

எழுத்தாளர் சுந்தர ராமசாமி ‘சீதை மார்க் சீயக்காய்த்தூள்’ (1959) என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். குமாரவேலு பணிக்கர், தனது சீதை மார்க் சீயக்காய்த்தூளை உலகம் முழுக்கக் கொண்டுசெல்ல சீதையையே விளம்பரத் தூதராகப் பயன்படுத்த நினைக்கிறார். ஓவியரான சுப்பையாவிடம் சீதை படம் வரையும் பணியை ஒப்படைக்கிறார். ஒரு படம் வரைந்தால் ஐந்நூறு ரூபாய். பெரிய தொகைதான். நன்றாக இருந்தால் மேலும் இருபது படங்கள் வரைய உத்தரவு.
சுப்பையா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். தன் முழுத் திறனையும் பயன்படுத்தி, ஒரு மாதம் முயன்று சீதை படத்தை வரைந்து முடிக்கிறார். சுப்பையாவுக்கும் அவர் மனைவி சுப்பம்மாளுக்கும் சீதையின் ஓவியம் சிறப்பாக வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. குமாரவேலுக்குப் படம் திருப்தியில்லை. ‘சீதெ ரொம்பவும் இளச்சாப்லெ தெரியுதில்லே’ என்கிறார். ‘காட்டுலெ இல்லே இருக்கா சீதெ’ என்ற சுப்பையாவின் பதில் அவருக்குச் சரியான பதிலாக இல்லை.
ராவணனின் நவீன வடிவம்தான் குமாரவேலு என்பதைக் கதை திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறது. குமாரவேலு வணிகர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் ஓர் உதிரி. அவரே அக்குழுவிற்கான பிரதிநிதியாகவும் இருக்கிறார். ஆங்காங்கே தொங்கவிடப்படும் சீதை ஓவியத்தின் மீது நுகர்வோரின் கவனத்தைக் கண நேரத்தில் ஈர்க்க வேண்டும். கவலை தோய்ந்த சீதையின் உருவம் அதற்குச் சரியாக இருக்காது. சீதை ஒரு தொன்மம். அந்தப் பெயரே சில மதிப்பீடுகளைப் பெற்றிருக்கிறது. சீதைக்கு நீளமான கூந்தல் உண்டென்று ராமாயணம் கூறுகிறது. இது கூந்தலுக்கான சீயக்காய் விளம்பரம். குமாரவேலு தன்னை வணிகராக மட்டும் முன்னிறுத்திக்கொண்டு சீதையின் ஓவியத்தைப் பார்க்கவில்லை; ஒரு நுகர்வோராகவும் அந்த ஓவியத்தைப் பார்க்கிறார். நுகர்வோரின் மனநிலையைத்தான் அவர் பிரதிபலிக்கிறார். பெண்களை நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் மனநிலை மாறிவிடவில்லை; மாறாக அதிகரித்திருக்கிறது.
ராமனுடனான திருமணத்திற்குப் பிறகு சீதை மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்துவிடவில்லை. சு.ரா. இந்த விமர்சனத்தையும் சுப்பம்மாள் வழியாக எழுப்புகிறார். புராண காலத்துச் சீதையாக இருந்தாலும் நவீன காலத்து நடிகையாக இருந்தாலும் நுகர்வுக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை அவர்கள் பெண்கள். அவ்வளவுதான். இந்த விளம்பர யுகம் அவர்களை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதுதான் முக்கியம். காட்சி ஊடகங்களில் அன்றாடம் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் பெண்கள்தாம் அதிக அளவில் இடம்பெறுகிறார்கள். திரும்பத்திரும்ப வெவ்வேறு வடிவங்களில் அவர்களது உடல்கள்தாம் அலையலையாக எழும்பி வருகின்றன. சு.ரா. இதை அன்றே கணித்து எழுதியிருக்கிறார். ராவணன் இறந்துவிடவில்லை. அவர் வெவ்வேறு பெயர்களில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார். இதனையும் இக்கதை கவனத்தில் கொண்டுள்ளது.
‘சீதையில்லாத உலகத்திலெ திரும்பவும் பிறந்து சீயக்காய்த்தூள் யாவாரம் பண்ணிக்கிட்டு இருக்காரு அவ்வளவுதான்’ என்று சு.ரா.வும் இதனை உறுதிப்படுத்துகிறார். ‘கரிய மேகத்தை வெட்டிக் கட்டியது போன்ற கூந்தல்’ என்று சீதையின் கூந்தலைக் கம்பர் வர்ணிக்கிறார். சீயக்காய் விளம்பரத்திற்கு இந்தக் கூந்தல்தானே பிரதானம். ஆனால், குமாரவேலுவின் கவனம் ஏன் கூந்தல்மீது செல்லவில்லை. இதுதான் நுகர்வுக் கலாச்சாரம்.
சு.ரா. தமிழ்ப் புனைகதை வரலாற்றில் ஓர் உடைப்பை ஏற்படுத்தியவர். அவரது அங்கத மொழி தமிழ்ச் சிறுகதையின் முகத்தை மாற்றியமைத்தது. அந்த மொழிக்குள் ஊடாடும் அறச்சீற்றம் தனித்துவமானது; தர்க்கமுடையது. ‘சீதை மார்க் சீயக்காய்த்தூள்’ என்கிற இக்கதையில், சீதை என்கிற தொன்ம கதாபாத்திரம்கூட வணிக மதிப்புடையது; அதுவொரு நுகர்வுப் பொருள் என்பதை மூன்றே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு காத்திரமாக உரையாடியிருக்கிறார் சுந்தர ராமசாமி.
- உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramesh5480@gmail.com