

மாஞ்சோலையைச் சேர்ந்த சாமுவேல் அற்புதராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ளது ‘மாஞ்சோலை’ ஆவணப்படம். பா. இரஞ்சித்தின் நீலம் அமைப்பு இதைத் தயாரித்துள்ளது. நூற்றாண்டு வாழ்க்கை 67 நிமிடங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வெளியிலிருந்து பிரபலங்கள் எவருமில்லாமல், அங்குள்ள தொழிலாளிகளும், எஸ்டேட்வாசிகளும் தங்களின் வாழ்வனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். அதுவே நம்மை ஒன்றிப்போகவைக்கிறது.
காட்டைத் திருத்தி எஸ்டேட்டை உருவாக்கியது, அதற்காக இடைத்தரகர்களான கங்காணிகள் மூலமாக மக்களைக் கொண்டுசென்றது, தேயிலை, காப்பி, ஏலம், மிளகு, கொய்னா என பணப் பயிர்களை விளைவித்தது, குடியிருப்புகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை, அஞ்சல்நிலையம், ரேஷன் கடை, வழிபாட்டுத் தலங்கள், கல்லறைகள் என முழு ஊராக மாற்றப்பட்டது, நிறுவனத்தின் சித்திரவதைகள் என எஸ்டேட் குறித்த சகலமும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தாங்கள் பிறந்து வளர்ந்த எஸ்டேட் இனி இல்லாமல் ஆக்கப்பட்டுவிடுமோ? தங்கள் மண்ணிலிருந்து தாங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விடுவோமோ என்கிற பதற்றம், படத்தில் இடம்பெற்ற ஒவ்வொருவரிடமும் வெளிப்படுகிறது. தங்களின் கதைகளை எளிய மொழியில் பேசும் அவர்களில் எவரும் ஒரு சொட்டுக் கண்ணீரைக்கூட வடிக்காமல், அதேவேளையில் நம் மனத்தில் பெரும்பாரத்தை ஏற்றுகிறார்கள்.
பழக்கப்பட்டிராத அதீதக் குளிர், அடிக்கடி பெய்யும் அடைமழை எனப் பல்வேறு சிக்கல்களின் காரணமாக மலையிலிருந்து தப்பித்து வெளியேற மாட்டார்கள் எனும் நோக்கத்தில் நிலமற்ற, பட்டியலின, விளிம்புநிலை மக்கள் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து மலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
நகரப்பகுதியிலிருந்து மூன்று மணி நேரத் தொலைவில் அமைந்திருப்பதால் வெளியுலகத் தொடர்பு அனைத்தும் சிறிதுசிறிதாக முற்றிலும் அறுந்துபோனதன் காரணமாய், அங்கு உள்ளவர்களுக்கு எஸ்டேட்டே சொந்த ஊராக மாறிப்போனது. அங்கு உள்ளவர்களைத் தவிர வெளி ஆட்கள் யாரும் அவ்வளவு எளிதாக அங்கு சென்றுவிட முடியாத சூழல் நிலவுவதால், சமவெளிப் பகுதியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தனித்த வாழ்க்கை முறையைக் கொண்டது. அதை ஆவணப்படம் தெளிவாகச் சித்திரித்துள்ளது.
நான்கு தலைமுறைக்கு முன்னர் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள், தற்போதும் கூலிகளாகவே வெறுங்கையுடன் வெளியேற்றப்பட இருக்கின்றனர். நிறுவனம் அவர்களுக்கு நிர்ணயித்துள்ள அதிகபட்ச இழப்பீடு மூன்றேகால் லட்சம் ரூபாய். இந்தத் தொகையினையும் மொத்தமாகப் பார்க்காதவர்கள் அங்கு பலர் உண்டு என்றாலும், வெளியேற்றப்பட்டால் இந்த சொற்பத் தொகையினை முதலீடாகக்கொண்டே அவர்களது எதிர்காலத்தினை உருவாக்க வேண்டிய அவலநிலை உள்ளது. தேயிலை சார்ந்தது தவிர, வேறு வேலை பார்க்கத் தெரியாததுடன், சமவெளியில் வாழ்ந்து பழக்கம் இல்லாதவர்கள் இவர்கள். வேறு போக்கிடமின்றி ஒவ்வொரு நாளையும் பெரும் பீதியுடன் கழித்துவருகின்றனர் என்பது ஆவணப்படத்தில் பேசும் மாஞ்சோலைக்காரர்கள் வழியாகத் தெரியவருகிறது.
இதுகாறும் மனித – விலங்கு எதிர்கொள்ளல் பெரிய அளவில் ஏற்படாத மாஞ்சோலைப் பகுதிதான் அதிக மழைபொழியும் இடமாகவும், அதே வேளையில் இழப்புகளை உண்டாக்கும் வகையிலான இயற்கைச் சீற்றங்கள் இல்லாத பகுதியாகவும் இருக்கிறது. அதற்குக் காரணம், அந்த மக்கள் என்கிற அரிய செய்தியையும் இந்த ஆவணப்படம் சொல்கிறது.
நூறு ஆண்டுகளாக வனத்தில் வாழும் மக்களை அங்கேயே தொடர்ந்து வாழவைக்க வேண்டும் என்பதே எம்மக்களின் கோரிக்கை என்பதையும் இந்தப் படம் உணரவைக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, வால்பாறை, கொடைக்கானல், மேகமலை, மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகள். அங்கு விளைவிக்கப்படும் தேயிலையும் காய்கறிகளுமே சமவெளியில் வாழும் நமக்கு உணவாகக் கிடைக்கின்றன. இதர அனைத்து மலைகளும் அப்படியே நீடித்துவர எளிய மக்கள் வாழும் மாஞ்சோலையை மட்டும் முழு வனமாக்கியே தீருவோம் என்பது எந்த வகையில் நியாயம் என்கிற கேள்வியையும் இந்தப் படம் எழுப்புகிறது.
- வழக்கறிஞர்
தொடர்புக்கு: robertckumar@gmail.com