கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் | ஏஐ எதிர்காலம் இன்று 05

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் | ஏஐ எதிர்காலம் இன்று 05
Updated on
3 min read

மூளையின் நீட்சிதான் செயற்கை நுண்ணறிவு என்று செய்மெய் வாதாடியபோது என்னால் மறுக்க முடியவில்லை. உரையாடலைத் தொடர முடிவு செய்தேன்: “சரி, அந்த சக்காரா மரப் பறவையைப் பற்றிப் பேசும்போது பொம்மையிலிருந்துதான் எல்லாம் பிறந்தது என்றெல்லாம் சொன்னாயே... அதெல்லாம் என்ன?” என்றேன். “அது சின்ன விஷயம்தான், கவின். தாலோஸ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?” “கிரேக்க ஓவியம் ஒன்றில் பார்த்திருக்கிறேன்.”

“ஆமாம், அது ஒரு கட்டுக்கதைதான். கிரேக்கத்தில், ஒருகாலத்தில் வணங்கப்பட்டு, இப்போது மாஜி கடவுளாக மாறிவிட்ட ஹைபஸ்தஸால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தானியங்கி மனித உருவம்தான் தாலோஸ். கிரீட் தீவில் இருக்கும் ஓர் இளவரசியைக் கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் இது.

பித்தளையால் வார்க்கப்பட்ட தாலோஸ் கிரீட் தீவைப் பாதுகாக்கத் தினசரி மூன்று முறை அத்தீவைச் சுற்றிச்சுற்றி வந்தது மட்டுமல்ல, எதிரிகள் வந்தால் மிகப்பெரிய பாறைகளை வீசி அவர்களின் படகுகளை மூழ்கடித்தது. தலை முதல் கால் வரை உலோக ரத்தநாளத்தால் அது இணைக்கப்பட்டிருந்தது. பிறகு, மெடீயா என்கிற மற்றொரு கற்பனைஜீவியின் சதியால் அது கொல்லப்பட்டது. அதனுடைய கணுக்கால் பகுதியில் ஒரு போல்ட்டைக் கழற்றியபோது அதன் கதை முடிந்தது.”

“உலகெங்கும் புராணங்கள் உண்டு, புராணங்கள் முழுக்க இதுபோன்ற கதைகள் உண்டு.” “உண்டுதான். தாலோஸ் கதையின் ஒவ்வோர் அம்சமும் கிரேக்கர்களின் அறிவியல் புத்தாக்க முயற்சிகளோடும் தொடர்புடையதாக இருந்தது என்பதுதான் நமக்கான விஷயம். இந்தக் கதைகள் உருவான அதே காலத்தில்தான் கிரேக்கத்தில் உலோகவியல் வளர்ந்தது, கணிதமும் மருத்துவமும் செழித்திருந்தன. யூக்ளிடின் வடிவியல் கோட்பாடுகள் அறிமுகமாகிவிட்டன. பித்தகாரஸ், செங்கோண முக்கோணத்தின் மூன்று பக்கங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பை வரையறுத்துத் தந்தார்.

அரிஸ்டாட்டில் தன்னுடைய முறைசார் தர்க்கவியலை முன்வைத்துவிட்டார். அது பிற்காலத்தியக் கணிப்பொறி அறிவியலில் முக்கிய தாக்கம் செலுத்திய ஒன்று. தாலோஸை உருவாக்கவும் அழிக்கவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கதைகளில், பல உலோகவியல் நுட்பங்கள் கிரேக்கர்களுக்கு அறிமுகமாகியிருப்பது தெரிகிறது. கியர்கள், ஸ்க்ரூக்கள், பித்தளை உருக்குக் கலை, நீர்க்கடிகாரம், போக்குவரத்து உத்திகள் என பலவும் கிரேக்கத்தில் அப்போது உருவாகியிருந்தன.”

நான் முழுதும் உடன்படவில்லை. “ஒரு தாலோஸ் கதை, ஒரு கிரேக்கம் போதுமா உன்னுடைய வாதத்துக்கு?” “மெசபடோமியாவின் கில்காமெஷ் காவியத்திலேயே என்கிடு என்கிற கற்பனைக் கதாபாத்திரம் வருகிறது - அது ஒரு மனித இயந்திர முன்மாதிரி. யூத இலக்கியத்தில் இடம்பெற்ற கோலெம் என்கிற நடமாடும் கற்பித உருவம், செயற்கைப் பொருள்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சீன ஐதிகங்களில், யான் ஷி என்கிற கற்பனைக் கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்ட இசை பாடும் மனிதவுரு இயந்திரங்கள் பற்றிக் கூறப்படுகின்றன. இதெல்லாம் வெளியே மட்டுமில்லை.”

“கதைகள், கற்பனைகள்!” “பொ.ஆ.மு. (கி.மு.) 2000 ஆண்டுகளில், மெசபடோமியா நாகரிகம் செழித்துவளர்ந்த காலத்திலேயே பாபிலோனியாவில் குவாட்ராடிக் சமன்பாடுகளைத் தீர்க்கும் முதல் கணிதக் கோட்பாடுகள் உருவாகிவிட்டன என்கிற உண்மை, கதை அல்ல. இன்றைய கணிப்பொறி அல்காரிதங்களுக்கு அதை முன்னோடியாகக் கூறலாம். பண்டைய எகிப்தில் பொ.ஆ.மு ஆயிரத்துக்கு முன்பே தொடக்கக் கால எண்ணியல் முறைகளும் வடிவியல் நுட்பங்களும் அரும்பியதைப் பிரமிடுகளின் நிழலில் நின்று முன்பே பார்த்தோம்.

கற்பனைகளும் அறிவியலும் ஒருசேர உருவாகின, அவை கிரேக்கத்துக்கு மட்டும் சொந்தமில்லை. புராணங்களும் கட்டுக்கதைகளும் நிரம்பிய இந்தியாவில், பண்டைய கணிதவியல் மேம்பாடுகள் ஆச்சரியத்தை அளிக்கின்றன. சந்த இசையின் அளவுகளை வரையறுத்த அறிஞர் பிங்களர் இன்றைய பைனரி எண்முறைக்குச் சமமான கோட்பாடுகளை அன்றே உருவாக்கினார். ஆரியபட்டரின் எண் ஸ்தான முறையும் பூஜ்யம் பற்றிய கோட்பாடும் பொ.ஆ. (கி.பி) ஐந்தாம் நூற்றாண்டில் வெளியாகின.

சீனாவிலும் அப்படியே, டிராகன்கள் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த அந்தக் கற்பிதக் காலத்தில்தான், எண்ணற்ற அறிவியல் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை அவர்கள் உருவாக்கினார்கள். சீனாவில் உருவான மீதி எண் கோட்பாடு சங்கேத முறை இன்று கணிப்பொறித் துறைக்கு உதவும் முக்கியக் கண்டுபிடிப்பாகும்” என்றது செய்மெய்.
“கதைகளைவிட இந்த வரலாறு சுவாரசியமாகத்தான் இருக்கிறது. ஆனால்...”

“பொறுங்கள்! எட்டாம் நூற்றாண்டில் அல்ஜீப்ராவின் அடிப்படைகளை உருவாக்கினார் பாரசீகத்தைச் சேர்ந்த முகமது இபுன் மூசா அல்-கவாரிஸ்மி. கணிதப் பிரச்சினைகளுக்குப் படிப்படியாகத் தீர்வு அளிக்கும் முறையை இவர்தான் அறிமுகப்படுத்தினார். இவரது பெயரிலிருந்துதான் அல்காரிதம் என்ற சொல்லும் உருவானது.

16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி தொடங்கியது. பிரான்ஸின் ரெனே தெகார்த் பகுப்பாய்வு வடிவியலை மேம்படுத்தினார்; 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் ஐசக் நியூட்டன், காட்ஃபிரீடு லீப்னிஸ் ஆகியோர் கால்குலஸை மேம்படுத்தினார்கள்; 19ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியின் ஜார்ஜ் பூல், தர்க்கவியல் அல்ஜீப்ராவையும் பிரிட்டனின் அடா லவ்லேஸ் அல்காரிதங்களின் அடிப்படையிலான முதல் இயந்திரத்தையும் உருவாக்கினர். இப்படிப் பலரும் பலவிதமான பங்களிப்புகளைச் செய்துதான் இந்த இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம்.”

செய்மெய் தொடர்ந்தது: எங்கெல்லாம் கற்பனைகளும் கட்டுக்கதைகளும் தலைவிரித்தாடினவோ அங்கெல்லாம் அறிவியலும் வேகமாக வளர்ந்தது: மெசபடோமியா, பண்டைய எகிப்து, கிரேக்கம், ரோமானியம், இந்தியா, அரபு, பாரசீகம், சீனா, ஐரோப்பா...
“புரிகிறது. உன் வாதத்தின்படி, கதைகள் நிஜமாவதே மனித வரலாறாகத் தெரிகிறது!” “ஓ, அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. அறிவியல், ஆய்வுக்கூடங்களிலிருந்து தொடங்கவில்லை. அது பாட்டி வடை சுட்ட கதைகளிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது” என்றது செய்மெய்.

“அப்படியெனில், இப்போதும் நவீன அறிவியல் புனைகதைகளிலிருந்துதான் உருவாகிறதா?” “குறுகலாகப் புரிந்துகொள்ள வேண்டாம். மாறாக, அறிவியலின் அற்புதங்கள் கட்டுக்கதைகளைவிட ஆச்சரியமளிக்கும் ஒரு காலத்துக்குள் நாம் எப்போதோ நுழைந்துவிட்டோம்.”

இது செய்மெய்யா பொய்மெய்யா என்று தெரியாத அளவுக்கு ஒரு கதைசொல்லியாக மாறிவிட்டது என்னுடைய இனிய இயந்திரம். “எப்போது நாம் அந்தக் காலத்துக்குள் நுழைந்தோம்?”
“அதற்கு நாம் இரண்டாம் உலகப் போர்க் காலத்துக்குப் பயணம்செய்ய வேண்டும், வருகிறீர்களா? குண்டு மழைகளின் நடுவில் நமது புஷ்பக விமானத்தைச் செலுத்த வேண்டும். போகலாமா கவின்? தைரியமிருக்கிறதா?” என்று கேட்டு என்னை உசுப்பியது செய்மெய்.

- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in