அமெரிக்காவில் ‘4 பி’ இயக்கம் | சொல்... பொருள்... தெளிவு

அமெரிக்காவில் ‘4 பி’ இயக்கம் | சொல்... பொருள்... தெளிவு
Updated on
2 min read

அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அந்நாட்டுப் பெண்களிடையே கடுமையான எதிர்ப்பு நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளாகப் பெண்களின் கருக்கலைப்பு உரிமை அங்கு விவாதமாக மாறியுள்ளதே அதற்குக் காரணம்.

வலதுசாரிக் கொள்கையாளரான டிரம்ப், பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என அமெரிக்கப் பெண்கள் நினைக்கின்றனர். பெண்களுக்கு எதிரான டிரம்ப்பின் வெறுப்புப் பேச்சுகளுக்கும் கண்டனம் வலுத்துள்ளது. இவ்வாறு பெண்களுக்கு எதிரான டிரம்ப்பின் தொடர் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் ‘4 பி’ இயக்கத்தை அமெரிக்க இளம் பெண்கள் கையில் எடுத்​திருக்​கிறார்கள்.

‘4 பி’ இயக்கம்: தென் கொரியாவில் பணியிடங்​களில் நிலவும் ஊதியப் பாகுபாடு, திருமண உறவில் பொறுப்பு​களைப் பகிர்ந்​து​கொள்​வதில் பாரபட்சம், பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு, பாலியல் துன்புறுத்​தல்கள் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்கப் பெண்கள் ஒன்றுகூடினர். இதன் தொடர்ச்சியாக, தென் கொரியாவில் ‘4 பி’ இயக்கம் உருவானது. 2010இன் பிற்பகு​தியில் உருவான ‘4 பி’ இயக்கம், 2019இல் தீவிரமடைந்தது.

காதல், திருமணம், குழந்தை, பாலுறவு என்கிற நான்குக்கும் பெண்கள் தயாராக இல்லை என்பதே ‘4 பி’ (4 B - No to Biyeonae, Bihon, Bichulsan, Bisekseu) இயக்கத்தின் அடிப்படை. இவ்வியக்​கத்தைப் பின்பற்றிய கொரியப் பெண்கள், ஆண்களிட​மிருந்து விலக ஆரம்பித்​தார்கள். நாளடைவில் ‘4 பி’ இயக்கம் தென் கொரியப் பெண்களின் உரிமைக் குரலாக மாறியது.

மேலும், அழகியல் சார்ந்த மதிப்​பீடு​களி​லிருந்து விடுபட​வும், தங்கள் சுய அடையாளங்​களைத் தேடிக்​கொள்ளவும் ‘4 பி’ இயக்கத்​துக்குக் கொரியப் பெண்கள் ஆதரவு அளிக்கத் தொடங்​கினர். பெண்ணுரிமைக்காக கொரியாவில் தொடங்கிய ‘4 பி’ இயக்கம் தற்போது அமெரிக்​கா​விலும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்​கி​யுள்ளது.

அமெரிக்​காவில் ஏன்? - அமெரிக்​காவில் 1973இல், ‘ரோ எதிர் வேட்’ (Roe Vs. Wade) வழக்கில், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது திருத்​தத்​தின்படி கர்ப்​பிணிகள் கருக்​கலைப்பு செய்வதற்கு உரிமை உள்ளது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்​பளித்தது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து, எத்தனை வாரங்கள் வரை கருக்​கலைப்​புக்கு அனுமதி அளிப்பது என்பது உள்ளிட்ட விவாதங்கள் தொடர்ச்​சியாக அங்கு எழுந்தன.

இந்நிலை​யில், 2018இல் மிசிசிபி மாகாண அரசு கருக்​கலைப்​புக்குத் தடை விதிக்க வகை செய்யும் சட்டத்தை இயற்றியது. இதன்படி 15 வாரங்​களுக்குப் பிறகு கருக்​கலைப்பு செய்ய முடியாது எனச் சட்டம் கொண்டு​வரப்​பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்கக் கீழமை நீதிமன்றம், மாகாண அரசின் சட்டம் செல்லும் எனத் தீர்ப்​பளித்தது. இதை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்​றத்தில் மேல்முறையீடு செய்யப்​பட்டது.

விசாரணை முடிவில் மிசிசிபி மாகாண அரசின் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து, அமெரிக்​காவில் பல்வேறு மாகாணங்​களில் குறிப்பாக, குடியரசுக் கட்சி ஆளும் மாகாணங்​களில் கருக்​கலைப்​புக்குத் தடை விதிக்​கப்​பட்டது. இதற்கு அமெரிக்கப் பெண்களிடம் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள டிரம்ப், கருக்​கலைப்புத் தடையைத் தீவிர​மாக்குவார் எனப் பெண்கள் அஞ்சுகின்​றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்​சா​ரத்தில் கருக்​கலைப்பு மசோதாவுக்கு ‘வீட்டோ’ (அனுமதி மறுப்பு) அளிக்​கப்​பட்டு, கருக்​கலைப்பு சார்ந்த சட்டத்தை நடைமுறைப்​படுத்து​வதற்கான உரிமை அந்தந்த மாகாணங்​களிடம் ஒப்படைக்​கப்​படும் என டிரம்ப் தெரிவித்தது, பெண்களின் அச்சத்​துக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்​திருக்​கிறது.

மேலும், அமெரிக்க நாடாளு​மன்​றத்தின் இரண்டு அவைகளிலும் குடியரசுக் கட்சி​யினரே பெரும்​பான்​மையாக அங்கம் வகிப்​ப​தால், கருக்​கலைப்புச் சட்டத்தை நீக்க டிரம்ப் குடியரசுப் பிரதி​நி​தி​களுக்கு அழுத்தம் கொடுப்பார் எனப் பெண்கள் அஞ்சுகின்​றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ‘4 பி’ இயக்கத்​துக்கு ஆதரவு தெரிவித்து ‘எனது உடல் எனது உரிமை’ என்கிற முழக்​கத்தை அமெரிக்கப் பெண்கள் எழுப்பி வருகின்​றனர்.

‘4 பி’-யின் தாக்கம்: ஆண்டாண்டு காலமாகப் பின்பற்​றப்​பட்டுவந்த சமூக நெறியி​லிருந்து விலகி, ஆணாதிக்கக் கட்டுப்​பாட்​டிலிருந்து விடுபடு​வதற்கான வாய்ப்பாக ‘4 பி’ இயக்கத்தைப் பெண்கள் பார்க்​கின்​றனர். எதிர்​காலத்தில் தனித்து வாழ நினைக்கும் பெண்கள் பொருளா​தா​ரரீ​தி​யாகத் தங்களை வலுப்​படுத்​திக்​கொள்ள இந்த இயக்கம் உதவும் என்றும் நம்பு​கின்​றனர்.

மறுபக்கம் ‘4 பி’ இயக்கத்தை ஆதரிக்கும் பெண்கள் மீது, ‘சுயநல​வா​தி​கள்’, ‘சமூக விரோதிகள்’ என்கிற விமர்​சனங்​களும் முன்வைக்​கப்​படு​கின்றன. உலக நாடுகளில் மிகவும் குறைவான பிறப்பு விகிதம் கொண்ட நாடாகத் தென் கொரியா உள்ளது. 2023ஐ ஒப்பிடு​கையில் 2024இல் குழந்தை பிறப்பு​வி​கிதம் 0.38% குறைந்​துள்ளது.

அந்நாட்டில் குழந்தைப் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்​து​வருவதன் பின்னால், கொரியப் பெண்கள் முன்னின்று நடத்தும் ‘4 பி’ இயக்கம் காரணமாக இருக்​கலாம் என விமர்​சனங்கள் எழுந்​துள்ளன. மேலும், பெண்ணியவாத இயக்கங்கள் கொரியாவில் ஆண் - பெண் உறவைச் சீர்குலைக்​கின்றன எனத் தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் வெளிப்​படை​யாகவே குற்றம்​சாட்டி இருந்தது குறிப்​பிடத்​தக்கது.

அழுத்​தங்​களைத் தளர்த்​துமா? - பெண்களுக்கான உரிமைகளை நீண்ட போராட்​டங்​களின் மூலம் பெண்ணிய இயக்கங்கள் வரலாற்றில் சாத்தி​யப்​படுத்​தி​யிருக்​கின்றன. அந்த வகையில் 21ஆம் நூற்றாண்டின் பெண் உரிமைக் குரலாக ‘4 பி’ இயக்கம் கவனம் பெற்றுள்ளது. இருப்​பினும், ‘பெண்கள் மீது சமூகம் சுமத்​தி​யிருக்கிற அழுத்​தங்​களைத் தளர்த்த ‘4 பி’ போன்ற இயக்கங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி​யுள்ளது.

அப்பயணம் பெண்களுக்கான சம உரிமையைப் பெற்றுத் தருவதுடன், பொருளா​தா​ரரீ​தியாக அவர்களைப் பலப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது’ எனப் பெண்ணுரிமை​யாளர்கள் கருதுகின்​றனர். சமூக அளவில் எழும் எதிர்ப்பு​களுக்கு இப்படியான இயக்​கங்கள் ​முகங்​கொடுக்கும் ​விதத்​தில்​தான் இவற்றின் எதிர்​காலம் அமையும்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in