2019இல் அதிமுக ஆட்சி​யின்போது 27 மாவட்​டங்​களில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்​சிகளில் உள்ள 1.18 லட்சம் பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்​பட்டது. எஞ்சிய 9 மாவட்​டங்​களில் 2021இல் திமுக ஆட்சி அமைந்த பிறகு 23,978 பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்​பட்டது. 2019இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு​களின் பதவிக் காலம் 2025 ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைகிறது.

2021இல் நடத்தப்பட்ட 9 மாவட்​டங்​களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு​களின் பதவிக் காலம் 2026 செப்டம்​பரில் முடிவடைகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒட்டுமொத்தமாக நடத்த வேண்டு​மென்​றால், 9 மாவட்​டங்​களில் உள்ள உள்ளாட்சி அமைப்பு​களைக் கலைக்க வேண்டி​யிருக்​கும். மக்களால் தேர்ந்​தெடுக்​கப்பட்ட மக்கள் பிரதி​நி​திகள் அடங்கிய உள்ளாட்சி அமைப்பை எஞ்சிய காலத்​துக்கு முன்கூட்டியே கலைப்பது சரியான நடவடிக்கையாக அமையாது.

ஒருங்​கிணைந்த உள்ளாட்சித் தேர்தலின் அவசியம்: அதே நேரத்​தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறு​வதும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னொரு காலத்தில் நடைபெறு​வதும் தொடராமல் இருப்பது நல்லது. வெவ்வேறு காலக்​கட்​டங்​களில் தேர்தல் நடைபெறு​வ​தால், மூன்று முறை அரசு நிர்வாகம் உள்ளாட்சித் தேர்தலுக்​காகப் பணியாற்றுவது அரசுக்குத் தேவையற்ற சுமை. எனவே, கடந்த முறைபோல அல்லாமல் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒருங்​கிணைந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.

எனவே, 2026 செப்டம்​பரில் முடிவடையும் 9 மாவட்​டங்​களின் ஊரக உள்ளாட்​சிகளோடு சேர்த்து தேர்தலை நடத்துவது சரியான தீர்வாக அமையலாம். அதேபோல் 2027 பிப்ர​வரியில் முடிவடையும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு​களுக்கு ஐந்து மாதங்​களுக்கு முன்பாகத் தேர்தல் நடத்தத் திட்ட​மிட்டால் ஒருங்​கிணைந்த நகர்ப்புற, ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்​கலாம்.

ஏற்கெனவே 1996, 2001, 2006, 2011இல் சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு அடுத்த ஆறு மாதங்​களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் முழுமையாக நடத்தப்​பட்​டதைப் போல மீண்டும் அதேபோல தேர்தலை நடத்த வாய்ப்புக் கிடைக்​கும். அரசியல் கணக்குகள் இல்லாமல் யோசித்தால் இதில் ஒரு முடிவை அரசு எட்ட முடியும்.

ஒருங்​கிணைந்த முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முன்வரும்​பட்​சத்தில் டிசம்​பரில் முடிவடையும் 27 மாவட்​டங்​களின் ஊரக உள்ளாட்சி அமைப்பு​களில் தனி அலுவலர்​களைக் கொண்டு நிர்வகிக்கும் நிலை ஏற்படும். இது அரசியல்​ரீ​தியாக விமர்​சனங்கள் எழவும் வழிவகுக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதைத் தவிர்க்க முடியாது. அதே நேரத்தில் 2016க்கு முந்தைய நடைமுறை​களின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முடிவெடுப்பது தொலைநோக்குப் பார்வையில் சரியாக அமை​யும். இனி, அரசுதான் இதுபற்றித் ​திறந்த மனதுடன் ​வி​வா​தித்து ​முடிவெடுக்க வேண்​டும்.

தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in