

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் பல படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார் பட்டு எம்.பூபதி. பழம்பெரும் தமிழ் இலக்கியங்கள், சமகாலத் தமிழ்ப் படைப்பாளிகள் என்று இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்களின் பட்டியல் நம்மை அசர வைக்கிறது. சாகித்திய அகாடமியின் ஆஸ்தான மொழிபெயர்ப்பாளர் என்று சொல்லத்தக்க அளவில் இவர் பணி விரிந்திருக்கிறது.
ராஜம் கிருஷ்ணனின் ‘வேருக்கு நீர்’, கு.அழகிரிசாமி சிறுகதைகள், லா.ச.ரா.வின் ‘சிந்தா நதி’, சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’, கனிமொழியின் கவிதைகள், அசோகமித்திரன், ஜெயங்கொண்டான் ஆகியோரின் படைப்புகள் மட்டுமின்றி, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி முதலான பழம்பெரும் இலக்கியங்களையும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்திருக்கிறார். பள்ளியில் படிக்கும்போதே குறுந்தொகைப் பாடல் ஒன்றை மொழிபெயர்த்துள்ளார். மொழிபெயர்ப்புக்காகத் திசை எட்டும், தமிழ்ப் பேராயம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மொழிபெயர்ப்பில் மட்டுமின்றி புனைவு இலக்கியத்திலும் இவர் ஈடுபட்டிருக்கிறார். இவரது சிறுகதைகள் ‘ருசிபேதம்’ என்கிற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன. புத்தக வடிவம் பெறாத கட்டுரைகள் ஏராளம் இருக்கின்றன. அவருடனான உரையாடல்:
மொழிபெயர்க்க எவை முக்கியம்?
மொழிபெயர்ப்புக்கு முன்னதாக மூன்று அம்சங்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். மூல ஆசிரியரின் மனோபாவத்தைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். அசல் படைப்பின் ஊடாக ஓடும் உணர்வின் இழைகளைப் பிடித்துக்கொள்ள வேண்டும். மூல ஆசிரியர் சொல்ல வருவதை முன்னிறுத்த வேண்டும். இந்த மூன்றும் அவசியம்.
கவிதைகளை எப்படி மொழிபெயர்க்கிறீர்கள்?
முதலில் அந்தக் கவிதையில் நாம் திளைக்க வேண்டும். அப்போதுதான் மொழிபெயர்க்க முடியும். தல் என்கிற வார்த்தையை நாம் ரொம்பவே கொச்சைப்படுத்திவிட்டோம். காதல் வேறு... காமம் வேறு. காமம் உடற்கவர்ச்சி. எதிர்ப்பாலின ஈர்ப்பு என்பதால் உண்டாவது. காமத்தில் காதல் இருக்கலாம் ஆனால், காதலில் காமம் வரவே வராது. தசரதன் ராமன் மேல் கொண்டது காதல். ராமன் குகன் மீது கொண்டது காதல். கடவுள் மீதும் காதல் வரும். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்று தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பாடியிருப்பதைக் கவனிக்க வேண்டும். இது புரியாமல் காமத்தைக் காதல் என்றும் காதலைக் காமம் என்றும் சொல்லிப் பலரும் பிதற்றுகிறார்கள். கலிங்கத்துப் பரணி கடைத் திறப்புப் பகுதியை நான் மொழிபெயர்த்தேன். அவ்வளவும் காமக் கவிதைகள். இதில் காதலும் இருக்கிறது.
சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாவலில் மதுரை வட்டார வழக்குச் சொற்கள் பல இடங்களில் வருகின்றன. அதை மொழிபெயர்ப்பதில் என்ன சவால்களை எதிர்கொண்டீர்கள்?”
நான் பிரதியுடன் மதுரைக்கே போய்விட்டேன். அந்த வட்டார மக்களுடன் பேசி வழக்குச் சொற்களின் அர்த்தத்தை உள்வாங்க ரொம்பவும் மெனக்கெட்டேன். சு.வெங்கடேசனும் பல சொற்களுக்குப் பொருள் கூறி உதவினார். அகில இந்திய அளவில் இந்த மொழிபெயர்ப்புக்கான பாராட்டுகள் தொடர்ந்து வருகின்றன. வெங்கடேசனும் படித்துப் பாராட்டினார்.
மூல ஆசிரியர் அளவுக்கு மொழிபெயர்ப்பாளர்கள் கொண்டாடப்படுவதில்லையே ஏன்?
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.. கா.ஸ்ரீ.ஸ்ரீ. இல்லாவிட்டால் காண்டேகர் தமிழுக்குக் கிடைத்திருப்பாரா? த.நா.சேனாபதி, த.நா.குமாரஸ்வாமி மொழிபெயர்த்த வங்க நாவல்களை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியுமா? ரஷ்ய நாவல்களை மொழி பெயர்த்த ரா.கிருஷ்ணய்யா, பூ.சோமசுந்தரம், நா.தர்மராஜன் உள்ளிட்டோர் அப்படியே ரஷ்ய மாந்தர்களை நம் கண் முன் நிறுத்தவில்லையா? க.நா.சு.வின் ஸ்வீடிஷ் நாவலான ‘நிலவளம்’ எவ்வளவு அருமையான மொழிபெயர்ப்பு? ஒவ்வொரு நல்ல மொழிபெயர்ப்பாளரும் மூல ஆசிரியருக்கு இணையான படைப்பாளிதான்!
- எழுத்தாளர்
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com